

சென்னையிலிருந்து தலைநகர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்ற இந்திய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கே.பாலதண்டாயுதம், காங்கிரஸ் தலைவரும் ஒன்றிய அமைச்சராகவும் இருந்த மோகன் குமாரமங்கலம், கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் தேவகி கோபிதாஸ் உள்ளிட்ட பலர் இறந்தனர்.
மே 31, 1973இல் சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஊழியர்கள், பயணிகள் உள்பட 65 பேருடன் டெல்லி பாலம் (இன்றைய இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்) விமான நிலையத்துக்குச் சென்ற பயணிகள் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 440 அது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது இந்த விமானத்தின் பெயர் சாரங்கா. இரவு 7:15க்குச் சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், இரவு 9:50 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தின் அருகே வந்தது. அப்போது புயல், மழை காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியது. பாலம் விமான நிலையத்திலிருந்து 4 கிலோ மிட்டர் தொலைவிலிருந்து விமானம் தரையிறங்கும் முயற்சியின்போது உயர் மின் அழுத்தக் கம்பிகளுடன் மோதியது. இதனால் தீப்பிடித்து விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமானத்தில் முன்பகுதியில் இருந்தவர்கள் சிலர் உயிர் பிழைத்தனர். பின்பகுதியில் இருந்த ஒரே ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், தேவகி கோபிதாஸ் உள்ளிட்ட 48 பேர் இறந்தனர். விமான ஊழியர்கள் 7 பேரில் 5 பேர் உயிர் தப்பினர். பயணிகள் 12 பேர் உயிர் தப்பினர். மிகத் தாழ்வாக விமானத்தை இறக்கியதுதான் விமான விபத்துக்குக் காரணம் எனப் பின்னால் கண்டறியப்பட்டது.