

தோல்வியைச் சந்திக்காத மனிதர்கள் என்று எவரும் இங்கே கிடையாது. அம்பானியோ சாலையோர பழ வியாபாரியோ எவராக இருந்தாலும் அவர் தோல்வியைச் சந்தித்த ஒருவராகவே இருப்பார். நம் வாழ்க்கையில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. தோல்வியைத் தாங்கி, அதைக் கடந்துசெல்லும் போக்கே இங்கே வெற்றியாளரைத் தீர்மானிக்கிறது. சாதனையாளர்களின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் இது.
தோல்வி என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்படும் ஒரு தற்காலிக நிகழ்வு. அந்த தற்காலிக நிகழ்வை நிரந்தரமாகக் கருதுவதோ, அதில் துவண்டு சுருள்வதோ நமக்குத் தேவையற்ற ஓர் எதிர்மறை எண்ணப்போக்கு. தோல்வியே நம்மை நம் வாழ்வில் முன்னோக்கி நகர்த்திச்செல்லும் உந்துதல். தோல்வியை ஆராய்ந்தால், அதற்கான காரணம் நமக்குப் புரிபடும். அந்தக் காரணம் நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தரும். தோல்வி நமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் சில இங்கே:
விளம்பரம் முக்கியம்
திறமை முக்கியம். ஆனால் உங்களிடம் இருக்கும் திறமை பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் அதனால் எவ்வித பயனும் ஏற்படாது. உங்கள் திறமையைப் பிறர் அறியச் செய்வதே வெற்றிக்கான முதல் நிலை. திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கவனத்தை அதை வெளிக்காட்டுவதிலும் செலுத்த வேண்டும். வெளிப்படுத்தப்படும் திறமைகளே நமக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
எதிர்மறை ஆளுமைகளின் அறிகுறிகளைக் கண்டறியக் கற்றுக்கொள்ளுங்கள்
தொழிலோ, வேலையோ, வாழ்க்கையோ எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்து பயணிப்பது நம்மை முன்னேற விடாது. இத்தகைய நபர்களை நாம் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் நம்மைப் பேரழிவின் விளிம்பில் நிறுத்திவிடுவார்கள். இத்தகைய நபர்களைக் கண்டறிவது மிகவும் எளிது. அவர்களுக்கு மற்றவர்களின் மீது பச்சாதாபம் இருக்காது. மற்றவர்களைக் கையாளுவதற்கு எப்போதும் அவர்கள் தங்கள் அறிவையோ ஈர்ப்பையோ மட்டுமே பயன்படுத்துவார்கள்.
தேக்கம் வேண்டாம்
எந்த வேலையாக இருந்தாலும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், உங்கள் மனத்துக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதனை நிறுத்துவதற்கு ஒருபோதும் தயங்க வேண்டாம். எல்லோரும் செய்கிறார்கள் என்பதால் மட்டும் எந்த வேலையும் சிறப்பான ஒன்றாக மாறிவிடாது. உங்களுக்கு அந்த வேலையில் பிடிப்பு இருக்க வேண்டும். அதன் ஆக்கப்பூர்வ பயனில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையை மீறி, பிடிப்பின்றி செய்யும் எந்த வேலையும் நம்மை ஒருவித தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும். உங்கள் அறிவாற்றலை சவாலுக்கு அழைக்கும் வேலையை உங்கள் திறனை மேம்படுத்தும். அதுவே உங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் புத்துணர்வு அளிக்கும்
எதிர்மறையான கருத்துக்களை ஒதுக்க வேண்டாம்
நீங்கள் மிகுந்த நாட்டத்துடன் ஈடுபட்டு இருக்கும் வேலையைக் குறித்து எதிர்மறையான கருத்துக்களைப் பெறுவது மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், அந்த எதிர்மறையான கருத்துகளைப் புறக்கணிக்க வேண்டாம். மனத்துக்குப் பிடித்த வேலையைச் செய்வது முக்கியம் என்றாலும், அதை உணர்ச்சியின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதை விட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதே முக்கியம். எதிர்மறையான கருத்துகளைப் பெறும்போது, அவற்றை உணர்ச்சிகளின் அடிப்படையில் அணுகாமல், உண்மையின் அடிப்படையில் அணுகுங்கள். இந்தப் போக்கு, அந்தக் கருத்துகளில் மறைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை உங்களுக்கு உணர்த்தும். உங்கள் திறன் போதாமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தவும் உதவும்.