

நம் மீது நமக்குஇருக்கும் பிணைப்பே, நமக்கு இருக்கும் உறவுகளில் மிகவும் முக்கியமானது. இந்த உறவின் தரமே நம் வாழ்க்கையின் தரத்தையும், மனத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும். நம் மீது நாம் கொண்டிருக்கும் உறவும் பிணைப்பும் ஆரோக்கியமற்றதாக இருந்தால், அது நம் சுயமரியாதையைச் சீர்குலைக்கும்; மனத்தின் சமநிலையைப் பாதிக்கும்; மற்றவர்களுடனான உறவையும் ஆரோக்கியமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும். முக்கியமாக, எந்தச் சிறப்பான நிலைக்கும் நாம் தகுதியானவர்கள் இல்லையென்று நம்மை அது நம்பவைக்கும். இதனால், வாழ்வின் மேன்மைக்காக நாம் இதுவரை மேற்கொண்ட கடின போராட்டங்கள் / முயற்சி போன்றவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் நாமே சிறுமைப்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
ஒரு வேலையைச் சிறப்பாக நிறைவேற்றினாலும், அதை நாமே மிகவும் மோசமாக விமர்சித்துக்கொள்வோம். சாத்தியமற்ற குறிக்கோள்களைச் சுயமாக நிர்ணயித்து, அதில் சறுக்கும்போது நாமே நம்மைக் கடுமையாகத் தாழ்த்திக்கொள்வோம். சுயபாதுகாப்பு என்பது சமூகத்தை வெறுக்கும் ஒன்று என்பதாகச் சுருக்கிக்கொள்வோம். உயரிய கொள்கைகளைக் கொண்டவர்கள் என நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, அடிப்படை கடமையிலிருந்தும்வேலையிலிருந்தும் தப்பித்து ஓடும் நிலைக்குச் செல்வோம். இதனால் பாதிக்கப்பட்ட பின்னர், நமக்கு எந்த வேலையும் உத்வேகம் அளிக்காது. எந்த வேலையாக இருந்தாலும், அது எவ்வளவு ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும், இதை ஏன் செய்ய வேண்டும், இதனால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது என நம்பத் தொடங்குவோம். நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் அவ்வாறே நம்பச் செய்ய முயல்வோம். அலுவலகத்தில் பணிபுரிந்தோம் என்றால், ஒட்டுமொத்த பணிச்சூழல் சீரழிவுக்கும் நாமே காரணமாக மாறுவோம்.
அபரிமித வெறுப்பு
நம் மீது நாமே கொள்ளும் இத்தகைய அபரிமித வெறுப்பு நேர்மறை எண்ணங்களை நமக்கு அந்நியமாக்கிவிடும். அறிந்தோ அறியாமலோ எதிர்மறை எண்ணங்கள் நமது இயல்பாகும். அந்த எதிர்மறை எண்ணங்களை நம்மைச் சுற்றியும் பரப்புவோம். அதாவது, நம் மீது நாம் கொள்ளும் சுயவெறுப்பு, நம்மை மட்டுமல்லாமல்; நம் சமூகத்தையும் பாதிக்கும். நம்மையும் நம் சுற்றத்தையும் பாதித்து, அழிவின் வாயிலில் நிறுத்தும் திறன் சுய வெறுப்புக்கு உண்டு. நம்முடைய வாழ்க்கை தலைகீழாக மாறி, வீட்டில் தனியே அமர்ந்து சுவர்களை வெறித்துப் பார்க்கும் நிலைக்குச் சென்ற பிறகு மனநலம் குறித்தும் சுயவெறுப்பு குறித்தும் சிந்திப்பது இழந்த காலத்தை நமக்கு மீட்டுத் தராது. இதை நாம் தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும். இது குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நம் மீது நமக்கு இருக்கும் வெறுப்பை, நேசமாக மாற்றுவதே இந்த நிலையை அடைவதிலிருந்து நம்மைக் காக்கும். சுயவெறுப்பு நம்முள் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்து, நம்மை அழிக்கும். சுய அன்பும் சுயகருணையும் நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்து, எப்போதும் நம்மை அழிவிலிருந்து காக்கும். முக்கியமாக, நம்மை அவை நேசிக்கச் செய்யும். இந்த நேசிப்பே, சமூகத்தின் மீதான நேசிப்பாகப் பின்னர் நிலைபெறும்.
எளிய வழிமுறை
சுயவெறுப்பைக் களைந்து, சுயநேசத்தை வளர்த்தெடுப்பதற்காக, நீங்கள் தடிமனான பெரிய புத்தகங்களைப் படிக்க வேண்டிய தேவையில்லை; இன்றைய நவீன ஆன்மிக குருக்களுக்குப் பின்னர் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. உளவியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட எளிய வழிமுறை ஒன்று அதற்கு இருக்கிறது. NOTE என அழைக்கப்படும் அந்த எளிய வழிமுறை வெறுப்பில் வெந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையானதும்கூட. NOTE என்பது Notice, Observe, Thank, Engage என்பதன் சுருக்கம். இந்த எளிய வழிமுறை, நம்மை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதைக் கண்காணிக்க உதவும். முக்கியமாக, அது நம் மனத்தை முழு விழிப்பு நிலையில் இருக்கச் செய்து, நம்மை ஊக்குவிக்கும்.
N - கவனியுங்கள்
நம்முள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க உதவும் வழிமுறை இது. சுயமரியாதையைக் குறைக்கும் எண்ணங்கள் அல்லது விமர்சனங்கள் நம்முள் எழும்போதே இது கண்டறிய உதவும். சுய உணர்வு, சுயமதிப்பீடு போன்றவற்றை நாமே அறிந்துகொள்ளும் திறன் கொண்டவராக இருப்பதே மன ஆரோக்கியத்தின் அடித்தளம்.
O - உற்றுநோக்குங்கள்
சிந்தனை அல்லது உணர்வை நீங்கள் கவனித்தவுடன், அவற்றைச் சற்று ஆழமாக உற்றுநோக்க வேண்டிய நேரம் இது. எண்ணங்கள் என்ன சொல்கின்றன, அவற்றுடன் என்ன மாதிரியான உணர்வு வெளிப்படுகிறது என்பதைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த உணர்வு நமக்கு முன்பே ஏற்பட்டு இருக்கிறதா, இதன் இடர்பாடு குறித்து யாரேனும் முன்பே நம்மிடம் அக்கறையுடன் தெரிவித்து இருக்கிறார்களா என்பவற்றுக்கான பதிலை நம் நினைவுகளில் தேட வேண்டும். முக்கியமாக இந்த நிலையில், பிரச்சினையின் உள்ளிருந்து உற்று நோக்காமல், வெளியிலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்த்துப் பழக வேண்டும். இது ஒரு எளிய பயிற்சியே. சற்று முயன்றால், அந்தப் பார்வை எளிதில் நமக்குக் கைகூடிவிடும்.
T - நன்றி சொல்லுங்கள்
இது நகைப்பூட்டும் விதமாக இருக்கலாம். ஆனால், நமக்கு நாமே நன்றி சொல்வதேநம்முடைய சுயமதிப்பையும்தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்கும் சிறந்த வழி. அந்த நன்றியை நீங்கள் உங்கள் மனத்துக்குள் அமைதியாகச் சொல்லிக்கொள்ளலாம் அல்லது வெளிப்படையாகச் சத்தமாகவும் சொல்லிக்கொள்ளலாம். அந்த வழிமுறை எப்படியாக இருந்தாலும், இந்த நன்றி உங்களுக்குள் நேர்மறை எண்ணங்களைச் செழிக்கச் செய்யும், உங்களை மனத்தை வலுவூட்டும்.
எதிர்மறை உணர்வு உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கவும் இந்த நன்றி உதவும். நம் நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட சுயபாதுகாப்பு இது. நம் மனம் நன்றாக இருக்கிறதா என்பது நம் மனத்துக்குத் தெரியாது. பிரச்சினையிலிருந்து வெளியேறும் வழிமுறையையும் நம் மனம் எப்போதும் அறிந்திருக்காது. ஆனால், நீங்கள் சொல்லும் நன்றி, உங்கள் மீதான சுயநேசத்தை, கனிவை அதிகரிக்க உதவும். இந்தச் சுயநேசம், மனத்துக்கு அதனுடன் நாம் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை அளிக்கும். அந்த நம்பிக்கை, பிரச்சினையிலிருந்து வெளியேறுவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தையும் ஆற்றலையும் மனத்துக்கு அளிக்கும்.
E – ஈடுபாடு கொள்ளுங்கள்
நாம் எவ்வளவுதான் உறுதியானவராகவும், உள்முகச் சிந்தனையாளராகவும் இருந்தாலும், சுயமதிப்பு / தன்னம்பிக்கை குறைந்த பிறகு சிறிது நேரம் ஒதுக்கி, தனிமையிலிருந்து விடுபட்டு, நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் ஈடுபாடு காட்டுவதே ஆரோக்கியமானது. நண்பர்களுடன் வெளியில் செல்வது, மனத்துக்கு நெருக்கமானவர்களுடன் பேசுவது, வளர்ப்பு பிராணிகளுடன் நேரம் செலவிடுவது, பக்கத்து வீட்டு நாயைச் செல்லமாகக் கொஞ்சுவது போன்றவை நம் மனத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வர உதவும். நம்மைக் கீழ்நிலைக்கு இட்டு செல்லும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும், தீய எண்ணங்களிலிருந்தும் நம் மனத்தின் கவனத்தை இவை திசைதிருப்பும். வெளி உலகத்துடனான தொடர்பு என்பது நம்முடைய கவனத்தை மட்டும் வெறுமனே திசை திருப்பாது. தற்போது எதிர்கொள்ளும் சிறிய, சிறிய குழப்பங்களை விட, நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் வாழ்கையில் நிறைய உள்ளன என்பதையும் நினைவூட்டும்.