

இந்தியாவின் 16ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்கு மதிப்பு 6,05,366. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேந்திர பிரசாத் களமிறக்கப்பட்டார். இந்தியா 1950ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் குடியரசு நாடாக உருவெடுத்தது. இதனையடுத்து இடைக்கால குடியரசுத் தலைவராக இதே நாளில் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்த அவர்தான் முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அப்போது கே.டி. ஷா என்றழைக்கப்பட்ட குஷால் தலக்ஷி ஷா, லக்ஷ்மண் கணேஷ் தாட்டி, சவுத்ரி ஹரி ராம், கிருஷ்ண குமார் சாட்டர்ஜி என 4 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கினர். இவர்களில் ஓரளவு செல்வாக்குமிக்கவராக கே.டி. ஷா இருந்தார். இவர் இந்திய பொருளாதார அறிஞராகவும் வழக்கறிஞராகவும் இருந்தவர். மேலும் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, அவர் இந்திய அரசமைப்பு நிர்ணய சபையில் உறுப்பினராகவும் இருந்தவர்.
1952 மே 2 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 6 அன்று எண்ணப்பட்டன. ராஜேந்திர பிரசாத்துக்கும் கே.டி. ஷாவுக்கும் இடையே நடந்த போட்டியில் ராஜேந்திர பிரசாத் 5,07, 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதாவது 83.81 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார் ராஜேந்திர பிரசாத். கே.டி. ஷா 92,827 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அதாவது 15.3 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். எஞ்சிய வாக்குகளை இதர 3 சுயேச்சை வேட்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜேந்திர பிரசாத், சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவராக 1952 மே 13 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
(1957 டைரியைத் திருப்புவோம்)