

இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் ‘ககன்யான்’. அதிக செலவு பிடிக்கும் திட்டம் இது. ஆபத்தானதும்கூட. ஏற்கெனவே விண்வெளி அறிவியல் சார்ந்த பல சாதனைகளைப் புரிந்துள்ள இஸ்ரோ, ககன்யான் திட்டத்தை இந்த ஆண்டில் நிறைவேற்ற முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்தே இந்தத் திட்டம் முழுமையான செயல்முறைக்கு வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையை இஸ்ரோ கையாளத் தொடங்கியிருக்கிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்திய ராக்கெட் 2024ஆம் ஆண்டு இறுதி வரை செலுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, அனைத்துப் பாதுகாப்பு சோதனைகளையும் இஸ்ரோ வெற்றிகரமாக முடித்தால் 2024க்குப் பிறகு இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் செல்வார்கள்.
சாத்தியமற்ற இலக்கு
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டத்தை 2018, ஆகஸ்ட் 15 சுதந்திர நாளன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டை 2022இல் கொண்டாடும்போது, இந்தியர் ஒருவர் விண்வெளிப் பயணத்தில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என்று பெருமிதத்துடன் அவர் கூறியிருந்தார். ககன்யான் திட்டத்துக்காக ரூ. 9,023 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகள் என்கிற குறுகிய காலக்கெடுவுக்குள் இந்த இலக்கை அடைய இஸ்ரோ அப்போது திட்டமிட்டிருந்தது. அதற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளை கோவிட் பெருந்தொற்று எடுத்துக்கொண்டுவிட்டது. இந்தப் பின்னணியில் குறுகிய காலக்கெடுவுக்குள் சாத்தியமற்ற இலக்கை எட்ட முயல்வது, அதில் பயணிக்க உள்ள அறிவியலாளர்கள், விண்வெளிப் பொறியாளர்கள் போன்றோரின் உயிரைப் பணயம் வைக்கும் செயலாகிவிடும்.
பாதுகாப்பை உறுதி செய்வோம்
“விண்வெளிப் பயணம் என்பது சிக்கலானது. அதிலும் ககன்யான் திட்டம் மிகவும் பெரியது, சவால் மிக்கது, ஆபத்து நிறைந்தது. இதில், இலக்கை விரைவாக எட்ட நினைப்பதைவிட, பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம். விண்வெளிக்கு மனிதர்கள் செல்லும் பயணத்தில் ஏற்படும் தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. இதில் முதல் முயற்சி தோல்வி அடைந்தால், அதன் பின்னர் ககன்யான் திட்டமே இல்லாமல் போய்விடும். எனவே, பாதுகாப்பில் எவ்விதச் சமரசமும் இன்றி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிசெய்த பின்னரே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
சோதனை முயற்சி
சுமார் 203 டன் (ஒரு டன் - ஆயிரம் கிலோ) எடையுள்ள ராக்கெட் மோட்டாரின் முதல் தரைதள சோதனையை மே இரண்டாவது வாரத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது. தொடர்ந்து நடைபெறவுள்ள நூற்றுக்கணக்கான சோதனைகளின் தொடக்கம் இது. உள்நாட்டிலேயே தயாரான கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய ராக்கெட்டின் குழுவுக்கான கலம், சேவை பாகம் போன்றவை பரிசோதிக்கப்பட்டுவருகின்றன.
ககன்யான் ராக்கெட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் இன்றியமையாததாக இருக்கும் ‘கைவிட்டு வெளியேறும் அமைப்பு’ (abort-and-escape system) இந்த ஆண்டு இரண்டு முறை சோதிக்கப்பட உள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தால், சிக்கலான இந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சிபெற்று விளங்கும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியாவும் சேரும்.
பணியாளர்கள் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த ககன்யான் ராக்கெட்டின் செயல்பாட்டைச் சோதிப்பதே இந்தச் சோதனையின் நோக்கம். அடுத்த ஆண்டின் மத்தியில்தான் இது சார்ந்த முழு சோதனை நடைபெறும்.
இலக்கை நோக்கிய பயணம்
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் விண்வெளி வீரர்களை இட்டுச்செல்லும் இலக்கை நோக்கி இந்தியா படிப்படியாக முன்னேறிவருகிறது. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.-3 செயற்கைக்கோள் செலுத்தும் வாகனம், 640 டன் எடை கொண்ட ‘பாகுபலி’ ராக்கெட் போன்ற முயற்சிகள் அதை உறுதிசெய்கின்றன.
இந்த விண்வெளிப் பயணத்துக்காக நான்கு விண்வெளி வீரர்களை இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது. அவர்கள் ரஷ்யாவில் அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், ககன்யான் பயணம் தாமதமாகிவிட்டதால், வயதில் இளைய விமானிகளைக் கொண்டு விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை ஒரு பெண் விமானியையும் இணைத்துக்கொள்ள இஸ்ரோ முயலும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி, ககன்யான் ராக்கெட் குழுவுக்கான கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் மட்டுமே பயணிக்க முடியும். அந்த ராக்கெட்டால் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு வாரத்துக்குப் பறக்க முடியும். ஆந்திரப் பிரதேசத்தின் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ககன்யான் ஏவப்படலாம். இந்தியக் கடற்கரை பகுதியில் அது கீழிறங்கலாம்.
சாத்தியப்படும் திட்டம்
ககன்யான் திட்டத்தின் மூலம் நிறைய புதிய தொழில்நுட்பப் புனைவுகள் நடைபெறும். உள்நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மெருகூட்டப்படும். இதன் தொடக்கமாக, அடுத்த சில மாதங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் ‘ஒன்வெப்’ செயற்கைக்கோள் கட்டமைப்பை ஜி.எஸ்.எல்.வி.-3 மூலம் இஸ்ரோ விண்வெளிக்குச் செலுத்த உள்ளது. ககன்யான் திட்டம் நாம் எட்டிவிடக்கூடியதுதான், ஆனால் அதற்குச் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பதே தற்போதைய நிதர்சன நிலை.
ககன்யான் அம்சங்கள்
l 'இன்டர்காஸ்மாஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் சோயுஸ் டி-11 விண்கலத்தில் பயணித்த இந்திய விமானப் படை முன்னாள் விமானி ராகேஷ் சர்மா விண்வெளி சென்ற முதல் இந்தியர்.
l ககன்யானில் மனிதர்கள் இருக்கும் விண்கலப் பகுதியைப் புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப, ஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.-3 எனும் மிகப்பெரிய செயற்கைக்கோள் செலுத்தும் வாகனத்தை இஸ்ரோ பயன்படுத்த உள்ளது.
l 3,700 கிலோ எடையுள்ள மனிதர்களைக் கொண்ட விண்கலன் புவியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் 7 நாட்கள் வரை சுற்றிவரும். அதில் 3 பேர் கொண்ட குழு பயணிக்கலாம்.
l இந்தக் கலன் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் மனிதர்கள் இல்லாத முதல் சோதனை டிசம்பர் 18, 2014 அன்று நடைபெற்றது.
l இந்த விண்கலம் ரஷ்யாவின் சோயுஸ், சீனாவின் ஷென்சோ, நாசாவின் ஒரியன், அப்பல்லோ ஆகிய விண்கலங்களைவிட சிறியது. அமெரிக்காவின் ஜெமினி விண்கலத்தைவிட சற்று பெரியதாக இருக்கும்.
l விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான வசதியை பெங்களூருவில் இஸ்ரோ அமைத்துள்ளது