

இந்தியாவின் நூறாவது கோடி குழந்தை எப்போது பிறந்தது? புத்தாயிரத்தில்தான் அந்தக் குழந்தை பிறந்தது. 2000 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அன்று அந்தக் குழந்தை பிறந்தது. டெல்லியைச் சேர்ந்த தம்பதி அசோக் அரோரா - அஞ்சனா ஆகியோருக்கு நியூ சப்தர்ஜங் மருத்துவமனையில் இந்தியாவின் நூறாவது கோடியாகப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அஸ்தா அரோரா என்று பெயரிட்டனர்.
இரண்டாயிரம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் தினமும் சராசரியாக 42,000 குழந்தைகள் பிறப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது. எனவே நூறாவது கோடி குழந்தை எங்கே பிறக்கும் என்பதைத் துல்லியமாக அறிய முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த மைல் கல்லை அரங்கேற்றியது.
அதன்படி தலைநகரில் அந்தக் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் நூறாவது கோடியாகப் பிறந்த அந்தக் குழந்தை இன்று 22 வயதை நிறைவு செய்துவிட்டது. 2000 ஆம் ஆண்டு இந்தியாவில் நூறாவது கோடி குழந்தை பிறந்த நிலையில், இன்று நாட்டின் மக்கள் தொகை உத்தேசமாக 140.50 கோடியை எட்டியிருக்கிறது. இந்த 22 ஆண்டில் மட்டும் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 40.50 கோடி அதிகரித்திருக்கிறது.