

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக 1952ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பதவிக் காலம் 1957ஆம் ஆண்டில் முடிவுக்கு வர இருந்தது. இந்த ஐந்தாண்டுக் காலத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் ஜவர்ஹலால் நேருவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிய வேளையில், அந்தப் பதவிக்கு இரண்டாம் முறையாக மீண்டும் போட்டியிட ராஜேந்திர பிரசாத் விரும்பினார்.
ஆனால், பிரதமர் நேருவோ, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில் ராஜேந்திர பிரசாத்தும் உறுதியாக இருந்தார். மேலும் ராஜேந்திர பிரசாத்துக்குக் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஆதரவும் இருந்தது. இதனையடுத்து மவுலானா அபுல் கலாமுடன் பிரதமர் நேரு ஆலோசனை செய்தார். இதன் பிறகு இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜேந்திர பிரசாத்தை மீண்டும் களமிறக்க பிரதமர் நேரு ஒப்புக்கொண்டார்.
இதனால், டாக்டர் ராதாகிருஷ்ணனை 1962ஆம் ஆண்டு வரை துணைக் குடியரசுத் தலைவராக தொடரும்படியும், பிறகு அவர் குடியரசுத் தலைவராக்கப்படுவார் என்ற உறுதியையும் நேரு அவரிடம் வழங்கினார். அதை டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டாம் முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் நடந்ததைப் போலவே, ராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் ஒருவரும் களமிறக்கப்படவில்லை.
ஆனால், இரண்டு சுயேச்சைகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கினர். 1952இல் சுயேச்சையாகப் போட்டியிட்ட சவுத்ரி ஹரி ராம் மீண்டும் களமிறங்கினார். இதேபோல இன்னொரு சுயேச்சையாக நாகேந்திர நாராயண் தாஸும் தேர்தலில் போட்டியிட்டார். இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 மே 6 அன்று நடைபெற்றது. தேர்தலில் 496 எம்.பி.க்களும் 14 மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 10 அன்று எண்ணப்பட்டன. இதில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் 4,59,698 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சவுத்ரி ஹரி ராம் 2,672 வாக்குகளையும் நாகேந்திர நாராயண் தாஸ் 2,000 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் இரண்டாவது முறையாக மே 13 அன்று மீண்டும் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். 1962-ஆம் ஆண்டு வரை இந்தப் பொறுப்பில் இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்திய வரலாற்றில் இரண்டு முறை குடியரசுத் தலைவரான ஒரே தலைவர் ஆவார்.
(1962 டைரியைத் திருப்புவோம்)