

நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962ஆம் ஆண்டு நடைபெற்றது. 1952, 1957 ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவிவகித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், மூன்றாவது முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று ராஜேந்திர பிரசாத் தேர்தலுக்கு முன்பே தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனால், ஏற்கெனவே பிரதமர் ஜவாஹர்லால் நேரு விரும்பியது போல குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு குடியரசுத் துணைத் தலைவரான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கே இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக சுலபமாக ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, அவருடைய வெற்றியும் சுலபமாகவே இருந்தது. முதல் இரண்டு குடியரசுத் தலைவர் தேர்தலைப் போலவே, இந்த முறையும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
1952 முதல் 1962 வரை குடியரசுத் துணைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தார். மாநிலங்களவைத் தலைவர் பதவியையும் குடியரசுத் துணைத் தலைவர்தான் வகிப்பார் என்பதால், அந்தப் பொறுப்பிலும் ராதாகிருஷ்ணன் இருந்தார். மாநிலங்களவைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனின் பணி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என எல்லாத் தரப்பினரையும் ஈர்த்திருந்தது. அதனால், ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவர் ஆவதைப் பொதுவாக எல்லாருமே விரும்பினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து சவுத்ரி ஹரி ராம், ஜமுனா பிரசாத் திரிசுலியா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இதில் சவுத்ரி ஹரி ராம் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் சுயேச்சையாகக் களமிறங்கி தோல்வியடைந்தவர். இந்த முறையும் சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கினார். மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962ஆம் ஆண்டு மே 7 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 11 அன்று எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் 5,53,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சவுத்ரி ஹரி ராம் 6,341 வாக்குகளையும் ஜமுனா பிரசாத் திரிசுலியா 3,537 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர். முந்தைய இரு தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் சவுத்ரி ஹரி ராம் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 1962 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 98.2 சதவீத வாக்குகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் பெற்றிருந்தார். சவுத்ரி ஹரி ராம் 1.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தேர்தலில் வெற்றிபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் மே 13 அன்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவரும் இவரே.
(1967 டைரியைத் திருப்புவோம்)