நம்பிக்கையும் தேவை, அவநம்பிக்கையும் தேவை

நம்பிக்கையும் தேவை, அவநம்பிக்கையும் தேவை
Updated on
3 min read

நம்பிக்கையின் எதிர்நிலை அவநம்பிக்கை. மனிதனின் சுயபாதுகாப்பு கேடயங்களில் இந்த அவநம்பிக்கை முக்கியமானது.

மனிதர்களை ஆபத்திலிருந்து காக்கும் மனநிலை இது. ஆனால், ஓர் எல்லையை மீறினால், அது நம் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை முடக்கிவிடும்.

யதார்த்த நிலை

அவநம்பிக்கையை ஆளுமையாகக் கொண்டவர் வாழ்க்கையைக் குறித்து எதிர்மறையான பார்வையைக் கொண்டிருப்பார். இதை அவர் வாழ்க்கையின் யதார்த்த நிலையை நோக்கிச் செல்கிறார் என்றும் கருத முடியும். நம்பிக்கையாளர்களோ அனைத்தையும் நேர்மறையாகப் பார்ப்பார்கள். சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்கிற நம்பிக்கையில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இதை வாழ்க்கையின் யதார்த்த நிலையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

இரண்டும் தேவை

சுருக்கமாகச் சொன்னால், வாழ்வின் இன்றைய யதார்த்த நிலையில் தேங்கி நிற்பதன் மூலம் பாதுகாப்பாக வாழ முயல்பவர் அவநம்பிக்கைவாதிகள். வருவதை எதிர்கொள்வோம் என்கிற துணிவுடன் பாதுகாப்பை உதறியெறிந்து யதார்த்த நிலையின் எல்லைகளை மாற்றியமைக்க முயல்பவர் நம்பிக்கையாளர்கள். இந்த இரண்டு ஆளுமைகளும் மனிதர்களின் இருப்புக்கும் மேன்மைக்கும் தேவை. அவை இரண்டையும் எந்த அளவில் கொண்டிருக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும்; மனத்தின் நலத்தை மேம்படுத்தும்; சமூகத்தின் ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும்.

இயல்புகள்

நம்பிக்கையாளர்கள் எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்புவார்கள். எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும், அதில் தென்படும் சிறு ஒளியை பின் தொடர்ந்து அந்தச் சூழலிருந்து வெளிவர முயல்வார். அவநம்பிக்கைவாதிகள் கெட்டதே நடக்கும் என நம்புவார்கள். அவர் எதிர்பார்ப்பதற்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்தால், சுய சந்தேகத்தில் மூழ்கி, ஆமை போல் கூட்டுக்குள் முடங்கி விடுவார். இதன் காரணமாகவே, அவநம்பிக்கையை தங்கள் இயல்பாகக் கொண்டிருக்க எவரும் விரும்புவது இல்லை.

நன்மையளிக்கும் அவநம்பிக்கை

இந்த எதிர்மறை சிந்தனையை ஆரோக்கியமான அளவில் கொண்டிருப்பது நமக்கு நன்மையை அளிக்கும் என்பதே நிதர்சனம். துன்பம் வரும்போல் சிரிப்பதும், தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றுவதும் எப்போதும் நடைமுறைக்குப் பொருந்தும்வகையில் இருக்காது. அந்த நேரங்களில், சிறிய அளவிலான அவநம்பிக்கையே வாழ்வின் யதார்த்தத்தையும், நம் திறனின் எல்லையையும் நமக்கு உணர்த்தும். காலவிரயத்தையும் செயல் விரயத்தையும் தவிர்க்கும்.

எப்படி அறிவது?

நாம் அதிக அவநம்பிக்கை கொண்டவராக இருக்கிறோமா என்பதக் கண்டறிய உதவும் சில அறிகுறிகள்:

  • நினைத்த காரியம் கைகூடும்போது அல்லது வெற்றியடையும்போது, இது எப்படிச் சாத்தியமானது என நாம் ஆச்சரியப்படுவோம்.
  • தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து, நாம் மிகவும் விரும்பும் செயலில் ஈடுபடாமல் இருப்போம்.
  • எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதில் என்ன தவறு நடக்கலாம் என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம்.
  • நம் செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகளைவிட, அபாயங்களே அதிகம் இருக்கும் என்று நினைப்போம்.
  • நம் திறனை எப்போதும் குறைத்து மதிப்பிடுவோம்.
  • நம் பலத்தை விடக் குறைபாடுகள் அல்லது பலவீனங்களின் மீதே நம்முடைய கவனம் எப்போதும் இருக்கும்.
  • மற்றவர்களின் நம்பிக்கை, நம்மை அடிக்கடி எரிச்சலூட்டும்.
  • அடிக்கடி நம்மைப் பற்றியே எதிர்மறையான பேச்சுகளில் ஈடுபடுவோம்.
  • எல்லா நல்ல விஷயங்களுக்கும் இறுதியில் முடிவு பெற்றே தீரும் என நாம் எப்போதும் கருதுவோம்.
  • சிறப்பான நிலையை நோக்கிச் செல்வதை விட, தற்போது இருக்கும் நிலையில் வாழ்வதே மேல் என எப்போதும் நினைப்பது

இந்த எண்ணங்கள் அனைத்தும் நமக்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது எல்லா நேரத்திலும் நமக்கு இருக்கலாம். எப்படி இருப்பினும், அவநம்பிக்கைவாதியாக இருந்தால், இந்த வகையான சிந்தனைகள் ஓரளாவது நம்மிடம் எப்போதும் இருக்கும்

ஏன் ஏற்படுகிறது?

அதிகமாகவோ, குறைவாகவோ எதிர்மறையான ஆளுமையுடன் நாம் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சில:

  • மரபியல் காரணிகள்
  • குடும்ப அமைப்பு
  • கடந்த கால அனுபவங்கள்
  • சமூக நிலை, சுற்றுச்சூழல் காரணிகள்.

அவநம்பிக்கையின் நன்மைகள்

  • ஆபத்தான சூழலில், நம் செயல்பாடுகளை நிறுத்துவதன் மூலம் இது நம்மைக் காக்கும்
  • குறைகளை உற்றுநோக்குவது அதன் இயல்பு என்பதால், நம் திட்டமிடல்கள் எப்போதும் குறைகள் அற்று இருக்கும்.
  • பாதுகாப்பான சூழலை அது எப்போதும் உருவாக்கிக் கொடுக்கும்
  • துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆயுத்த நிலையை எப்போதும் நமக்கு அளிக்கும்
  • 2013இல் நடத்தப்பட்ட உளவியல் ஆய்வு, இருப்பது போதும் எனும் அதன் அடிப்படை இயல்பினால், மனிதர்களின் உடல்நலன் மேம்பட்டு இருப்பதையும், ஆயுள் அதிகரித்து இருப்பதையும் கண்டறிந்துள்ளது.

பாதகங்கள்

  • குறைவான சமூக ஆதரவு
  • மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன் குறைவு
  • அபரிமித அச்சம்
  • மனச்சோர்வு
  • மன பதட்டம்
  • மனஆரோக்கிய சீர்கேடு

நடுநிலையே முக்கியம்

செல்வத்தில் செழித்து வளமாக வாழும் மனிதர்களை விட, போதும் என்கிற எண்ணத்துடன் வறுமையில் உழலும் மனிதர்களே திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனப் பல ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. இதற்காக, வறுமையில் உழல்வதே நல்லது என்றும், செல்வத்தில் செழிப்பது தவறு என்றும் முடிவு செய்துவிட முடியாது அல்லவா?

வறியவர்களுக்கு இருப்பது போதாது என்கிற எண்ணமும், இருக்கும் நிலையிலிருந்து சற்று மேம்படும் முனைப்பும் இருக்க வேண்டும். அதே போன்றே, செல்வந்தர்களிடம் இருப்பது போதும் என்கிற எண்ணம் சிறிதளவு இருக்க வேண்டும். இருக்கும் நிலையில் அவ்வப்போது தேங்கி வாழ்க்கையை ரசிக்கும் மனநிலையை அவர்கள் நாடிச் செல்ல வேண்டும். இதுவே சிறந்த நிலை.

அதாவது, இங்கே எதிர்மறை எண்ணங்களும், நேர்மறை எண்ணங்களும் தேவையானவையாக உள்ளன. இவை எல்லைமீறும்போதே பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நம்பிக்கை நிலையின் உச்சத்திலிருப்பதும், அவநம்பிக்கை நிலையின் உச்சத்திலிருப்பதும் கேடானவையே. அவை இரண்டுமே ஆபத்தானவை. அவை நம் வாழ்க்கையைச் சீரழிக்கும். சுற்றத்தையும் பாதிக்கும். நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகிய நிலைகளின் மையத்தில் இருப்பதே நம் வாழ்க்கைக்கும், சமூகத்தின் மேன்மைக்கும் ஏற்ற நிலை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in