மே 27: நேரு நினைவுநாள் - இந்தியாவைச் செதுக்கிய நேருவின் திட்டங்கள்

மே 27: நேரு நினைவுநாள் - இந்தியாவைச் செதுக்கிய நேருவின் திட்டங்கள்
Updated on
7 min read

நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேருவே முதன்மையானவர் எனக் கருதப்படுகிறார். தன்னலமற்ற தலைவரான அவர், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமையாகவும் திகழ்ந்தார்.

காந்தியின் உண்மையான சீடர் நேரு. காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓருயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

தேசத்தின் விருப்பத் தேர்வு

இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலால் வியந்து போற்றப்பட்ட உறுதிக்குச் சொந்தக்காரர் நேரு. இந்தியாவின் முதல் பிரதமராக படேலை காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் முன்மொழிந்தபோது, “நீங்கள் வேண்டுமானால் என்னைப் பிரதமராக்க விரும்பலாம்.ஆனால், நான் உட்பட இந்தத் தேசத்து மக்களின் ஒரே விருப்பத்தேர்வு நேரு மட்டுமே” என்று படேல் மறுத்தது அதற்குச் சான்று.

சிந்தனைக் களமான சிறைச்சாலை

அளப்பரிய அறிவும் தெளிவான சிந்தனையும் மரபின் வழி அவருக்கு வந்த கொடைகள். தொலைநோக்குப் பார்வையும் நவீனமும் நாகரிகமும் இறுதிவரை அவரை விட்டு அகலாமல் பயணித்தன. பலமுறை சிறை சென்றுள்ளார். ஆனால், ஒருமுறைகூட அவர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.

சிறையைக் கண்டு நேரு அஞ்சவில்லை. தன்னையும் தனது நாட்டையும் வடிவமைக்கும் களமாகச் சிறையை அவர் மாற்றினார். சிறையில் இருந்த காலத்தில் அதிகம் படித்தார். தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தாக்கினார். சுதந்திரப் போராட்டத்துக்கான தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார். சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை வார்த்தெடுத்து வழிநடத்துவதே தனக்கு முன்னிருக்கும் சவால் என்பதை நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். கல்லாமையும் அறியாமையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகள் என அவர் உணர்ந்திருந்தார். அவற்றைத் தரமான கல்வியால் மட்டுமே களைய முடியுமென நம்பினார்.

நேரு தொடங்கிய திட்டங்கள்

விவசாயம்

  • 1957: மத்தியப் பொருள் கிடங்குக் கழகம் தொடங்கப்பட்டது. விவசாய உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க இது உதவியது.
  • 1964: இந்திய உணவுக் கழகம் (FCI) அமைக்கப்பட்டது.

நீர்ப் பாசனம்

  • 1948: தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம்
  • 1954: ஜூலை 8 அன்று உலகின் மிகப்பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பை நேரு தொடங்கிவைத்தார்
  • 1955: அக்டோபர் 15 அன்று கொனார் அணையைத் திறந்து வைத்தார்.
  • 1960: நாகர்ஜுனா சாகர் அணைக் கட்டுமானம் நிறைவடைந்தது.
  • 1960: சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 1963: ஜனவரி 7 அன்று வாரணாசி அருகே ரிஹந்த் அணையைப் தொடங்கிவைத்தார்.
  • 1963 அக்டோபர் 22 அன்று, 740 அடி உயர பக்ரா நங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தொழில்

  • 1948: தொலைபேசி சாதனங்களைத் தயாரிக்க பெங்களூரில் இந்தியத் தொலைபேசித் தொழிலகம் (The Indian Telephone Industries) அமைக்கப்பட்டது.
  • 1950: நவம்பர் 1 அன்று, சித்தரஞ்சன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலையைத் தொடங்கிவைத்தார்.
  • 1951: தொழில் வளர்ச்சி, ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1952: சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) நிறுவப்பட்டது.
  • 1952: மார்ச் 2 அன்று, சிந்திரி உரத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1953: ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் உபகரணங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.
  • 1954: அரசாங்கத்திற்குச் சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலைக்கு ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • 1955: ஜூன் 15 அன்று, இரும்பு, எஃகு அமைச்சகம் உருவானது.
  • 1955: இந்தியாவின் முதல் பத்திரிகை காகித ஆலை (News Print), மத்தியப் பிரதேசத்தில் நேபா நகரில் ஜனவரி 11 அன்று உற்பத்தியைத் தொடங்கியது..
  • 1955: பெங்களூரில் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) ஆலையை ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
  • 1955: வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை (LPG) பாரத் பெட்ரோலியம் லிமிடெட் இந்தியாவில் முதன்முதலில் சந்தைப்படுத்தியது.
  • 1955:தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (Industrial Credit and Investment Corporation – ICIC) அமைக்கப்பட்டது.
  • 1956: போபாலில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) லண்டன் தொழில் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.
  • 1958: டிசம்பரில், இந்திய அரசாங்கம் கனரகப் பொறியியல் கழகத்தை (Heavy Engineering Corporation) அமைத்தது.
  • 1959: ரூர்கேலா (பிப்ரவரி 3), பிலாய் (பிப்ரவரி 4), துர்காப்பூர் (டிசம்பர் 29), இரும்பு உருக்கு ஆலைகளின் முதல் ஊது உலைகள் தொடங்கிவைக்கப்பட்டன.
  • 1959: இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation – IOC) விற்பனை அமைப்பாக உருவானது.
  • 1959: பாரத் இரும்புக்குழாய் நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • 1960: ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் ஊட்டியில் அமைக்கப்பட்டது.
  • 1960: ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட், பொதுத்துறை நிறுவனமாக உருவானது.
  • 1962: மைசூர் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட கோலார் தங்கச்சுரங்கம், இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • 1963: சித்தரஞ்சனில் கட்டப்பட்ட பயணிகள் ரயில் எஞ்ஜின் தயாரிப்பு நிறுவனப் பணிகள் மார்ச் 11 அன்று தொடங்கின.
  • 1963: வாரணாசி டீசல் எஞ்சின் பணிமனையில் ரயில்வே டீசல் எஞ்சின் உற்பத்தி தொடங்கியது. உள்நாட்டிலேயே முதன்முதலாக டீசல் எஞ்ஜின்கள் தயாரிக்கப்பட்டன.
  • 1963: கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது.

உள்கட்டமைப்பு

  • 1951: தில்லி – மாஸ்கோ நேரடித் தொலைபேசித் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது.
  • 1951: கிராமப்புற அஞ்சலகங்களில் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
  • 1952: ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது ஒரு முழுமையான பொதுத்துறை நிறுவனமாக 1961இல் மாற்றம் கண்டது.
  • 1958: ஜூலை மாதம், தண்டகாரண்ய மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க இந்திய அரசு முடிவு மேற்கொண்டது.
  • 1960: மார்ச் 15 அன்று, சம்பல் நதியின் மீது பாலம் திறக்கப்பட்டது. நதியின் ஆழத்திலிருந்து 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் உலகிலேயே உயரமான பாலங்களில் ஒன்றாகும்.
  • 1962: ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) உருவாக்கப்பட்டது.
  • 1964: அஸ்ஸாமில் சுபன்ஸ்ரீ ஆற்றின் மீது இரண்டாவது மிக நீளமான ரயில்வே பாலம் திறந்துவைக்கப்பட்டது.

மின் உற்பத்தி

  • 1953: பிப்ரவரி 21 அன்று, திலாயா அணையையும், பொக்காரோ மின் நிலையத்தையும் பிரதமர் நேரு திறந்துவைத்தார்.
  • 1958: தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் மெய்த்தன் நீர்மின் உற்பத்தி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • 1961: இயற்கை எரிவாயுமூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை ஆசியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாமின் தூலியாஜானில் ஆயில் இந்தியா லிமிடெட் நிர்மாணித்தது.

போக்குவரத்து

  • 1953: ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்சும் உருவாக்கப்பட்டன. எட்டு உள்நாட்டு விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. இதில் 99 வகைப்பட்ட வானூர்திகள் செயல்பட்டன.
  • 1957: விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது பயணியர், சரக்குக் கப்பல் எம்.வி. அந்தமான் கட்டப்பட்டது.

கல்வி

  • 1947: பஞ்சாப், ராஜஸ்தான் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன.
  • 1948: அக்டோபர் 10 அன்று, பம்பாயில் விமானப் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டது.
  • 1948: குவஹாத்தி, காஷ்மீர் பல்கலைக்கழகங்கள் உருவாயின.
  • 1950: அஹமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் உருவாயிற்று.
  • 1952: பிஹார் பல்கலைக்கழகம் உருவானது.
  • 1953: பல்கலைக்கழக மானியக் குழு அமைந்தது (University Grant Commission – UGC).
  • 1954: செப்டம்பர் 2 அன்று, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் உருவானது. இது நாட்டின் 31ஆவது பல்கலைக்கழகம் ஆகும்.
  • 1954: கலைகளுக்கான தேசிய அகாடமியாக லலித் கலா அகாடமி உருவானது.
  • 1955: இடைநிலைக் கல்விக்கான அகில இந்தியக் குழு உருவானது.
  • 1955: சர்தார் படேல் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
  • 1958: ஜூலை 25 அன்று பம்பாயில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (ஐவு) அமைக்கப்பட்டது.
  • 1959: ஜூலை 31 அன்று சென்னை கிண்டியில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT) மேற்கு ஜெர்மனி அரசின் கூட்டுறவுடன் அமைக்கப்பட்டது.
  • 1960: கான்பூரில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT) அமைக்கப்பட்டது
  • 1961: தில்லியில் இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT) பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது
  • 1963: ஜனவரி 22 அன்று பார்வையற்றோருக்கான தேசிய நூலகம் டேராடூனில் அமைக்கப்பட்டது. இந்த வகையில் அமைந்த முதல் நூலகமாகும் இது.
  • 1964: பிலானியில் பிர்லா தொழில் நுட்ப மற்றும் அறிவியல் கழகம் பதிவு செய்யப்பட்டது.
  • 1964: பிரதமரின் அலுவல் இல்லமான தீன்மூர்த்தி பவன் அருங்காட்சியகமாக ஜுன் 27இல் மாற்றப்பட்டது. ஒரு நூலகமும், கோளரங்கமும் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டன.

ஆராய்ச்சி, தொழில் நுட்பம்

  • 1947: மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய உள்நாட்டு மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும் கல்கத்தாவில் அமைக்கப்பட்டன.
  • 1950: தேசிய வேதியியல் ஆய்வகம் பிரதமர் நேருவால் புனேயில் ஜனவரி 3 அன்று திறந்துவைக்கப்பட்டது.
  • 1952: மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute) புதுதில்லியில் உருவானது.
  • 1953: மத்திய கட்டிட ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் 12 அன்று ரூர்க்கியில் உருவானது.
  • 1956: ஆசியாவிலேயே முதலாவதான அணுஉலை அப்சரா, டிராம்பேயில் ஆகஸ்ட் 4 அன்று செயல்படத் தொடங்கியது.
  • 1957: பாபா அணு ஆராய்ச்சி மையம் டிராம்பேயில் திறக்கப்பட்டது. 26 ஜனவரியில் அணுஉலை தொடங்கி வைக்கப்பட்டது.
  • 1960: ஆசியாவிலேயே பெரியதான கனடா – இந்தியா அணுஉலை, மின் உற்பத்தியை ஜூலை 10 அன்று தொடங்கியது.
  • 1963: தானே வழியறிந்து பறந்து செல்லும் ராக்கெட், தும்பாவில் உள்ள ஏவு மையத்தில் இருந்து நவம்பர் 21 அன்று செலுத்தப்பட்டது.

சமூக நலம்

  • 1947: நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி இது இயற்றப்பட்டது.
  • 1949: தொழிற்சாலை சட்டம் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. சுகாதாரம், பாதுகாப்பு, தொழிலாளர் நலம், இளம் வயதினரை வேலைக்கு அமர்த்துதல், பணி நேரம் ஆகியவை பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதனால் 30 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றனர்.
  • 1956: ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation – LIC) தேசியமயமாக்கப்பட்டது.

சட்டம், நீதி

  • 1951: சுரங்கங்கள் சட்டம் நிறைவேறியது.
  • 1952: தேசிய வனக் கொள்கை வெளியிடப்பட்டது.
  • 1953: தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability Offence Act) நிறைவேறியது.
  • 1954: சாதி மறுப்பு , மதமறுப்புத் திருமணங்களை, சிறப்புத் திருமணச் சட்டம் 1954இல் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கியது. பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து பெறுவதையும் அறிமுகப்படுத்தியது.
  • 1955: குடியுரிமை மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.
  • 1955: மே 5 அன்று, இந்து திருமணச் சட்டம் நிறைவேறியது. சட்டப்படி ஒருதாரம் மட்டுமே செல்லுபடியாகும். இந்து திருமணச் சட்டத்தில் அதுவரை இல்லாதிருந்த விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. குறைந்தபட்சத் திருமண வயது ஆண்களுக்கு 18 ஆகவும், பெண்களுக்கு 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
  • 1955: இந்து தனிநபர் மசோதா (Hindu Code Bill) நிறைவேறியது.
  • 1956: பெண்களைக் கடத்துவதையும் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்வதையும் தடைசெய்து சட்டம் இயற்றப்பட்டது.
  • 1955: தத்து எடுத்தல் பராமரிப்புச் சட்டம், குழந்தைகளைப் பெண்கள் தத்து எடுத்துக்கொள்வதை அனுமதித்தது. விவாகரத்து பெற்ற பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழிசெய்தது.
  • 1955: இந்து வாரிசு சட்டம் – 1956 (Hindu Succession Act), இந்து ஆண் வாரிசின் சொத்துக்கள் மீது அவரது மகன், மகள், விதவை மனைவி, தாயார் ஆகியோருக்கு உரிமையளிப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. சொத்தில் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பதை இது நிறுவியது.
  • 1959: காலிப்பணியிடங்களை அறிவிக்கை மூலம் தெரிவிக்கவேண்டும் என்பதை பணியாளர் பரிமாற்றச் சட்டம் கட்டாயமாக்கியது.
  • 1960: அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது திருத்தம், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் பாராளுமன்ற மேலவையிலும், சட்டமன்றங்களிலும் 1960 ஜனவரி 26 முதல் மேலும் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீடிக்க வகை செய்தது.
  • 1961: மகப்பேறு ஆதாயச் சட்டம், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை கிடைக்க வகை செய்தது. பணி வழங்கும் அமைப்புகளையும், தேயிலை, காபி தோட்டங்கள் வைத்திருப்பவர்களையும் இந்தச் சட்டம் கட்டாயப்படுத்தியது.
  • வரதட்சணைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • 1962: அரசமைப்புச் சட்டத்தின் 12ஆவது திருத்தம். கோவா, டாமன், டையு ஆகிய பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது.

குருகுலங்களிலிருந்து கல்வியை மீட்டெடுத்தவர்

கல்வியைக் குறித்த நேருவின் பார்வையில் பாயும் ஒளியாக காந்தியச் சிந்தனைகளும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களும் இணைந்திருந்தன. நேருவைப் பொறுத்தவரை கல்வியறிவு என்பது பகுத்தறிவாலும் அனுபவ அறிவாலும் நேர்மறை எண்ணங்களாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று. மதங்களிலிருந்து கல்வியைப் பிரித்தெடுத்து, குருகுலங்களிலிருந்து கல்வியை விடுவித்து, கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றியதில் நேருவுக்குக் கணிசமான பங்குண்டு.

பகுத்தறிவாளரான நேருவுக்கு மதத்தைவிட அறிவியலில்தான் அதிக நம்பிக்கை இருந்தது. தனது அறிவாலும் அனுபவத்தாலும் தர்க்கத்தாலும் அறிந்தவற்றை மட்டுமே உண்மையென எடுத்துவைத்தார். காந்தியைப் போன்று கொள்கையை வலிந்து திணிக்காமல், தனது கொள்கையை மக்களின் கொள்கையாக வெகு இயல்பாக நேருவால் மாற்ற முடிந்ததற்கு, நேருவின் இந்தப் பண்பே காரணம்.

மதங்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதங்களின் மீதான மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தையும் தீவிரமாக எதிர்த்தார். பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட ஒரு அறிவியல் பார்வையை, உயர்ந்த தரத்திலான கல்வியை அளிப்பதன் மூலம் நேரு மக்களிடம் ஏற்படுத்தினார்.

அதனால்தான் ‘மதச்சார்பின்மையை வலியுறுத்திய நேரு ஒரு மதத்தலைவராக இருக்கவில்லை, ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள ஒரு மனிதராக இருந்தார்’ என டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

இந்தியாவின் அடையாளம்

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு, பிறக்கும்போதே வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தார். உலகின் உன்னதக் கல்வி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.கேம்பிரிட்ஜில் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் அவர் அங்கேயே நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும். நாட்டின் மீதிருந்த பற்றின் காரணமாக, லண்டனில் இருக்க இயலாமல், நாட்டுக்குச் சேவையாற்ற ஓடிவந்தார். தன் சொத்துகளை விற்றும் இழந்தும் இங்கே போராடினார். இன்று, அவரது தொலைநோக்குப் பார்வையால் விளைந்த பயன்களின் மேல் ஏறி நின்றுகொண்டுதான் சிலர் நேருவை இகழ்ந்துவருகின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in