ஏற்றம் தரும் தரவு அறிவியல் படிப்பு

ஏற்றம் தரும் தரவு அறிவியல் படிப்பு
Updated on
3 min read

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாகப் பொறியியலும் மருத்துவமும் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. பொறியியல், மருத்துவம் மட்டுமல்லாமல்; மாணவர்களின் விருப்பத் தேர்வாக அறிவியல் படிப்புகளும் கலை படிப்புகளும் இன்று உள்ளன. ஒருவகையில் இது ஒரு ஆரோக்கிய மாற்றமே.

நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என்ன தேர்வுசெய்து படித்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு முன் பல புதிய கல்வி வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. அத்தகைய புதிய கல்வி வாய்ப்புகளில், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களைப் பெரிது ஈர்க்கும் படிப்பாகத் தரவு அறிவியல் சார்ந்த படிப்புகள் உள்ளன.

மாணவர்களின் தேர்வு

தரவு அறிவியல் துறைக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அறிவை அனைவருக்கும் எட்டக்கூடியதாக மாற்றும் நோக்கில் இந்தியாவில் ஐஐடி, ஐஐடிஎம், ஐஐஎஸ்சி, என்ஐஎஸ்எம்உள்ளிட்ட பல கல்விநிறுவனங்கள் தரவு அறிவியல் சார்ந்த பல புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்து உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் அத்தகைய படிப்புகளைப் பெரும் அளவில் தேர்ந்தெடுத்துப் படித்தும் வருகின்றனர்.

தரவு என்பது என்ன?

நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாகத் தரவுகள் இருந்துவருகின்றன. கணினி போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் உருவாவதற்கு முன்னரே தரவுகள் மனித பயன்பாட்டிலிருந்துள்ளன. அடிப்படையில், தரவுகள் என்பது ஒருவிதக் குறிப்புகள். அவை எண்களாகவோ, சொற்களாகவோ இருக்கலாம்.

அளவீடுகள்

மக்கள்தொகை, பண மதிப்பு, கல்வியறிவு, கரோனா பாதிப்பு எண்ணிக்கை, பரவல் வேகம், நாடுகளின் வெப்பநிலை, கடலின் ஆழம், மலையின் உயரம், ஒளியின் வேகம், ஈர்ப்பு விசை, எடை, ஒலியின் அதிர்வு உள்ளிட்ட அனைத்து அளவீடுகளும் தரவுகளுக்குள் அடங்கும்.

ஆய்வுகளின் அடிப்படை

உலக அளவில் மேற்கொள்ளப்படும் எந்த ஓர் ஆய்வுக்கும் தரவுகளே அடிப்படை. இந்தத் தரவுகளின் தொகுப்பைக் கொண்டே பல கண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்தும் வருகின்றன.

அதிகரிக்கும் செயல்திறன்

தரவுகளின் பலம், இன்று வணிகத்துக்கு மட்டுமல்லாமல்; அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும் முதுகெலும்பாக உள்ளது. சொல்லப் போனால், அரசாங்கத்தின் செயல்பாடும், செயல்திறனும், அரசாங்கத்தின் வசம் இருக்கும் தரவுகளின் தரத்தைப் பொறுத்தே அமைகின்றன.

முக்கியத்துவம்

இன்றைய நவீன யுகத்தில், இந்த உலகில் நம்முடைய அன்றாட வாழ்வின் போக்கையும் இயல்பையும் தரவுகளே நிர்ணயிக்கின்றன. இதன் காரணமாகவே, தரவு அறிவியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறையாகக் கருதப்படுகிறது.

தரவு அறிவியலின் நிலைகள்

  • உலகம் முழுவதும் உற்பத்தியாகும் தரவுகளை முறையாகத் தொகுத்து, ஒருங்கிணைப்பது தரவு அறிவியலின் முதல்நிலை.
  • ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளிலிருந்து பயனுள்ளவற்றைத் தேர்ந்தெடுப்பது அதன் இரண்டாம்நிலை.
  • இந்த பயனுள்ள தரவுகளிலிருந்து புதிய தரவுகளை எதிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவது தரவு அறிவியலின் மூன்றாம் நிலை.

இந்த மூன்று நிலைகளில் இருக்கும் நேர்த்திக்கும், அதன் ஒருங்கிணைப்பில் இருக்கும் துல்லியத்துக்கும் உதவும் வகையில் இன்றைய தரவு அறிவியல் சார்ந்த படிப்புகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

யார் படிக்கலாம்?

கணக்குகளிலும் எண்களிலும் ஆர்வம் கொண்டவர்கள் இந்தத் தரவு அறிவியல் படிப்புகளை எளிதாகப் படிக்க முடியும். கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், பொறியியல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

எங்கே படிக்கலாம்?

ஐஐடிஎம் – கேரளா, சென்னை ஐஐடி, டெல்லி ஐஐடி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம், தேசியப் பாதுகாப்புச் சந்தைகள் நிறுவனம், ஐஐஎம் கல்கத்தா, ஹைதராபாத் ஐஐடி, காரக்பூர் ஐஐடி, அகமதாபாத் பல்கலைக்கழகம், கடல்சார் கல்விப் பயிற்சி நிறுவனம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தரவு அறிவியல் படிப்புகளைப் படிக்க முடியும்.

சென்னை ஐஐடியில் தரவு அறிவியல் படிப்பை இணைய வழியில் படிக்க முடியும். இவை தவிர, வி.ஐ.டி பல்கலைக்கழகத்திலும், சென்னை லயோலா கல்லூரியிலும் தரவு அறிவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தரவு அறிவியலே இன்று உலக அளவில் அதி வேகமாக வளர்ந்து வரும் துறை. 2026ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அந்த துறை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளுக்கு வேலைகளுக்குப் பஞ்சம் இருக்காது என்றும் கல்வியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் தரவு அறிவியல் படிப்பே இன்றைய தேதியில் மாணவர்களின் சிறந்த தேர்வாக அமையக்கூடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in