

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய நாடாளுமன்றத்தின் ‘மேலவை’ அல்லது ‘மாநிலங்களவை’ என்றழைக்கப்படும் ‘ராஜ்யசபா’ அதன் முதல் கூட்டத்தை 1952ஆம் ஆண்டு மே 13 அன்று நடத்தியது. இதன்மூலம் முதல் கூட்டம் நடைபெற்று 70 ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. மாநிலங்களவை உருவானதன் வரலாறைத் தெரிந்துகொள்வோம்.
மேலவை உருவாக்கம்
1918ஆம் ஆண்டில் வெளியான மாண்டேக் - செம்ஸ்ஃபோர்ட் அறிக்கையின்படி இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டது. அதாவது மேலவை, கீழவை என்கிற அவைகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் உருவாக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 1919ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ‘மாநிலங்களின் கவுன்சில்’ அல்லது ‘ராஜ்ய சபா’ உருவாக்கப்பட்டது. 1921ஆம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
அந்த அவையின் அதிகாரப்பூர்வ தலைவராக பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல்தான் இருந்தார். 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று அரசியல் நிர்ணய சபை முதன் முதலில் கூடிய பிறகு, மத்திய அரசின் தற்காலிக சட்டமன்றமாக இது செயல்பட்டது. பின்னர் அது நாடாளுமன்றமாக மாற்றப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு 1952ஆம் ஆண்டில் முதன் முறையாகப் பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை தற்காலிக நாடாளுமன்றமாக இதுவே செயல்பட்டது. அதாவது ஒரே அவையாக இது மட்டுமே இருந்தது.
நடைமுறைக்கு வந்த அவை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டாவது அவையின் பயன்பாடு பற்றி அரசியலமைப்புச் சபையில் விரிவான விவாதம் நடைபெற்றது. இறுதியில், சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் இருக்கலாம் என்று முடிவானது. அதாவது, பரந்து விரிந்த பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு உள்ள சவால்களைச் சந்திக்க நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அவை போதுமானதாக இருக்காது என்று அன்று முடிவெடுத்தார்கள். எனவே, ‘மாநிலங்களின் கவுன்சில்’ அல்லது ‘ராஜ்ய சபா’ என்றழைக்கப்படும் இரண்டாவது அவை உருவானது.
கீழவை (மக்களவை) அல்லது லோக் சபாவுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பு மற்றும் தேர்தல் முறையுடன் மாநிலங்களவை உருவாக்கப்பட்டது. முக்கியமாக ஒரு கூட்டாட்சி அமைப்பு கொண்ட அரசாங்கத்தின் சாத்தியமான வடிவமாக இது கருதப்பட்டது. லோக் சபாவைவிடக் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு அவையாக இது உருவானது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
இந்த அவையானது ஒரு ஃபெடரல் சேம்பராக இருக்க வேண்டும், மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மாநில சட்டமன்றம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபையாகவும் இது உருப்பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தவிர 12 உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் சபைக்கு நியமனம் செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.
இந்த அவையில் உறுப்பினராகக் குறைந்தபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டது. ராஜ்யசபாவின் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரை நியமிக்கவும் முடிவானது. இதன் மூலம் ராஜ்ய சபாவின் கண்ணியமும் கவுரவமும் கூடியது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80ன் படி, ராஜ்ய சபாவின் அதிகபட்ச பலம் 250. அதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆவர். குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற விஷயங்களில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாநிலங்களவையின் தற்போதைய பலம் 245. இதில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள்.
அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவையில் இடங்களை ஒதுக்குகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்களின் மறுசீரமைப்பு மற்றும் புதிய மாநிலங்களை உருவாக்குவதன் விளைவாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறிவருகிறது.