

நெதர்லாந்தில் பிறந்த வின்செண்ட் வான்கோ என்பவருக்கு இன்று எந்த வித அறிமுகமும் தேவையில்லை. உலகறிந்த மேதை அவர். அவரை, அவரது ஒவியத் திறனை, அதில் அவர் கொண்டிருந்த மேதமையை அறியாதவர்கள் இருக்கும் சாத்தியம் மிகவும் குறைவே.
இருப்பினும், அவர் வாழ்ந்த காலத்தில் இந்த நிலை முற்றிலும் வேறானதாக இருந்தது. அவருடைய பிரமிப்பூட்டும் ஓவியத்திறனை அன்றைய உலகம் அறிந்திருக்கவில்லை. அவர் காலமானதற்குப் பின்னரே அவரது ஒவியத் திறனை உலகம் கண்டறிந்த்து; உலகின் தலைசிறந்த ஒவியர் எனக் கொண்டாட தொடங்கியது. இன்றும் கொண்டாடுகிறது.
வான்கோவின் கடிதம்
வான்கோவை ஓர் ஒப்பற்ற ஒவியர் என்கிற கருத்தியலுக்குள் மட்டும் சுருக்குவது ஏற்புடையதல்ல. அவர் ஒர் ஒப்பற்ற மனிதர். மனிதர்களை அவர் அளவுக்கு நேசித்தவர்கள் வெகுச் சிலரே. மனிதர்களை நேசிப்பதே கலை வடிவின் உச்சம் என்று நம்பியவர்; சொன்னவர்; அதன் படி வாழ்ந்தவர். 150 அண்டுகளுக்கு முன்னர், அக்டோடபர் 2, 1884இல் வான்கோ அவருடைய சகோதரருக்கு எழுதிய கடிதமே அதற்குச் சான்று.
அந்தக் கடிதம் அழகிய நடையில் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டு இருந்தது. வான்கோவின் உள்ளக்கிடக்கில் நிறைந்திருந்த மனிதநேயம் அதன் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிரம்பி வழிகிறது. அதன் சாராம்சம் இங்கே:
தவறுகளைக் கண்டு அஞ்சாதே
சுறுசுறுப்புடன் இருக்கவும், உயிர்ப்புடன் வாழவும் நீ விரும்பினால், சில நேரங்களில் ஏதாவது தவறு செய்யவும் பயப்படக்கூடாது. தவறுகளைக் கண்டு அஞ்சக்கூடாது, நாணக்கூடாது. நல்லவராக வாழ்வது என்பது எந்தத் தீங்கும் செய்யாமல் இருப்பதே என்று பலர் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். அது ஒரு பொய். அது நம்மை ஒரு தேக்க நிலைக்கு இட்டுச் செல்லும். நம் வாழ்க்கையின் உயிர்ப்புநிலையை அது அபகரித்துவிடும்.
வெற்று கேன்வாஸ்
உன் முன் ஒரு வெற்று கேன்வாஸ் இருந்தால், அதன் வெறுமையை உனது கிறுக்கல்களால் நிரப்பிவிடு. உனது கிறுக்கல்கள், அந்த வெறுமையை விட மேலானவை.
ஓர் ஓவியனிடம் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்துவதே வெற்று கேன்வாஸ். அதை வெறுமனே வெறித்து பார்த்துக்கொண்டு நிற்பது எவ்வளவு வலிமிகுந்தது என்று உனக்குத் தெரியாது.
அந்த வெற்று கேன்வாஸ் ஒவியர்கள் குறித்து ஒரு முட்டாள்தனமான பார்வையை வெளிப்படுத்துகிறது. உன் ஒவியத் திறனைக்கொண்டு என் வெறுமையின் அழகை வெல்ல முடியாது என்று அது ஒவியர்களிடம் தெரிவிக்கிறது. சில ஒவியர்கள் இந்த அர்த்தமற்ற வெற்று கூற்றில் மயங்கி மெய்மறந்து நிற்கின்றனர். தங்கள் மேன்மையை மறந்து, தங்களை தாங்களே இழிவுபடுத்தி கொள்கின்றனர்.
பல ஓவியர்கள் வெற்று கேன்வாஸைப் பார்த்துப் பயந்தார்கள். அப்போது துணிச்சலும், உண்மையும் மிகுந்த ஓர் உணர்ச்சிமிக்க ஓவியர் வந்தார். தனது கிறுக்கல்களின் மூலம் அந்த கேன்வாஸின் வெறுமையை துடைத்தெறிந்தார். "உங்களால் முடியாது" என்று சொன்ன அந்த வெற்று கேன்வாஸின் அகங்காரத்தை அடியோடு அழித்தார். இன்று அந்த கேன்வாஸ் உணர்ச்சிமிக்க ஓவியரைப் பார்த்து பயப்படுகிறது.
அர்த்தமற்ற செயல்களும் தேவை
நம் வாழ்க்கையும் அவ்வாறானதே. அது எப்போதும் அர்த்தமற்ற கோட்பாடுகளை ஊக்குவிக்கும். நம் வாழ்க்கை பயணத்தை எல்லையற்ற வெறுமையை நோக்கி திசைதிருப்பும். குழப்பநிலையில் நம்மைத் தேங்கச் செய்யும். குழப்ப நிலையில் தேங்கி நிற்பதும், வெற்று கேன்வாஸை வெறித்து பார்ப்பதும் வெவ்வேறானவை அல்ல.
சூழ்நிலைகள் நம்மை முடங்க செய்தாலும், நம் செயல்பாடுகள் வீண் என அவை உணர்த்தினாலும், உணர்ச்சிமிக்க மனிதர் அதில் தேங்கி நிற்க மாட்டார். தம்மைத் தாழ்த்திக்கொள்ள அவர் ஒருபோதும் விரும்பமாட்டார்.அவரிடம் மிகுந்திருக்கும் நம்பிக்கை, ஆற்றல், நேசம், அரவணைப்பு போன்றவை அவரைத் தேங்கி நிற்க அனுமதிக்காது. அர்த்தமற்ற செயலாகவே இருந்தாலும், அவை அவரை செயலாற்ற வைக்கும்; முன்னகர்த்திச் செல்லும். சுருங்கச் சொன்னால், அவை அவரை வாழவைக்கின்றன