

இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமையாகத் திகழும் ஆர்.கே.நாராயண் என்று அறியப்படும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணின் நினைவு நாள். சென்னைப் புரசைவாக்கத்தில் 1906-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அவர் பிறந்தார். அப்பா பள்ளி ஆசிரியர். தந்தை வேலை பார்த்து வந்த பள்ளியிலே நாராயணும் படித்தார். குழந்தைப்பருவத்தில் பெரும்பாலும் பாட்டியிடமே வளர்ந்தார். பாட்டியின் வளர்ப்பினாலோ எளிமையான கதை சொல்லும் திறன் அவருடைய இயல்பாக இருந்தது.
காதலுக்கு உதவும் அவருடைய வாழ்க்கை
கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னாட்களில் அதே ஆங்கிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற படைப்புகளைப் படைத்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தன்னுடைய தந்தையைப் போல அவரும் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்த வேலையில் வெறும் ஐந்து நாட்களில் சலிப்புற்ற அவர், அதைத் தூக்கி எறிந்து எழுத்தாளராக மாறினார். புத்தகங்களை எழுதிக் குவிக்கத் தொடங்கினார்.
குறும்பும் எள்ளலும் கொப்பளிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருடைய சொந்த வாழ்க்கை, எப்போதும் சுவாரஸ்யமான சம்பவங்களால் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. கோயம்புத்தூரில் தன்னுடைய சகோதரியின் வீட்டிலிருந்தபோது, அருகில் வசித்த ராஜம் மீது காதல் கொண்டார். அந்தக் காதலை வெற்றியடைச் செய்வதற்காக ராஜத்தின் தந்தையுடன் சிநேகம் வளர்த்தார். இறுதியில் காதலில் வெற்றியடைந்து, திருமணமும் செய்துகொண்டார். இந்த உண்மை நிகழ்வு, அந்நியன் உட்படப் பல திரைபடங்களில் காதல் வெற்றிக்குப் பயன்பட்டு இருக்கிறது.
வலிமிகுந்த அனுபவங்கள்
வாசிப்பதிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு எழுதுவது ஒருபோதும் சிரமமாக இருந்ததில்லை. ஆனால், படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கு மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு இருக்கிறார். அவரின் முதல் கதை, வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட பாக்கெட் மணி இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு அவர் பெற்ற சன்மானம் வெறும் 10 ரூபாய். ஆர். கே. நாராயண் தன்னுடைய முதல் நாவலான `சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’ வெளியிடுவதற்குப் பட்ட கஷ்டங்கள் வலிமிகுந்தவை. ஆனால், வலிகளைப் பரிசளித்த அந்த நாவல்தான் அவருக்குpபெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. ஆம், மிகுந்த சிரமத்துக்கிடையே வெளிவந்த அந்த நாவல், வெளிவந்த சில மாதங்களிலேயே விற்பனையில் உச்சம் தொட்டது; பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் உலகம் முழுவதும் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
உச்சம் தொட்ட நாவல்
அந்த நாவலில் நாயகன் ‘சுவாமி’ நம்மைப் போன்ற ஒரு சாதாரண சிறுவன். பள்ளிக்கூடத்தையும் வீட்டுப்பாடத்தையும் வெறுத்து ஓடுபவன் அவன். அந்த நாவல் நிகழும் மால்குடி எனும் ஊரைத் தேடி அலையாதவர்களே அந்தக் காலகட்டத்தில் இல்லை. இன்று அதைப் படிப்பவர்களுக்கும் மால்குடி எனும் கற்பனையூரை தேடும் மனநிலை ஏற்படும். இந்திய அரசு இவரைச் சிறப்பிக்கும் விதத்தில் மைசூரிலிருந்து யஷ்வந்பூர் வரை செல்லும் விரைவு ரயிலுக்கு மால்குடி விரைவு ரயில் என்று பெயரிட்டுள்ளது. இந்தியாவில் கற்பனை ஊரின் பெயர் கொண்ட ஒரே ரயில் இதுவே.
சுவாமியின் குழந்தைப்பருவம், அவனுடைய நட்பு, அவனுடைய எளிய வாழ்க்கையின் மையமாக இருக்கும் அன்பு, பாசம் போன்றவற்றின் ஊடே விடுதலைப் போராட்டத்துக்கான அரசியல் முன்னெடுப்புகளையும் அவர் விவரித்த விதம்,அந்த நாவலைச் சாகாவரம் பெற்ற ஒன்றாக மாற்றிவிட்டது. இந்த நாவல், தமிழில் `சுவாமியும் சினேகிதர்களும்’ என்கிற பெயரில் மொழிபெயர்ப்பாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடைய ’மால்குடி டேஸ்’ கதைகள் ஷங்கர் நாக் என்பவரால் பின்னர் தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது. அதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆர்.கே. நாராயண் வீணை வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ‘My Dateless Diary', ‘My Days' என்கிற தலைப்பில் அவர் எழுதிய அவருடைய அமெரிக்க அனுபவங்களும், நினைவலைகளும் மிகவும் கொண்டாடப்பட்டவை. இன்றும் கொண்டாடப்படுகின்றன. மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றுக்கான இவரின் ஆங்கில சுருக்கங்கள் இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
விருதுகள்
இவர் எழுதிய `The Guide’ நாவல், அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுக்கொடுத்தது. 1964ஆம் ஆண்டில் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர். லீட்ஸ் பல்கலைக்கழகம் (1967), மைசூர் பல்கலைக்கழகம்(1976), டெல்லி பல்கலைக்கழகம் (1973) ஆகியவை இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன . 2001 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்மவிபூஷண் பட்டமும் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கான குரல்
இவர் எழுத்தின் மீதிருந்த அபரிமிதமான பிடிப்புக் காரணமாக, இந்திரா காந்தி இவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். நாடாளுமன்றத்தில் குழந்தைகளுக்காக அவர் ஆற்றிய உரை மிகுந்த கவனம் பெற்ற ஒன்று. குழந்தைகள் ஏன் ஐந்து கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள புத்தக மூட்டைகளைப் பள்ளிக்குச் சுமந்து செல்ல வேண்டும் என்று அவர் எழுப்பிய கேள்வி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல மாற்றங்களுக்கும் வித்திட்டது.
திருவாளர் பொதுஜனம் எனும் பிரபல கேலிச்சித்திரத்தை உருவாக்கிய பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே லக்ஷ்மண் இவருடைய இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டே இருந்த நாராயண் சென்னையில் மே 13, 2001இல் மறைந்து போனாலும், அவருடைய எழுத்துகள் மூலம் நம்முடன் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார். நமக்குப் பின்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
ஆர்.கே.நாராயணின் படைப்புகள் (மால்குடி வரிசை)
இதிகாசங்களின் ஆங்கிலச் சுருக்கங்கள்:
கதைகள்:
நினைவலைகள்:
பயண நூல்கள்:
கட்டுரை நூல்கள்: