அறிவியல் ஆசிரியரின் வைரல் காணொளி

அறிவியல் ஆசிரியரின் வைரல் காணொளி
Updated on
2 min read

இவ்வுலகின் மேன்மையிலும் சமூகத்தின் இருப்பிலும் தனிமனித வளர்ச்சியிலும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பங்கு அளப்பரியது. தேடிச் சென்று கற்பதில் மட்டுமல்ல; தாங்கள் கற்றதைத் தேடிச் சென்று கற்பிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் ஆசிரியர்களே தொடக்கப்புள்ளியாக இருக்கின்றனர்.

மாணவர்களுடன் பயணித்து, கல்வியை அவர்களுக்குப் புரியும் மொழியில் எளிதாக விளக்குவதற்கு அவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகள் தன்னலமற்றவை. தற்போது உலக அளவில் வைரலாகி இருக்கும் கிரெக் வுல்ஃப் எனும் ஓர் அறிவியல் ஆசிரியரின் காணொளியும் அத்தகைய தன்னலமற்ற முன்னெடுப்புகளில் ஒன்றே.

இயற்பியலின் சலிப்பை அகற்றியவர்

அறிவியல் பாடங்களில் இயற்பியல் நம்மை எளிதில் அலுப்படையச் செய்துவிடும். இயற்பியலின் அடிப்படை கொள்கைகளைக் கேட்பதும் படிப்பதும் பலருக்குச் சலிப்பூட்டும். இந்தக் காணொளியில் கிரெக் வுல்ஃப், அயற்சி அளிக்கும் இயற்பியலின் கொள்கைகளை வெகுச் சுவாரஸ்யமாக விளக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் இன்றைய தலைமுறைக்குப் புரியும் மொழியில், புரியும் விதத்தில், அவர் விளக்கும் விதம், இயற்பியலின் மீது புது ஆர்வத்தை நமக்கும் கூட ஏற்படுத்திவிடுகிறது.

யார் இந்த ஆசிரியர்?

அமெரிக்காவின் பர்லிங்டன் நகரிலிருக்கும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக கிரெக் வுல்ஃப் பணியாற்றி வருகிறார். அங்கே அவர் தன்னுடைய மாணவர்களுக்கு அறிவியல் கொள்கைகளை எளிய செயல்முறை விளக்கங்களின் மூலம் விளக்கும் விதம் மிகவும் பிரசித்திபெற்றது. தற்போது அந்த விளக்கங்கள் அவருடைய வகுப்பறைக்கு வெளியேயும் பரவி, உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

பதினைந்து மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க Wolf_Science என்கிற பெயரில் TikTokஇல் ஒரு பயனர் பக்கத்தைத் தொடங்கினார். அதில் அறிவியல் கொள்கைகள் குறித்த விளக்கக் காணொளிகளைப் பதிவேற்றினார். அந்தக் காணொளிகள் அனைத்தும் இரண்டு நிமிடங்கள் எனும் அளவிலிருந்தன. பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட அந்த டிக்டாக் தளத்தை இன்று பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவருடைய காணொளிகள் கோடிக்கணக்கில் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றன.

பெர்னோலியின் கொள்கை

பெர்னௌலியின் கொள்கையை விளக்கும் அவரது காணொளியே இன்று உலக அளவலில் வைரலாகி வருகிறது. கடினமான அந்தக் கொள்கையை விளக்குவதற்கு அவர் பயன்படுத்தியது ஒரு நீண்ட ஞெகிழி பை, அவருடைய மூச்சுக்காற்று ஆகிய இரண்டு மட்டுமே. சரியாக 103 விநாடிகளில் பெர்னோலியின் கொள்கை என்றால் என்ன என்பதை அவர் நமக்கு விளக்கிவிடுகிறார். அதையும் ஒரு நிஜ உலக உதாரணத்துடன் அவர் விளக்கி இருப்பதால், அந்தக் கொள்கை நமக்கு ஒருபோதும் மறக்காது. வைரலான அந்த காணொளியில், 10 அடி நீளமுள்ள ஞெகிழி பையை நம்முடைய ஒரே மூச்சில் நிரப்புவதற்கு பெர்னௌலியின் கொள்கை எப்படி உதவுகிறது என்பதை அவர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்தக் காணொளியில் முதலில் அவர் சாதாரணமாக ஊதுகிறார். ஞெகிழி பை சிறிதளவே நிரம்புகிறது. பின்பு பெர்னௌலியின் கொள்கையைப் பயன்படுத்தி ஊதுகிறார். ஞெகிழி பை எளிதில் நிரம்பிவிடுகிறது. அறிவியலின் உன்னதத்தை நம் முன்னே காட்சிப்படுத்தி நிறுவும் விதம் நம்மை மலைக்கச் செய்துவிடுகிறது.

விலைமதிப்பற்றவர்

”பயன்பாட்டு இயற்பியலின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று இது என்று” அந்தக் காணொளிக்குப் பல அறிவியலாளர்கள் பின்னூட்டம் இட்டுள்ளனர். "உங்களைப் போன்ற ஆசிரியர்கள் எங்களை மெய் சிலிர்க்கச் செய்கிறார்கள்” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் அவரைப் பாராட்டி உள்ளது.

ஒரு நல்ல ஆசிரியர் உண்மையில் எவ்வளவு விலைமதிப்பற்றவர் என்பதை இது காட்டுகிறது. கற்றல் வேடிக்கையாக இருக்கும்போது, அது எல்லா வயதினரையும் மாணவர்களாக மாற்றிவிடும் என்பதற்கு இந்தக் காணொளியே உதாரணம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in