Published : 22 Jun 2022 06:15 PM
Last Updated : 22 Jun 2022 06:15 PM

வெற்றி மந்திரம் | மனதைப் பூட்டி வையுங்கள்

சி.ஹரிகிருஷ்ணன்

‘என் மனதைக் காயப்படுத்திவிட்டார்கள்...’
இந்த வார்த்தையைப் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். ஏன்? நாமே பலமுறை இந்த வார்த்தையைச் சொல்லியிருப்போம்.
இந்த வார்த்தையைச் சொல்ல நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.
ஒருவருடைய செயல், பேச்சு, எழுத்து இவற்றில் எது உங்கள் மனத்தைக் காயப்படுத்தி இருந்தாலும், காயப்படுத்தும் அளவுக்கு உங்கள் மனத்தை அவர் வசம் ஒப்படைத்தது உங்கள் தவறுதானே? நம் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றை, இன்னொருவர் காயப்படுத்தும் அளவுக்கு நாம் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறோம்?

நம் வீட்டுக்குள் அந்நியர்கள் யாரையாவது நுழையவிடுவோமா? நம் வீட்டை அவர்கள் இஷ்டப்படி சேதப்படுத்த நாம் இடம் கொடுப்போமா? நம் மனம் என்பது நம் வீடு மாதிரி. அதை மற்றவர்கள் காயப்படுத்த நாம் இடம் கொடுக்கலாமா? மற்றவர்கள் நம் மனத்தைக் காயப்படுத்த முடியாதபடி நாம் நம் மனத்தைப் பூட்டிவைக்க வேண்டாமா? நம் மனது என்ன குப்பைத் தொட்டியா மற்றவர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் இங்கே கொட்டிச் செல்ல? அந்த அழுக்கையும் நாற்றத்தையும் நாம் ஏன் தாங்கிக்கொள்ள வேண்டும்? வீட்டுக்குள் தேவையில்லாதது வரும் என்று எப்படிக் கதவு போட்டு தடுக்கிறோமோ அதைப் போல நம்முடைய மனத்தையும் தாழ்போடக் கற்றுக்கொண்டால், எவரும் நம் மனத்தைக் காயப்படுத்த முடியாது.

எந்தெந்த விஷயங்களை நம் மனத்தில் அனுமதிப்பது, எவற்றை வெளியேற்றுவது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நாம் உற்சாகத்தோடு கடக்கையில், நம்மைப் பின்னோக்கி இழுக்கும் விஷயங்களை நம் மனக் கதவைத் திறந்து வெளியேற்றிவிட வேண்டும்.

ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் எல்லா வசதிகளும் இருந்தாலும், அவனது மனம் மட்டும் முழுமையடையவில்லை. எதையோ இழந்தது போலவே இருந்தான். ஒரு துறவியைச் சந்தித்துத் தன் பிரச்சினையைச் சொல்லி அதற்கான காரணத்தையும் அது தீர்வதற்கான வழியையும் கேட்டான். அவனது கேள்விக்கான விடையைத் தெளிவுபடுத்த, துறவி அவனை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றார். கனமான மூன்று கற்களைக் கொடுத்து மலைக்கு மேல தூக்கி வரச் சொன்னார். அவனும் தூக்கினான். ஆனால், அவனால் நடக்க முடியவில்லை. அதனால், துறவி அதில் ஒரு கல்லை மட்டும் தூக்கிப்போட்டுவிட்டு வரச் சொன்னார்.
அவனும் தூக்கிப் போட்டுவிட்டு இரண்டு கற்களைத் தூக்கிக்கொண்டு நடந்தான். சிறிது தூரம் கடந்த பின்னர் அவனால் நடக்க முடியவில்லை. ஆகவே, அதில் ஒன்றைத் தூக்கிப்போடச் சொன்னார் துறவி. அவனும் தூக்கிப்போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

மீண்டும் சிறிது தூரம் சென்றதும் நடக்க முடியாமல் சிரமப்பட்டான். துறவியும் இருந்த ஒரு கல்லையும் தூக்கிப்போட்டு நடக்கச் சொன்னார். பின்னர் அவனும் எந்தச் சிரமமும் இல்லாமல் நடந்தான். பின் இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.
அப்போது துறவி அவனிடம், “எப்படி நீ பாரத்தைத் துாக்கிக் நடக்கச் சிரமப்பட்டாயோ, அதுபோலத்தான் பலரும் தங்கள் மனத்தில் தேவையில்லாத பல விஷயங்களைப் பூட்டிவைத்து வாழ்க்கைப் பாதையில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். நீயும் அவர்களைப் போலத்தான் தேவையில்லாத விஷயங்களை உன் மனத்தில் போட்டு உன் பாரத்தை ஏற்றிக்கொள்கிறாய்.
எப்படி அந்தக் கற்களின் கனத்தைத் தாங்க முடியாமல் திணறினாயோ, அதேபோல்தான் உன் மனதில் பாரத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியாமல் அவதிப்படுகிறாய். ஒவ்வொரு கல்லாகத் தூக்கிப் போட்ட பிறகு எப்படிப் பாரமின்றி நடக்க முடிந்ததோ, அதேபோல்தான் நீ உன் மனத்தில் பூட்டி வைத்திருக்கும் பிரச்சினைகளைத் துாக்கிப்போட்டால், உன் மனது நிம்மதி அடையும்” என்றார்.

நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். தேவையில்லாதவற்றைச் சுமந்துகொண்டு நிம்மதியில்லை என்று அலைந்து கொண்டிருக்கிறோம். உங்கள் மனத்துக்குத் தாழ்ப்பாள் போடுங்கள். எவை எவை உங்கள் மனத்துக்குள் வரலாம், எவை எவை உங்கள் மனத்துக்குள் வரக் கூடாது என்று முடிவெடுங்கள். தேவையானவற்றுக்குத் தாழ்ப்பாளைத் திறந்துவிடுங்கள். தேவையில்லாதவற்றை விரட்டித் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் மனத்துக்கான தாழ்ப்பாள் உறுதியாக இருந்தால், உங்கள் அனுமதி இல்லாமல் அதனுள் யாரும் பிரச்சினையைப் புகுத்த முடியாது. உங்கள் மனத்தை யாரும் காயப்படுத்தவும் முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x