

தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர். கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என்று அன்புடன் அழைக்கப்படுபவர். இன்று பிறந்தநாள் காணும் அவருடைய வாழ்க்கைச் சுருக்கம்:
1924 ஜூன் 3 - திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் பிறந்தார்.
1936இல் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் இடம் மறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று கூறியதை அடுத்து அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இதுவே அவரது போராட்ட வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.
பட்டுக்கோட்டை அழகிரியின் சொற்பொழிவுகளைக் கேட்டு பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பெரியாரைத் தலைவராக ஏற்று திராவிடர் கழகத்தில் சேர்ந்தார் 1938இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். உடன்படித்த மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்புப் பேரணிகளை நடத்தினார்.
1939இல் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசிப் பரிசுபெற்றார். இதுவே அவரது முதல் மேடை சொற்பொழிவு.
1941இல் ‘மாணவ நேசன்’ என்ற மாத இதழைக் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கினார்.
1942இல் அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் கருணாநிதி எழுதிய ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை வெளியானது. இதே ஆண்டில் ‘முரசொலி’ இதழை மாத இதழாகத் தொடங்கினார். பின்னர், இது வார இதழாகவும் பிறகு நாளிதழாகவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கருணாநிதி எழுத்தில் அரங்கேறிய முதல் நாடகம் ‘பழனியப்பன்’. 1944 மே 29 தேதி திருவாரூரில் அன்றைய ‘பேபி டாக்கி’ஸில் அரங்கேறியது.
1947 ஏப்ரல் 11 - கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய முதல் திரைப்படம் ‘ராஜகுமாரி’ வெளியானது. 1944லிருந்தே இந்தப் படத்தைத் தயாரித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் திரைக்கதை-வசன எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை 1949 செப்டம்பர் 17இல் அண்ணா தொடங்கினார். கருணாநிதியும் அதில் இணைந்தார்.
டால்மியாபுரம் ரயில் நிலையத்துக்கு அதன் முந்தைய பெயரான கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரையே வைக்க வேண்டும் என்ற திமுகவின் போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். 1953 ஜூலை 15 தேதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து மறியல் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனைபெற்றார்.
1957இல் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளராக வென்று தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக நுழைந்தார்.
1967இல் முதல்முறையாக திமுக ஆட்சி அமைத்தது. அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சரானார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின் 1969 பிப்ரவரி 10 தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். ஜூலை 27-ம் தேதி திமுக பொதுக்குழுவில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிவரை அந்தப் பதவியில் நீடித்தார்.
தொடர்ந்து 1971இல் திமுக வெற்றிபெற்றதை அடுத்து மார்ச் 15-ல இரண்டாவது முறை முதல்வராகப் பதவியேற்றார்.
1975இல் பிரதமர் இந்திரா காந்தி் கொண்டுவந்த நெருக்கடி நிலையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். 1976 ஜனவரி 31-ம் தேதி முதல்முறையாகக் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
1977இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிலிருந்து பிரிந்து சென்று எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக வெற்றிபெற்றது. கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.
இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து 1983 ஆகஸ்ட் 18-ம் தேதி தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்
.
1984இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
1989 தேர்தலில் திமுக வென்றது. ஜனவரி 27-ம் தேதி மூன்றாவது முறையாக முதல்வரானார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டி 1991 ஜனவரி 30-ம் தேதி திமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தது. சென்னை துறைமுகம் தொகுதியில் வென்ற கருணாநிதி, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
1996 தேர்தலில் திமுக வென்றது. சேப்பாக்கம் தொகுதியில் வென்ற கருணாநிதி, மே 13-ம் தேதி நான்காவது முறையாகத் தமிழக முதல்வரானார். ஐந்தாண்டு ஆட்சியை முதல்முறையாக முழுமையாக நிறைவுசெய்தார்.
2001இல் அதிமுக ஆட்சியமைந்தது. சேப்பாக்கம் தொகுதியில் வென்றார் கருணாநிதி. ஜூன் 30-ம் தேதி மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி தமிழக அரசு அவரைக் கைது செய்தது. கைது செய்யப்படும்போதும் சிறையிலும் அவர் நடத்தப்பட்ட விதமும் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
2006 தேர்தலில் திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சேப்பாக்கம் தொகுதியில் வென்ற கருணாநிதி மே 13-ம் தேதி ஐந்தாவது முறை முதல்வராகப் பதவியேற்று ஐந்தாண்டு ஆட்சியை நிறைவுசெய்தார்.
2009 ஏப்ரல் 24-ம் தேதி ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போரை நிறுத்தச் சொல்லி உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால், மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று சில மணி நேரத்தில் போராட்டத்தைக் கைவிட்டதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
2011 தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது திமுக. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வென்றார்.
2016 தேர்தலில் அதிமுக ஆட்சியமைத்த நிலையில், திருவாரூர் தொகுதியில் வெற்றிபெற்று 13-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார் கருணாநிதி. இதுவே அவரது கடைசி தேர்தல். போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்கவில்லை.
2016 டிசம்பர் 1ஆம் தேதி கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
2018 ஜூலை 29ஆம் தேதி உடல்நலப் பின்னடைவை அடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர்பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது.
2018 ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை மெரினாக் கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகில் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி பதித்த தடங்கள்
ஐந்து முறை தமிழக முதல்வராகவும் அதற்கு முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்துள்ள மு.கருணாநிதியின் முக்கியச் சாதனைகள்:
மக்கள் நலன்
1968இல் போக்குவரத்துத் துறை அமைச்சரானவர் நாட்டிலேயே முதல்முறையாகப் பேருந்துகளை அரசுடைமை ஆக்கினார்.
மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கைரிக்ஷாவை 1973இல்
நாட்டிலேயே முதல்முறையாகத் தடைசெய்தார்.
தமிழக குடிசை மாற்று வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வசித்த மக்களுக்குக் காரை வீடுகள் கிடைத்தன.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சத்துணவில் முட்டை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு உள்ளிட்ட பல சமூகநலத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
2006இல் ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
2010இல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான ‘அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக’த்தைக் கட்டியது இவர் தலைமையிலான அரசு.
அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், திருநங்கைகள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கான நலவாரியங்களை அமைத்தார். ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்களுக்கு ‘திருநங்கை’ என்ற கெளரவமான பெயரைச் சூட்டியவரும் அவர்தான்.
மகளிர் முன்னேற்றம்
1989இல் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில் உரிமை உண்டு என்ற நிலையை உருவாக்கினார். பெண்களின் சொத்துரிமை விஷயத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழகம்.
அதே ஆண்டில் தொடங்கப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவியதுடன் 10-ம் வகுப்புவரை படித்தவர்களுக்குத்தான் நிதி உதவி என்ற விதியின் மூலம் பெண்கல்வியையும் ஊக்குவித்தது.
கைம்பெண் மறுமணத்துக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கியது 1975இல் தொடங்கப்பட்ட ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் கைம்பெண் மறுமண உதவித் திட்டம்’. மறுமணம் செய்ய விரும்பாத கைம்பெண்களுக்கு உதவும் வகையில் அதே ஆண்டில் ‘ஆதரவற்ற கைம்பெண் உதவித்தொகை திட்டம்’ என்ற திட்டத்தையும் செயல்படுத்தினார்.
திருமணமே செய்துகொள்ளாத பெண்களுக்கான ‘முதிர்கன்னி உதவித் திட்டம்’ 2008 ஜூலை 1 அன்று செயல்படத் தொடங்கியது.
சமூக நீதி
அனைத்து சாதியினரும் ஒன்றாக வசிக்க வழிவகுக்கும் சமத்துவபுரம் திட்டத்தைத் தொடங்கினார். 1998இல் மதுரை மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரமும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 239 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. சமத்துவபுரங்களில் இட ஒதுக்கீட்டுடன், தலித் மக்களுக்கு 40% வீடுகள் ஒதுக்கப்பட்டன.
1969இல் ஏ.சட்டநாதன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25இல் இருந்து 31% ஆகவும், தலித், பழங்குடி மக்களுக்கு16இல் இருந்து 18% ஆகவும் உயர்த்தினார். 1989இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20% உள்ஒதுக்கீடு தரப்பட்டது 1990இல் பழங்குடியினருக்கு தனியாக 1% இடஒதுக்கீடு வந்தது.
2006இல் பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்ககளுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்கினார்.
பிறகு தலித் மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% தனி உள் ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டார்.
மொழி வளர்ச்சி
அறிஞர் அண்ணாவின் முதலாவது நினைவுநாளின்போது மத்திய அரசு அவரது படத்துடன் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் அண்ணாவின் கையெழுத்தைத் தமிழில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். 1970இல் தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் விழா மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
திருவள்ளுவர் புகழைப் பரப்ப சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும் கன்னியாகுமரியில் 133 அடி உயரம்கொண்ட வள்ளுவர் சிலையையும் நிறுவினார்.
தமிழ் வளர்ச்சிக்கென்று தனி அரசுத் துறையை உருவாக்கினார்
2004இல் இந்திய அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.கவுக்கு இதில் அளப்பரிய பங்கு உண்டு.
2006இல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
உள்கட்டமைப்பு வசதிகள்
1973இல் சென்னை அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) கட்டி முடிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் சென்னையிலும் மற்ற நகரங்களிலும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
1997இல் தகவல் தொழில்நுட்பத் துறைக்கென்றே தனி அரசுக் கொள்கையை உருவாக்கினார். தரமணியில் ஆசியாவின் மிகப் பெரிய ஐ.டி. பூங்காக்களில் ஒன்றான டைடல் பார்க் 2000-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்கான மெட்ரோ ரயில் திட்டம் தி.மு.க ஆட்சிக் காலத்தில் (2009) தொடங்கப்பட்டது.
மாநில உரிமைகள்
சுதந்திர நாளன்று அரசு சார்பாக தேசியக் கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குப் பெற்றுத்தந்தார். 1974 ஆகஸ்ட் 15 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி, இந்த வழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கொள்கையை முன்னெடுத்தார். “மக்களவை மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களவை தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட அவையாக இருக்க வேண்டும்” என்று 1970 தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் பேசினார். அரசியல் சாசன சட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் அதிகாரப் பங்கீடு பற்றி ஆராய ராஜமன்னார் குழுவை 1970இல் அமைத்தார்.