ஆங்கிலம் பேசுவது எளிது

ஆங்கிலம் பேசுவது எளிது
Updated on
3 min read

இந்தியாவில் முறைசார் கல்வி கற்கும் அனைவரும் மழலையர் வகுப்புகளிலிருந்தே ஆங்கில மொழியைக் கற்கிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டுமல்லாமல் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படும் ஆங்கிலவழிக் கல்வியையே பெரும்பாலானோர் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலர் கல்விக்காகவும் பணி/தொழில்ரீதியான தேவைகளுக்காகவும் சுய விருப்பம்/ஆர்வத்தின் அடிப்படையிலும் ஆங்கில நூல்கள் பலவற்றை வாசிக்கிறார்கள். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவே தினமும் ஆங்கில நாளிதழ்கள், பருவ இதழ்களை வாசிக்கும் பழக்கமும் பலரிடம் உள்ளது. ஆனால், இவ்வளவு முயற்சி எடுத்து ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்கிறவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமுடிவதில்லை. சிறு வயது முதலே ஆங்கிலம் பயிலும் பலர் ஆங்கிலம் பேசத் தடுமாறுவதே யதார்த்தம். எவ்வளவு மேம்பட்ட ஆங்கிலத்தையும் படித்துப் புரிந்துகொள்ளவும் தவறில்லாமல் எழுதவும் இயன்றவர்கள்கூடத் தம்மால் ஒரு சில நிமிடங்களுக்குக்கூடத் தொடர்ச்சியாகப் பிழையின்றி ஆங்கிலத்தில் பேச முடியாமல் போவதையும் ஆங்கிலத்தில் பேசும்போது உரிய சொற்கள் நினைவுக்கு வராமல் திக்கித் திணறுவதையும் உணர்ந்திருப்பர்.

இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு முதலில் பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிக்கல் சொல்வளத்தில் இல்லை

நம்மில் பலர் நினைப்பதுபோல் சரளமாக ஆங்கிலம் பேச இயலாமல் போவதற்கான காரணம் ஒருவருக்கு போதிய ஆங்கில சொல்வளம் (vocabulary) இல்லாமல் இருப்பது அல்ல. அதாவது ஆங்கிலத்தில் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்காமல் இருப்பது ஆங்கிலம் பேசுவதற்கான தடை அல்ல. ஓரளவு அடிப்படையான சொற்களைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலமாகவே தவறில்லாத எளிய ஆங்கில உடையாடலை மேற்கொண்டுவிட முடியும்.

ஆங்கிலம் பேசும்போது தடுமாறுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் நம் உளவியல் சார்ந்தவையே. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

புதியவை குறித்த தயக்கம்

என்னதான் சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் கற்றுக்கொண்டாலும் ஆங்கிலம் பேசுவது என்பது நமக்குப் புதிய விஷயம்தான். அன்றாடம் தாய்மொழியில் பேசிப் பழகிய நமக்கு ஆங்கிலம் பேசுவது புதிய விஷயம்தான். புதிய விஷயங்களைத் தொடங்குவது குறித்த தயக்கம் ஆங்கிலம் பேசுவதில் ஏற்படும் தடுமாற்றத்தை விளைவிக்கும் முதல் காரணியாகிறது.

வசதிக்கு பழகிவிட்ட மனநிலை

தாய்மொழி அல்லது நாம் அன்றாடம் பேசும் நமக்கு நன்கு தெரிந்த மொழியில் பேசுவது வசதியானது. மனித மனம் எப்போதும் வசதிக்குப் பழக்கப்பட்டு அதையே பின்பற்றும் மனநிலை நிலைத்துவிடும் இயல்பைக் கொண்டது. இந்த வசதியின் எல்லைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பழக மனம் தயங்குகிறது.

நம்பிக்கை முக்கியம்

இதுபோன்ற ஆங்கிலம் பேசுவது தொடர்பான வேறு காரணங்களால் விளையும் தயக்கம், பதற்றம், பயம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவது அவசியமானது. முதலில் நம்மால் ஒரு விஷயத்தை நம் தாய்மொழியில் தெரிவிக்க முடிகிறதென்றால் ஆங்கிலத்திலும் அதைத் தெரிவிக்க முடியும் என்று மனதார நம்ப வேண்டும். அடுத்ததாக ஆங்கிலத்தில் பேசுவதால் விளையும் நன்மைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம். இன்றைய உலகில் தகவல் தொடர்பு (communication) இன்றியமையாத திறன். நடைமுறையில் கிட்டத்தட்ட உலகத்தின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் சர்வதேச எல்லைகளைக் கடந்து சாதிக்கவும் ஆங்கிலம் கட்டாயத் தேவையாகிறது. வெளிநாட்டவருடன் பேச, அவர்களுடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள ஆங்கிலம் ஒரு பாலமாகிறது. எனவே, ஆங்கிலம் பேசுவதால் ஏராளமான நன்மைகள் கடைக்கின்றன. ஆங்கிலம் பேச முடியும் என்கிற தன்னம்பிக்கையும் ஆங்கிலம் பேசுவதன் நன்மைகள் குறித்த சிந்தனையும் ஆங்கிலம் பேசுவது குறித்த தயக்கங்களையும் மனத் தடைகளையும் களைவதற்கு மிகப் பெரிய பங்காற்ற முடியும்.

சரி இந்தத் தயக்கங்களைக் கடந்துவிட்டோம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டுவிட்டோம், ஆங்கிலம் பேசுவதன் நன்மைகளையும் முழுமையாக உள்வாங்கிவிட்டோம். இவற்றின் மூலமாக மட்டும் ஆங்கிலம் பேசிவிட முடியுமா? அதற்கென்று சில பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றையும் தெரிந்துகொள்வோம்.

நிலைக்கண்ணாடி பயிற்சி

தனக்குத் தானே பேசிக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்னும் சிந்தனைக்கு விடைகொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வெற்றிகரமான சொற்பொழிவாளர்கள், அரசியல் கருத்தாளர்கள் உள்படப் பொது நிகழ்சிகளில் பேசும் பலரும் நிலைக்கண்ணாடியின் முன் நின்று தனக்குத் தானே பேசிப் பார்த்துப் பயிற்சி செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவதற்கு இந்த வழிமுறை பெரிதும் உதவக் கூடும். ஆங்கிலம் பேசுவது இயல்பானது என்று நமது மனத்தை பழக்கவும் சரியான சொற்களை நினைவுக்குக் கொண்டுவந்து எடுத்துக் கோத்துப் பேசுவதற்கும் இந்தப் பயிற்சி பெரிய அளவில் கைகொடுக்கும்.

காணொளிப் பதிவுப் பயிற்சி

அடுத்ததாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணொளிப் பதிவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசியதைத் திரும்பக் கேட்பதன் மூலம் என்னென்ன தவறு செய்கிறீர்கள், எங்கெங்கு எதற்கெல்லாம் தடுமாறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்சினைகளைக் களைய இது பெரிதும் உதவும். குரல் பதிவு செய்துகொண்டால் போதாதா என்று சிலருக்குத் தோன்றலாம். போதாது என்பதே அதற்கான பதில். ஒருவருடனான நேர்ப்பேச்சில் அல்லது முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசும் காணொளி உரையாடல்களில் பேசுகிறவரின் முகபாவமும் உடல்மொழியும் பிறரால் கவனிக்கப்படும். தகவல் தொடர்புத் திறன் என்பது பேச்சைத் தாண்டி இதுபோன்ற விஷயங்களையும் உள்ளடக்கியதுதான். எனவே, ஆங்கிலம் பேசும்போது தன்னம்பிக்கையுடன் தோன்றுவதற்கும் முக பாவங்களின் வழியாக நம்முடைய பதற்றம் வெளிப்படாமல் இருப்பதற்கும் காணொளிப் பதிவு செய்து திருத்திக்கொள்வது அவசியம்.

சப்டைட்டில் பயிற்சி

இன்று ஓடிடியில் சர்வதேசத் திரைப்படங்களையும் வலைத்தொடர்களையும் பார்க்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் படைப்புகளை ஆங்கில சப்டைட்டிலுடன்தான் பார்க்கிறோம். தமிழ்ப் படங்களும்கூட சப்டைட்டிலுடன் கிடைக்கின்றன. மொழி நமக்குத் தெரியும் என்றாலும் சப்டைட்டிலுடன் பாருங்கள். அதன் மூலம் தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எப்படிப் பேசுவது என்னும் பயிற்சி கிடைக்கும். அப்படிப் பார்க்கும்போது உங்களால் இதுவரை ஆங்கிலத்தில் சொல்லவே முடியாது என்று நினைத்த தமிழ் வாக்கியங்களை ஆங்கில சப்டைட்டிலில் பார்த்தவுடன் காணொளியைச் சற்று நிறுத்திவிட்டு அந்த ஆங்கில வரியை உரக்கச் சொல்லிப் பாருங்கள். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு இதுவும் உதவும்.

புலமைக்கு அவசரம் வேண்டாம்

எந்த மொழியிலும் புலமை பெற முயல்வது நல்ல விஷயம்தான். மொழிப்புலமைக்கு அம்மொழியில் புதிய சொற்களைத் தெரிந்துகொள்வது அத்தியாவசியமானது. ஆனால், சிலர் தாம் கற்றுக்கொள்ளும் புதிய சொற்களைச் சாதாரணமாகப் பேசும்போது வலிந்து திணிப்பார்கள். ஆங்கிலம் பேசும் விஷயத்தில் பலர் செய்யும் தவறு இதுதான். நம்முடைய தாய்மொழியில் அல்லது நமக்கு நன்கு தெரிந்த மொழியில் நாம் இந்தத் தவறைப் பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மட்டும் புதிய சொற்களை அதுவும் அரிதான சொற்களைப் பேச்சினிடையே செருகுவது நம்முடைய புலமையை வெளிப்படுத்தும் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். ஆங்கிலம் பேசப் பயிற்சி எடுக்கும் நிலையில் இருப்போர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயம் இது. மேம்பட்ட சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில்லை. ஆனால், அது இயல்பானதாக இருக்க வேண்டும். சாதாரண பேச்சில் அரிதான சொற்களைப் பயன்படுத்துவது புலமையை வலிந்து வெளிப்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். நன்கு பேசக் கற்றுக்கொண்டுவிட்டால் புலமையும் தானாகச் சேர்ந்துகொள்ளும். அப்போது மிக அரிதான சொற்களும் நம் பேச்சுமொழியின் இயல்பான அங்கமாகிவிடும்.

நம்முடைய முதல் இலக்கு ஆங்கிலம் மட்டும் பேசத் தெரிந்தவருக்குத் தெளிவாகப் புரியக் கூடிய விதத்தில் தவறில்லாமலும் தடுமாற்றமின்றியும் ஆங்கிலம் பேசுவது என்பதாகவே இருக்க வேண்டும். இடைவிடா முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் பேசுவதும் எளிதுதான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in