

தத்துவ அறிஞர், தர்க்கவியலாளர், கணிதவியலாளர், கல்வியாளர், அரசியலர், பொருளியலாளர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமையான பெட்ரண்ட் ரஸல் 1872 மே 18 அன்று பிறந்தார். அவருடைய 150ஆம் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:
பிரட்டனில் முற்போக்குச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்டவர்களின் குடும்பத்தில் பிறந்தவர் பெட்ரண்ட் ரஸல். அவருடைய தாத்தா ஏர்ல் ரஸல் 1832இல் பிரிட்டிஷ் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது கொண்டுவந்த சட்ட முன்முடிவுதான் அந்நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பின்னர் அவர் பிரிட்டிஷ் பிரதமராகவும் இரண்டு முறை பதவி வகித்தார்.
பெட்ரண்ட் ரஸலின் பெற்றோர் பெண்ணுரிமைக்காகவும் குடும்பக் கட்டுப்பாடு உரிமைக்காகவும் போராடியவர்கள். ரஸல் நான்கு வயதை அடைவதற்கு முன்பே பெற்றோர் இருவரும் காலமாகிவிட்டனர். பாட்டியின் பராமரிப்பில்தான் ரஸல் வளர்ந்தார்.
கல்லூரிப் படிப்பில் கணிதமும் தத்துவமும் அவரது பாடங்களாக இருந்தன. 1930களின் இறுதியில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் வாய்ப்பைப் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகும் வாய்ப்பு கிடைத்ததும் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறினார். தொடர்ந்து வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்.
பதின் பருவத்திலேயே ஸ்டூவர்ட் மில்லைப் படித்தது ரஸலைக் கலகக்காரராக உருவெடுக்கச் செய்தது. சர்ச்சைக்குரிய கருத்தாளராக அறியப்பட்டிருந்தார்.
முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது போருக்கு எதிரான பிரச்சாரகர்களில் ஒருவராக மார்க்ஸியர்கள், சோஷலிஸ்ட்கள், சமாதானத்தை விரும்பிய கிறிஸ்தவ அமைப்பினர், மகளிர் குழுக்கள் ஆகியரோடு இணைந்து செயல்பட்டார். இதனால், பிரிட்டனின் போர்க்கால ஒடுக்குமுறை சட்டங்களின்கீழ் தண்டிக்கப்பட்டார். லண்டனின் ட்ரினிட்டி கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
1917இல் நடந்த ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி வரவேற்ற ரஸல், சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்குச் சென்றார். இடதுசாரி சிந்தனையாளராக இருந்தாலும் ரஷ்யாவில் கம்யூனிஸ அமைப்பின் பெயரில் நிலவும் சர்வாதிகாரத்தின் அபாயங்கள் குறித்து எச்சரித்துத் தனிப் புத்தகம் எழுதினார். சீனாவிலும் சில காலம் தத்துவத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிரான ஆயுதக் குவிப்பை எதிர்த்தார். ஹிட்லரையும் அவருடைய நாஜிப் படைகளின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தோற்கடிக்க போர் தவிர்க்க முடியாத தீங்கு என்று தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
1930களில் இந்திய சுயாட்சிக்காக பிரிட்டனிலிருந்து பிரச்சாரம் செய்துவந்த இந்திய லீக் என்னும் அமைப்பின் தலைவர் வி.வி.கிருஷ்ண மேனின் நண்பராகவும் அவருடைய பணிகளுக்கு உதவுகிறவராகவும் செயல்பட்டார் ரஸல். ரஸலின் கலகக்கார சிந்தனைகள் அவருடைய பல்கலைக்கழக பணிவாய்ப்புகளைத் தடுத்தன. திருமணம், பாலியல் உள்ளிட்ட விஷயங்களில் அவர் வெளிப்படுத்திய கருத்துகளின் காரணமாக சில கல்லூரிகளில் பணியாற்ற அவருக்கு ‘தார்மீக தகுதி’ இல்லை என்று நீதிமன்றங்களே தீர்ப்பளித்தன.
எழுத்து மூலம் வருவாய் ஈட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் அனைத்துத் துறைகள் சார்ந்தும் நிறைய எழுதிக் குவித்தார். ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இயற்பியல், கல்வி, சமயம், குடும்ப அமைப்பு, நீதிமுறை என்று பல துறைகள் சார்ந்து குறிப்பிடத்தக்க நூல்களை ரஸல் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘மேலைநாட்டுத் தத்துவ வரலாறு’ தத்துவ மாணவர்களின் முதன்மையான பாடநூல்களில் ஒன்று. சமய நம்பிக்கைகளைக் குறித்த கடுமையான விமர்சகராக இருந்தார் ரஸல். ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?’ என்கிற அவரது புத்தகம் மிகவும் பிரபலமானது. பல்துறை சார்ந்த குறிப்பிடத்தக்க எழுத்துப் பணிகளைப் பாராட்டி 1950இல் ரஸலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கல்வி முறையானது குழந்தைகளைச் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும் சுதந்திரச் சிந்தனையாளர்களாகவும் சமூகப் பொறுப்பு கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்று கனவுகண்டார். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி அளிக்க வேண்டியதைப் பற்றித் தீவிரமாகப் பேசிய முன்னோடி அவர்.
அறிவுத் துறைகள் பலவற்றில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்திய சிந்தனையாளரான ரஸல் அன்பையும் சமாதானத்தையும் எப்போதும் வலியுறுத்தினார். ‘அறிவோடு அன்பும் சேர்ந்த உலகில்தான் நாகரிகம் தழைத்தோங்கும்’ என்றார். பனிப்போருக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைக் கைவிடக் கோரியும் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் அந்த உணர்வுதான் அவரைப் போராட வைத்தது.
வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நான்கு பெண்களை வாழ்விணையராக ஏற்றுக்கொண்ட ரஸல் நான்காம் மனைவியான எடித் ஃபின்ச் உடன் இறுதிவரை வாழ்ந்தார். 1970 பிப்ரவரி 2 அன்று காலமானார்.