பாடப் புத்தகங்கள்: கொஞ்சம் குட்டியூண்டா யோசிக்க வேண்டும்..!

பாடப் புத்தகங்கள்: கொஞ்சம் குட்டியூண்டா யோசிக்க வேண்டும்..!
Updated on
2 min read

புத்தகம் படிப்பது என்றதும் பெரும்பாலும் நமக்கு நினைவுக்கு வருவது பள்ளிக்கூடம், வகுப்பறை, ஆசிரியர், தேர்வு, மதிப்பெண், தேர்ச்சி - இவைதான்..!

புத்தகம் வாசிப்பது, படிப்பது இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. படிப்பது பிறர் தேவைக்கு அல்லது பிறர் நம் மீது திணிக்கும் தேவைக்கு..! ஆனால் வாசிப்பு? நம் தேவை.. நம் விருப்பம்.. நம் தேடல்..! படிப்பது பள்ளியில்.. வாசிப்பது பள்ளிக்கு வெளியில் என்று இருக்கிறது நிலைமை! இரண்டுக்கும் தேவை புத்தகங்கள்..!

முந்தைய காலகட்டங்களில் வந்த பாட புத்தகங்களை ஒப்பிடும்போது இன்றைய பாடநூல் அட்டைகள் வண்ணமயமாக உள்ளன. அதைப் பயன்படுத்தி தான் பாரதியாருக்கு காவி நிறத்தில் முண்டாசு கட்டி விடப்படுகிறது. உள்ளே பக்கங்களும் கூட பல வண்ணங்களில் உள்ளன. தொடக்க வகுப்புகளை பொறுத்தவரை நிறைய, நிறையவே முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். புதிய புதிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. தற்போது உள்ள பாடநூல்களில் விரைவுக் குறியீடு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது குழந்தைகளின் விரிவான கற்றலுக்கு வழிவகுக்கிறது.

பாடநூல்கள் அவ்வப்போது விவாதத்திற்கு வருவதுண்டு. அதுவும் பெரும்பாலும் அதன் உள்ளடக்கம் குறித்து சில கல்வியாளர்கள் சிரமப்பட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது..

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று சொன்னது போல பாடபுத்தகத்தைப் பொறுத்தவரை ஒரு வாசகம் சொல்லலாம்.. "உள்ளே தள்ளுவதெல்லாம் தள்ளி விடல்..!"

ஒவ்வொரு வயதுக்கும் வகுப்புக்கும் தக்கவாறு இத்தனை வார்த்தைகள் என்றெல்லாம் வரையறைகள் உள்ளன. கற்றல் அடைவுகள் சார்ந்து இலக்குகள் உள்ளன. நமக்கு பொதுவாக உள்ள முன்முடிவு என்னவென்றால் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டிற்கு ஒரே முழு முதல் ஆதாரம், துணைக்கருவி எல்லாமே பாட புத்தகம்தான்..! எனவே எல்லாவற்றையும் உள்ளே திணித்து விட வேண்டும் என்று பாடநூல் தயாரிப்புக் குழு நினைக்கிறது; பாடநூலில் அப்படி திணித்து அனுப்பப்பட்டுள்ளதை எல்லாம் சிந்தாமல் சிதறாமல் குழந்தைகளின் மூளைக்குள் திணித்து விட வேண்டும் என்று பள்ளிகளும் நினைக்கின்றன.

ஆசிரியரே வகுப்பறையில் அனைத்துமாக இருக்க வேண்டியதில்லை. அவர் கற்றலுக்கு உதவும் ஏதுவாளராக இருந்தால் போதும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அதே போலதான் பாடநூல்கூட இருக்க வேண்டும். அதுவே அனைத்துமாக இருந்து விடக் கூடாது. பரந்த, விரிந்த உலகில் திரியும் குழந்தைகளை சிறு வகுப்பறைக்குள், ஒரு புத்தகத்திற்கு உள், பின்பக்க கேள்விகளுக்குள் அடைத்து விட நினைக்காமல், சிறு புத்தகத்தில் இருந்து, சிந்தனைச் சிறகு முளைத்து பரந்து விரிந்த வெளி உலகிற்குள் பிரவேசிக்கச் செய்ய வேண்டும்.

பாட புத்தகச் சுமை குறித்து மட்டுமல்லாமல் அதன் உள்ளடக்கச் சுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அந்தந்த வகுப்பிற்கு உரிய அடைவுகளை குழந்தைகள் பெற்றிருக்கவில்லை என்று பல்வேறு ஆய்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கையில் நிறைய நிறைய திணித்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது.

புத்தகச் சுமை குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் பெரிய மாற்றம் ஏதுமில்லாமல்தான் இருக்கின்றது. பாட வேளைகளைத் திட்டமிடுவது தொடங்கி, வகுப்பறை லாக்கர்கள் வரை சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், அளவு.. புத்தகத்தின் அளவு, பக்கங்களின் அளவு - இவை எல்லாம் எந்தச் சட்டத்தின் கீழ் வருகின்றன என்று தெரியவில்லை.. அவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன..! அவ்வளவு பெரிய அளவில் இருக்கின்றன..! பக்கங்களிலும் கூட வார்த்தைகளுக்கு மூச்சுத் திணறும் அளவுக்கு இட நெருக்கடி..! ஆசிரியர்களுக்கேகூட அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன.

சமீபத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட கையடக்க நூல்களை ஒரு சில பள்ளிகளுக்குச் சென்று, வகுப்பறை மேசைகளில் சோதனைக்காக வைத்து பார்த்த போது, அதைத் தொட்டுப் பார்க்க விரும்பாத, கையில் எடுத்துப் பார்க்க விரும்பாத ஒரு குழந்தைகூட வகுப்பறையில் இல்லை..! அவர்களின் குட்டி உலகிற்கு ஓரளவு பொருத்தமாக இருந்ததால் அதை தங்கள் உலகிற்குள் உடனடியாக அனுமதி வழங்கி அதை ஏற்றுக் கொண்டனர்..


அதே போல பாரதி புத்தகாலயம், பயில், வானம், நம் பதிப்பகம் போன்ற இன்னும் பல பதிப்பகங்கள் பல்வேறு வகையான அளவுகளில் நூல்களை வெளியிடுகின்றன. அவை குழந்தைகளை ஈர்க்கின்றன.. புத்தகக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாகின்றன.. வீடுகளில் அதை விரும்பி வாசுக்கின்றனர்.

முதல் பத்தியில் சொன்னதுதான், வாசிக்கும் புத்தகங்கள் வண்ணமயமாகவும் பலவித அளவுகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.. ஆனால் படிக்கும் புத்தகங்கள்..? இன்னும் ’நான் வேறு’ என்று வித்தியாசத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே பாடநூல்கள் தமது முரட்டுத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வகுப்பறைக்குள் வர வேண்டும். இதுவரை எந்தக் குழந்தையும் வேண்டாம் என்று சொல்லவில்லையே என்றால் அங்கு வேறு வழி இல்லை..! மாற்று இல்லை..!

குழந்தைகள் குறித்தும் குழந்தைமை குறித்தும் மேலும் மேலும் கவனம் ஈர்க்கும் விவாதங்கள் மேலெழும்பி வருகின்ற நிலையில், லட்சக்கணக்கான குழந்தைகள் கைகளில் நூலைச் சேர்க்கும் வாய்ப்புள்ள பாடநூல் கழகமும் அரசும் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்..!

கொஞ்சம் குட்டியூண்டா யோசிக்கலாம்..!


- தேனி சுந்தர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in