மே 30, உலகின் முதல் வாகன விபத்து நடந்த தினம்

மே 30, உலகின் முதல் வாகன விபத்து நடந்த தினம்
Updated on
1 min read


தானியங்கி வாகனப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்ட இந்தக் காலகட்டத்தில் விபத்து என்பது அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் தினமும் 1214 வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆனால், தானியங்கி வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்கக் காலங்களில் பயன்பாட்டைப் போல் விபத்தும் அரிதானதாகவே இருந்திருக்கும். தானியங்கி வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு விபத்துதான் உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட வாகன விபத்தாகச் சொல்லப்படுகிறது. மாசசூசெட்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்டைச் சேர்ந்த ஹென்றி வெல்ஸ் நியூயார்க் நகரத்தில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது ஏற்படுத்திய விபத்துதான் அது.

முன்பு வண்டி இழுக்கக் குதிரைகள்தாம் பயன்பட்டன. தானியங்கி வாகனம் கண்டுபிடிக்கப்பட்டபோது, வண்டிகளில் குதிரைகள் பூட்டப்படுவதில்லை. அதனால், தானியங்கி வாகனங்களைக் குதிரையில்லா வாகனம் (horseless wagon) என்றே அழைத்தனர். இந்தக் குதிரையில்லா வாகனங்களுக்கான போட்டி அந்தக் காலத்தில் பல இடங்களில் நடைபெற்றன. அப்படியான ஒரு போட்டியில்தான் வெல்ஸ் கலந்துகொண்டு வாகனத்தை வேகமாக ஒட்டி நியூயார்க்கில் ப்ராட்வே பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்.

அப்போது நியூயார்க் நகர் 90ஆவது தெருவைச் சேர்ந்த எவ்லின் தோமஸ் மிதிவண்டி ஓட்டி, அதே ப்ராட்வே பகுதியில் சென்றுள்ளார். வெல்ஸ் வாகனம் ஒட்டிச் செல்வதைக் கண்ட சாட்சி ஒருவர், “வெல்ஸின் வாகனம் சாலையின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சென்றதைப் பார்த்ததும், அது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது” எனச் சொல்லியிருக்கிறார். வாகனம் நேராகச் சென்று எவ்லின் மிதிவண்டியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்லின், அவசர ஊர்தியில் மான்காட்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஒரே நாளில் அவர் மீண்டு வீடு திரும்பியுள்ளார். வெல்ஸ் கைதுசெய்யப்பட்டு நியூயார்க் நகர 25ஆவது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்குத் தண்டணையும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in