எண்ணும் எழுத்தும் இயக்கம்: குழந்தைகளுக்கு இன்னொரு கூண்டு

எண்ணும் எழுத்தும் இயக்கம்: குழந்தைகளுக்கு இன்னொரு கூண்டு
Updated on
4 min read

ஒவ்வொரு நாள் மாலையிலும் பறவைகள் கூடு திரும்பும்போது எழுகிற கூட்டொலி, கும்மரிச்சம் இருக்கிறதே. அந்த மகிழ்ச்சி ஆரவாரம் பறவைகள் தங்கும் எல்லா மரங்களிலும் கேட்கும். எல்லா நாள்களிலும் கேட்கும். அந்த ஆரவாரம் அடங்கவே வெகு நேரமாகும்.

கிராமங்களில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் வீடு திரும்பும் நேரத்தில், குட்டிகள் காத்திருக்கும் என்று தாய் ஆடுகள்தான் முதலாவதாக ஓடி வரும்! தொலைவில் சத்தம் கேட்டதுமே காத்திருந்த குட்டிகள் பட்டியை விட்டுத் துள்ளிக் குதித்து ஓடி வந்து தெருவின் பாதி வழியில் இருந்தே தாயுடன் கொஞ்சி மகிழ்ந்தபடி வீடு வந்து சேரும்!

இதுபோன்ற காட்சிகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த வேளைகளிலும் காண்கிறோம். பள்ளிகளில் ஒலிக்கும் கடைசி மணி குழந்தைகளின் சுதந்திரப் பிரகடனம் போல உணரப்படுகிறது. குழந்தைகளின் அந்த உற்சாகம்.. சந்தோஷம்.. விடுதலை உணர்வு கிட்டத்தட்ட உலகமெங்கும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் விடுதலை பெற்று வீடு திரும்பும் வரையில் ‘ஹேஹே’ என்று ஊரே அல்லோலகல்லோலப்படுகிறது. அந்த விடுதலை உணர்வைப் பறிக்கும் வேலையைத்தான் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ செய்யப்போகிறதோ என்கிற அச்சம் எழுகிறது.

வீடுதான் குழந்தைகளுக்கு முதல் பள்ளி. பெற்றோர்கள்தாம் முதல் ஆசிரியர்கள். இதில் சந்தேகமே இல்லை. பள்ளிகள் குழந்தைகளுக்கு இரண்டாவது வீடு போலவும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோராகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது நிறைவேறவே இல்லை!

இரண்டாவது வீடாகக் குழந்தைகள் உணரும் வண்ணம் பள்ளிகள் இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. மாற்றுக் கருத்து ஒருபோதும் இருக்காது. ஆனால், வீடு இரண்டாவது பள்ளியாக மாறினால்? ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ அப்படித்தான் மாற்றப் பார்க்கிறது. பெற்றோர்களைப் பகுதி நேர ஆசிரியர்களாக மாற்ற முனைகிறது. கல்வியின் பங்குதாரர் என்கிற வகையில் பெற்றோர் ஆசிரியர் ஆவதில் நமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், குழந்தைகள் என்ன ஆவார்கள்?

குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரியவில்லை.. அவர்களது எண்ணறிவையும் எழுத்தறிவையும் மேம்படுத்த வேண்டும். அதற்கு வகுப்பறைக் கற்றலோடு வீட்டுக் கற்றலையும் இணைக்க வேண்டும். வகுப்பறையின் கற்றல் செயல்பாடுகள் வீட்டிலும் தொடர வேண்டும். குழந்தைகளை வளர்த்துப் பள்ளியில் சேர்த்துவிட்டால் மட்டும் போதுமா? அவர்களின் கல்வி மேம்பாட்டில் கூட்டுப் பங்களிப்பு செய்ய வேண்டாமா என்று பெற்றோரைப் பார்த்துக் கேட்கிறது ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’. என்ன கொடுமை இது?

ஆராய்ச்சியாளர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆராய்ச்சியின் நோக்கம் தவளையின் கேட்டல் திறனைச் சோதிப்பது. ஆய்வாளர் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு ஒலி எழுப்பினார். தவளை இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்தது. இரண்டாவது காலை வெட்டி விட்டு ஒலி எழுப்பினார். கூடுதல் முயற்சியுடன் கொஞ்சம் நகர்ந்தது. மூன்றாவது காலை வெட்டிய பிறகு ஏதோ முயற்சி மட்டும்தான் செய்ய முடிந்தது. நான்கு கால்களையும் வெட்டிய பிறகு அதனால் அசையக்கூட முடியவில்லை. ஆராய்ச்சி முடிவை எழுதினாராம்: நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளைக்குக் காது கேட்பதில்லை! அப்படித்தான் இருக்கின்றன அரசின் சில முடிவுகள்!

கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறைக்கு வந்த பிறகு 25 சதவீத இட ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் அரசுப் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்கு அரசு செலவிலேயே கட்டணமும் செலுத்தி கல்வி உரிமைக்கே துரோகம் செய்கிற அந்த ஒரு அம்சத்தைத் தவிர அந்தச் சட்டத்தின் வேறு எந்தெந்த அம்சங்களை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்த நிர்வாகமும் இயங்கி இருக்கிறது? கல்வி உரிமைச் சட்டத்தின் படி நியமிக்க வேண்டிய ஆசிரியர்களை நியமிக்க ஏன் இந்தப் பத்தாண்டு காலமும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? அதற்கு யார் பொறுப்பு? தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. இன்னும் பல பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. இந்த நிலை நீடிப்பதற்கு யார் காரணம்?

ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி திறன்களை உடையது. ஒவ்வொருவரின் கற்றல் வேகமும் கற்கும் விதமும் ஒன்றுபோல் இருக்காது. எனவே, குழந்தைகளை மந்தையாக அணுகாமல் தனித்தனியே கவனிக்க வேண்டும். அவர்களின் தனியாள் வேற்றுமைகள், தனித்திறன்கள் கண்டறியப்பட வேண்டும். அவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணத்தையும் ஆசிரியர் உற்றுநோக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த, முழுமையான 360 டிகிரி மதிப்பீடு செய்ய முடியும். எல்லாம் சரிதான். ஐந்து வகுப்பு குழந்தைகளும் இருக்கும் பள்ளியில் ஒரு ஆசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனம் செலுத்த முடியும்?

குழப்பமான நிர்வாக நடைமுறைகள், தரமான கல்வி வழங்கப் போதிய அரசியல் உறுதியின்மை, வகுப்புக்கொரு ஆசிரியர் இல்லை, பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடமே காலி, துப்புரவுப் பணியாளர் இல்லை, காவலர், ஏவலர் பணியிடங்கள் கேட்டால் மேலும் கீழும் முழிக்கிற நிலைமை. இதனால் ஏற்படுகிற அத்தனை சுமைகளையும் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருந்து ஆசிரியர்கள் சுமக்கின்றனர். மிச்சம் இருக்கும் நேரத்தில்தான் அவர்களால் கல்விப் பணியாற்ற முடிகிறது. பிறகு எப்படிக் கற்றல் இலக்குகளை அடைய முடியும்? கற்றல் குறைபாடுகளும் கற்றல் இடைவெளிகளும் கற்றல் இழப்புகளும் இருக்கத்தானே செய்யும்? இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய ஒட்டுமொத்த அமைப்பும் இந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய முழுப்பொறுப்பையும் பள்ளித் தலைவரிடம் ஒப்படைக்கிறது. இது நியாயமா?

குழந்தைகளால் தமிழில் சாதாரண இரண்டெழுத்து வார்த்தையை, ஆங்கிலத்தில் எளியதொரு மூன்றெழுத்து வார்த்தையை வாசிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. மிக எளிய கணக்குகளைக்கூடச் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். வயதுக்கேற்ற, வகுப்புக்கேற்ற அடைவுகளை பெறவில்லை. எனவே 3-8 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணறிவு, எழுத்தறிவு திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். அடிப்படைக் கல்வியை வலுப்பெறச் செய்ய வேண்டியது முக்கியம். ஆனால், இவை எல்லாவற்றையும்விடக் குழந்தைகள் முக்கியம்!

விரும்பி உண்ணும் இனிப்பு என்றாலும் தின்னத் தின்னத் திகட்டி விடாதா? இதமாக வருடும் மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மீறி ஏற்றுகையில் அச்சு முறிந்து போகாதா? 4 மணி வரை பள்ளி. 7 மணி வரை இல்லம் தேடிக் கல்வி. அதன் பிறகும் வீட்டில் ஒரு பள்ளிக்கூடம் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

அதற்கு மாற்று என்ன? வகுப்பறைச் சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அதற்குரிய கற்றல், கற்பித்தல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதன் பிறகு பயனுள்ள கூட்டுப் பங்களிப்பு ஒரு திட்டமாக நிச்சயம் தேவைப்படாது. எனில் வீட்டில் கற்றல் நிகழவே கூடாது என்பதல்ல நம் கருத்து. எப்போதும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொண்டிருப்பது பள்ளிக்கு வெளியில்தான். தொடர்ந்து கற்பார்கள். வகுப்பறைக் கற்றலை வீட்டுக் கற்றலோடு இணைக்கிறோம் என்கிற பெயரில் பள்ளிக்கு வெளியிலும் ஒரு பாடத் திட்டத்தை முன் வைக்க வேண்டாம். மாறாக, வகுப்பறைச் சந்திப்பு அர்த்தமுள்ளதாக மாற ஆரோக்கியமான கற்றல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முன் நிபந்தனைகளை அரசும் சமூகமும் முழுமையான அக்கறையோடும் ஈடுபாட்டோடும் நிறைவேற்ற வேண்டும்.

அரசுத் தரப்பில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்துவிட்டுத் திட்டம் மேம்பட பெற்றோரையும் துணைக்கு அழைத்தால் அதன் பெயர்தான் கூட்டுப் பொறுப்பு, கூட்டுப் பங்களிப்பு. இல்லையெனில் அது அரசின் பொறுப்புத் துறப்பு!

உலகையே ஸ்தம்பிக்க வைத்தது கரோனா பெருந்தொற்று. கல்வியில் பெரும் பாதிப்பு. தடுப்பூசியில் மட்டும் அல்லாமல் குழந்தைகளின் கல்விக்கும் பூஸ்டர் தேவைப்படுகிறது. வழக்கத்துக்கு மாறான அணுகுமுறை தேவைப்படுகிறது. உதவி, ஊக்கம் தேவைப்படுகிறது. வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் அல்லது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதை இப்போதைய, இந்த உலகப் பேரிடர் காலகட்ட மீட்பின்போதுகூட நாம் சிந்திக்க முடியவில்லை, சிந்திக்கத் தயாராக இல்லை என்றால் தரமான கல்விக்காக நாம் பேசுவதும் திட்டமிடுவதும் வெறும் பேச்சுக்காக என்றாகிவிடாதா?

அதே போல இன்னொரு அச்சமும் கூடவே எழுகிறது. 3-8 என்கிற வயது வரையறையைப் பார்க்கும்போதே ஏதோ போல இருக்கிறது. கூட்டுப் பள்ளிகள், கலப்புப் பள்ளிகள் போன்ற வார்த்தைகளை வாசிக்கையில், அவை நம் மூளையைச் சென்று சேர்கிறபோது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கும் ‘வளாகப் பள்ளிகள்’ என்றுதான் ஒலிக்கின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என்கிற வார்த்தைகளைச் சல்லடை போட்டுத் தேட வேண்டியுள்ளது. குழந்தையின் முழு ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் 3-8 வயது வரையிலான குழந்தைகளின் மழலையர், தொடக்கக் கல்வி பொறுப்பைப் பத்தாம் வகுப்பு இடைநிலைக் கல்வி தலைவர் / தலைமை ஆசிரியர் முழுக் கவனம் செலுத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனும்போது சந்தேகம் உறுதி ஆகிறது. அங்கன்வாடி மையங்களைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வர முயலுதல், உள்ளூர் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு திறன்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லும்போது, அந்த ஐயம் இன்னும் வலுப்பதைத் தவிர்க்கவே இயலவில்லை!

தக்க நேரத்தில் இயற்ற வேண்டிய சட்டங்களை இயற்றாதவர்கள், சட்டங்களைச் சரிவர அமலாக்கம் செய்யாதவர்கள், நிதி ஒதுக்காதவர்கள், அரசின் கவனத்துக்குக் கொண்டுபோகாதவர்கள், குரல் கொடுக்கும் வாய்ப்பிருந்தும் அதை அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காக எழுப்பாதவர்கள் என ஏராளம் இருக்க, இங்கே தரமான கல்வி கிடைக்கும் என்று நம்பி வந்த குழந்தைகளுக்கு அல்லவா தண்டனைகளும் வழங்கப்படுகின்றன?

கடந்த நூற்றாண்டின் மத்தியில் கல்வியாளர் மரியா மாண்டிசோரி கேட்ட அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்க வேண்டி இருக்கிறது..
“சிறகுகள் வெட்டப்பட்டு கூண்டுக்குள் ஒடுக்கப்பட்ட பறவை போல அவர்களைச் சிதைத்து, கூண்டு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று திட்டமிடுவதே நவீனக் கல்வி! எத்தனை எத்தனை கல்விக் குழுக்கள், ஆலோசனைகள்? எவ்வளவு விவாதித்தாலும் நீங்கள் பேசுவது உள்ளே சிக்கிய பறவையைப் பற்றி அல்ல கூண்டைப் பற்றியதே என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்?”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in