உயர்கல்வி பயில உதவும் அரசின் உதவித்தொகை

உயர்கல்வி பயில உதவும் அரசின் உதவித்தொகை
Updated on
3 min read

பிளஸ் டூவுக்குப் பிறகு எடுக்கும் முடிவுதான் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியைப் பெறுவதில் பொருளாதாரத் தடைகள் நிச்சயமாக இருக்கக் கூடாது.

முன்பு வசதியானவர்கள் மட்டும் படிக்கக்கூடியதாக இருந்த உயர்கல்வி, இன்று எல்லா தரப்புக்கும் சாத்தியமாகியிருக்கிறது என்றால், அரசு அளிக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகளும் சலுகைகளும் அதற்கு முக்கியக் காரணம். அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகைகள் என்னென்ன?

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகளைப் பெற நேஷனல் ஸ்கால்ர்ஷிப் போர்ட்டலில் (www.schlorships.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். இதில் பல கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் உள்ளன. இதில் எந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு உங்களுக்குத் தகுதி உள்ளது என்பதை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

சிஎஸ்எஸ் கல்வி உதவித்தொகை

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப் (சிஎஸ்எஸ்) திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.10,000 வழங்கப்படும். பிறகு உயர்கல்வி பயிலும்போது ஒவ்வொரு பருவத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் இத்திட்டத்தில் தொடர்ந்து ரூ.10,000 பெறலாம்.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை பெறலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உயர்கல்வி பயிலும்போது பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். மாணவர்கள் முதலில் விண்ணப்பித்துவிட்டுப் பிறகு கல்லூரி மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை

இத்திட்டத்தின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் திருப்பி அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியாக இருந்தால் மாதம் ரூ.1,600 வரை ஊக்கத்தொகையும், மற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியாக இருந்தால் மாதம் ரூ.750 வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இச்சலுகையைப் பெற மாணவர்கள் நேஷனல் ஸ்கார்லர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது மாற்றுத் திறனாளி சான்றிதழ், பெற்றோர் வருமானச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான சான்றிதழ், பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நல்ல மதிப்பெண்கள் பெறும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கருவிகள் வாங்கு வதற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் Disability allowance என்கிற ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) சார்பாக பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ‘சாக்க்ஷம்’ என்ற திட்டத்தின் மூலம் ரூ.30,000 கல்விக் கட்டணம் செலுத்தப்படுகிறது.

அத்துடன் மாதம் ரூ.2000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவரின் குறைபாடு 40 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு AICTE போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான உதவித் தொகை

ராணுவ வீரர்களின் வாரிசு வாரிசுகள் உயர்கல்வி பயில மத்திய அரசின் ‘கேந்திரிய சைனிக் வாரியம்’ சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம்மாணவர்களுக்கு மாதம் ரூ.2000, மாணவி களுக்கு மாதம் ரூ.2250 பயிலும் காலம்வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இச்சலுகையைப் பெற பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இச்சலுகையைப் பெற மாணவர்கள் (www.ksb.gov.in) என்கிற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரகதி பெண் இலவச கல்வித் திட்டம்

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் பயிலும் மாணவிகளுக்கு ‘பிரகதி’ என்கிற திட்டத்தின் மூலம் ரூ.30,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு AICTE போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான இலவச உயர்கல்வித் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் (Tuition fees) முழுவதுமாக வழங்கப்படுகிறது. இதற்குப் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்குள் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து உயர் கல்விப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு போலவே தமிழக அரசின் சார்பிலும் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான சலுகைகள்

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் சேரும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், இந்த மாணவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரி களாக அங்கீகரிக்கப்பட்டு கல்விக் கட்டணச் சலுகையைத் தமிழக அரசு வழங்குகிறது.

முதல் தலைமுறைப் பட்டதாரிக்கான கட்டணம் அரசு சார்பில் அவர்கள் படிக்கும் கல்லூரியிலே செலுத்தப்பட்டுவிடும். அதாவது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தலைமுறைப் பட்டதாரி கட்டணம் ரூ.25,000 அரசு சார்பில் செலுத்தப்படும். எஞ்சிய ரூ.25,000 மட்டும் மாணவர்கள் செலுத்தினால் போதும்.

ஒற்றைச் சாளர முறையில் அரசு, அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டில் சேரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளும் இக்கல்விக் கட்டணச் சலுகை பெறலாம்.

இச்சலுகையைப் பெற குடும்பத்தில் யாரும் இதுவரை பட்டப்படிப்பு படிக்கவில்லை என்கிற உறுதிமொழியை மாணவரும் பெற்றோரும் அளித்துக் கையெழுத்திட வேண்டும். ஆனால், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல். சிவில், பார்மசி போன்ற டிப்ளமோ படிப்புகள் பட்டப் படிப்பிற்கு இணையாகக் கருதப்படாததால், இது போன்ற பட்டயப்படிப்பு படித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இக்கல்விச் சலுகையைப் பெறலாம்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மைப் பிரிவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இச்சலுகை அரசு ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயில்வோருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இச்சலுகையில் ஒவ்வோர் ஆண்டும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.8,100, மற்ற மாணவர்களுக்கு ரூ.4650 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்குப் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்கல்வி பயின்றால் மாநில அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.13,750, மற்ற மாணவர்களுக்கு ரூ.6,600 வரை வழங்கப் படுகிறது. மேலும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தைச் சார்ந்த கல்வி உதவித்தொகைத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் சார்ந்த கல்வி உதவித்தொகை, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித் தொகைத் திட்டம், விளையாட்டு துறை சார்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் எனப் பல கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

கட்டுரையாளர்: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர்

தொடர்புக்கு: dean@ccet.org.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in