

தமிழின் முன்னோடி சித்த மருத்துவர், சிந்தனையாளர், கல்வியாளர், ஆய்வாளர் அயோத்திதாச பண்டிதர். அவருடைய பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்களின் தொகுப்பு:
சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கியங்களின் மறுவாசிப்பிலும் புலமை பெற்றிருந்தவர். திராவிட இயக்கக் கருத்தியலின் முன்னோடி. 1854 மே 20 அன்று சென்னையில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன்.
இவருடைய தாத்தா, ஜார்ஜ் ஹாரிங்டன் என்கிற ஆங்கிலேய அதிகாரியின் பட்லராகப் பணிபுரிந்தவர். உதகமண்டலத்தில் ஹாரிங்டனுடன் அவர் வசித்துவந்ததால், சிறுவனாயிருந்த காத்தவராயன் அங்கு தங்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆங்கில மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் அங்கு கற்றுக்கொண்டார். தவிர தமிழ், தெலுங்கு, பாலி மொழிகளிலும் புலமை பெற்றார்.
அயோத்திதாசரின் தமிழாசிரியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதர். அவர் மேல்கொண்ட பற்றினால், காத்தவராயன் என்கிற பெயரை அயோத்திதாசர் என
மாற்றிக்கொண்டார்.
இவருக்கு சம்ஸ்கிருத மொழிப் புலமையும், சித்த மருத்துவப் புலமையும் ஏற்படுவதற்கு தேனாம்பேட்டை கவிராஜ பண்டிதரே காரணம்.
திருக்குறள், நாலடியார் போன்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை இவர் பாதுகாத்து வைத்திருந்தார். பிரிட்டிஷ் அதிகாரியான எல்லிஸ் துரையிடம் அவற்றைக் கொடுக்கவே, அவர் நூல் வடிவில் அச்சிட்டு வெளியிட்டார்.
‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.கலியாணசுந்தரனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட இரு சந்தர்ப்பங்களில், தக்க மருத்துவ சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றிய பெருமை அயோத்திதாசருக்கு உண்டு. இதை திரு.வி.க.வே தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
உதகமண்டலத்தில் இருந்தபோது, பழங்குடி மக்களிடம் நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்த இவர், ‘அத்வைதானந்த சபை’ என்கிற அமைப்பை 1875ஆம் ஆண்டில் உருவாக்கினார். அதே ஆண்டிலேயே தனிநபராகப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை பிரிட்டிஷ் அரசு தொடங்கியபோது, பட்டியல் சாதி - பழங்குடி மக்கள் அனைவரையும் ‘பூர்வத்தமிழர்’ என்றே பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கர்னல் ஆல்காட்டுடன் இணைந்து ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஐந்து பள்ளிகளை இவர் நிறுவினார். தவிர, பிரம்ம ஞான சபையின் நிறுவனர்களான பிளாவட்ஸ்கி அம்மையார், ஆனிபெசன்ட், கர்னல் ஆல்காட் போன்றோரின் ஒத்துழைப்புடனும், அரசின் உதவியுடனும் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ராயபுரம், ஏழுகிணறு உள்படப் பல இடங்களில் பள்ளிகளைத் தொடங்க அயோத்திதாசர் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
‘ஒரு பைசாத் தமிழன்’ வார இதழ், 1907இல் இருந்து 1914 வரை இவரால் வெளியிடப்பட்டது. 26.08.1908 முதல் ‘தமிழன்’ என்கற பெயரில் இவ்விதழ் வந்துள்ளது.
அயோத்திதாசர் மறைந்தபின், அவருடைய மகன் பட்டாபிராம், 1917ஆம் ஆண்டுவரை இதழை நடத்தி வந்துள்ளார். அதன் பின் அவரால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1926 முதல் 1935ஆம் ஆண்டுவரை கோலாரில் இருந்து அயோத்திதாசரின் உற்ற நண்பர்களான ஜி.அப்பாதுரை, பி.எம்.ராஜரத்தினம் ஆகியோரால் ‘தமிழன்’ இதழ் நடத்தப்பட்டுள்ளது.
தமிழர் வரலாறு, சமயம், இலக்கியம் பற்றிய அசலான ஆய்வுநூல்களைப் பல நூறு பக்கங்கள் எழுதி சிறுசிறு நூல்களாக அயோத்திதாசர் பதிப்பித்துள்ளார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பூர்வ தமிழ் மக்களின் கல்வி உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடியவராக அயோத்திதாசர் இருந்துள்ளார்.
1914 மே 5 அன்று அயோத்திதாசர் காலமானார்.