ஆர்மா மலைக் குகை ஓவியங்கள்|காற்றில் கரையும் கம்பீரம்

ஆர்மா மலைக் குகை ஓவியங்கள்|காற்றில் கரையும் கம்பீரம்
Updated on
3 min read

ம்மில் பலருக்கும் எதுவுமே பொருட்டல்ல தங்களைத் தவிர. நம் புராதனத்தையும் கலைத்திறனையும் தாங்கி நிற்கும் பண்டைய அடையாளங்களின் மீது எந்த மதிப்பும் இருப்பதில்லை. பல நூறாண்டுப் பழமை வாய்ந்த சுவர்களில் தன் பெயரையும் தன் இணையின் பெயரையும் கிறுக்குவதையும் ஓவியங்களைச் சிதைப்பதையும் வெகு இயல்பாகச் செய்வார்கள். அந்தப் புராதனச் சின்னங்களின் மீது இவர்களுக்கு மதிப்பில்லையா அவை குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லையா எனத் தெரியவில்லை. இவர்களைப் பொறுத்தவரை கேட்பாரற்றுக் கிடக்கும் எல்லாமே தங்கள் சொத்து.

ஆர்மா மலைக் குகை ஓவியங்கள் சிதைந்ததும் அப்படித்தான். தன் வரலாற்று அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் ஆர்மா மலை, வரலாற்றின் நீட்சியாக நெடிதுயர்ந்து நிற்கிறது. வேலூர் மாவட்டம் ஆம்பூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையாம்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. நடந்தால் ஆர்மா மலையை அடையலாம். அறம் பாவிக்கும் மலை என்கிற பொருளில் ஆரம்பத்தில் இந்த மலை ‘அரும்பாவி’ மலை என அழைக்கப்பட்டிருக்கிறது. தற்போது மருவி அர்மா மலை, ஆர்மா மலை ஆகிய பெயர்களில் வழங்கப்படுகிறது.

திசையெங்கும் ஆவாரை

இயற்கையாக அமைந்த மலைக் குகை என்பதால் மலைக்குச் செல்ல சீரான பாதை இல்லை. வயல்களின் வழியாக நடக்க வேண்டும். பசிய வயல்களுக்கு நடுவே செல்லும்போது பனம்பழத்தின் இனிய மணம் நாசியை நிறைக்கிறது.
அடர்த்தியாக வளர்ந்திருக்கும் காட்டு மல்லி, பிரண்டைச் செடிகள் மலையின் அடிவாரத்துக்கு நாம் வந்துவிட்டதைச் சொல்கின்றன. திரும்பிய திசையெங்கும் ஆவாரை பூத்திருக்கிறது. பாறைகளின் மீதேறி நடந்தால், பிற்காலத்தில் கட்டப்பட்ட கற்படிக்கட்டுகள் சில தென்படுகின்றன. அவற்றின் மீது நடக்க, மீண்டும் பாறைகள். சில பாறைகளில் மூலிகைகள் அரைப்பதற்கான குழிகள் இருக்கின்றன. பல்வேறு வகையான முட்செடிகள் அடர்ந்திருக்க, குறுகிய பாதை வழியாக மேலேறினால் பிரம்மாண்டமாக வரவேற்கிறது குகை. ஆட்டுப் புழுக்கைகளின் மணம் அந்தக் குகை ஆட்டுக்கிடையாகப் பயன்படுத்தப்பட்டுவருவதைச் சொல்கிறது. உடைந்த நிலையில் தாமரைப் பீடமும், சிதைந்த ஒரு கற்சிற்பமும் தென்படுகின்றன.


நீளவாக்கில் அமைந்திருக்கும் குகையின் ஒரு ஓரத்தில் தண்ணீரைச் சேமிக்கும்வகையில் குழிவாக இருக்கிறது. பொதுவாக சமணர்கள் தங்கிய குகைகள் என்றால் குகைகளின் விளிம்பின் மழைத் தண்ணீர் வடிவதற்கான வெட்டு ஒன்று இருக்கும். இந்தக் குகையிலும் அந்த அமைப்பு இருக்கிறது.

சமணர்களின் கோட்பாடுகளில் முதன்மையானது கொல்லாமை. செங்கல்லைச் சுடுவதால் மண்ணுக்குள் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதால் மண்ணைக் குழைத்து, வெயிலில் பதப்படுத்தி, செங்கல் போலச் செய்திருக்கிறார்கள். அவை தற்போது புழக்கத்தில் இருக்கும் ஹாலோ பிளாக் கற்களின் முன்னோடி போல இருக்கின்றன. மிக உறுதியான அந்தக் கற்களைக் கொண்டு குகை நீளத்துக்கும் மூன்றடுக்குச் சுவர் போல அமைத்திருக்கிறார்கள். நீளமான தடுப்பு போல இந்த அறைகள் அமைந்திருக்கின்றன. குகை முழுமைக்கும் அமைக்கபட்டிருந்த அவை தற்போது சிதிலமடைந்திருக்கின்றன.

வெள்ளாட்டின் கம்பீரம்

குகையின் மேற்கூரையில் சுண்ணாம்பைப் படலம் போலப் பூசி, அதன் மீது ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் சுண்ணாம்புப் படலம் சுரண்டியெடுக்கப்பட்டும், உருக்குலைக்கப்பட்டும் இருக்கிறது. எஞ்சியிருக்கும் பகுதியில் வண்ணங்கள் மங்கிய நிலையில் ஓவியத்தின் சில பகுதிகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அடர் பழுப்பு நிற வட்டத்துக்குள் வெளிர் பழுப்பு நிற வட்டங்கள் நிறைந்த ஓவியப் பரப்பு இன்னதென்று அடையாளம் சொல்ல முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு ஓவியத்தில் வெள்ளாட்டின் தலை மட்டும் தெரிகிறது. அதற்குப் பின்னால் நீல வண்ணத்தில் இரண்டு உருவங்கள் இருப்பதால் அவர்கள் ஆட்டின் மீது அமர்ந்திருக்கிறார்கள் என்று ஊகிக்கமுடிகிறது. அவர்கள் வெள்ளாட்டை வாகனமாகக் கொண்ட அக்னி தேவனும் அவருடைய தேவியுமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வெள்ளாட்டின் கூரிய கொம்புகளும் குறுங்காதுகளும் கோபமான கண்களும் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன.
அந்த ஓவியத்துக்குப் பக்கத்தில் கழுத்தைச் சாய்த்தபடி அன்னப்பட்சி ஒன்று இருக்கிறது. அதன் சிறகும் காலும் தெளிவாகத் தெரிகின்றன. அதையொட்டிய பகுதியில் இளம் பச்சை வண்ணத்தில் கொடிகளும் பூக்களும் இருக்கின்றன. இந்த மூன்று ஓவியங்கள் மட்டுமே தற்போது உள்ளன.

அரசின் கடமை

ஆர்மா மலை குகைத் தளத்தில் பல்வேறு ஓவியங்கள் இருந்ததாகப் பதிவுகள் சொல்கின்றன. அனல் மகுடம் அணிந்து, தன் வாகனமான வெள்ளாட்டின் மீது தன் துணையுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் அக்னி தேவன், சிறகு விரித்தபடி நடனமாடும் அன்னப் பட்சிகள், கண்ணைக் கவரும் செடிகள், கொடிகள் என்று பல்வேறு ஓவியங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றில் எந்தவொரு ஓவியமும் தற்போது முழுமையாகத் தெரியவில்லை. முக்கால்வாசி அழிந்தநிலையில் அக்னி தேவன் ஓவியம், அன்னப் பறவையின் ஒரு பகுதி, வெள்ளாட்டின் தலை ஆகியவை மட்டுமே ஓரளவு தெரிகின்றன.

இந்தக் குகையில் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் சமணர்கள் குடியேறியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குகையைச் சுற்றியிருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதன் முக்கியத்துவமும் புராதனச் சிறப்பும் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்வதும், சிற்பங்களை உடைப்பதும் எதிர்பார்க்கக் கூடியதே. இவற்றைத் தடுக்க இது போன்ற வரலாற்று நினைவிடங்கள் குறித்துப் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in