

ஒவ்வோர் ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப நாளை இந்தியா கொண்டாடிவருகிறது. இந்த நாள் இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது. காரணம், 1998-ம் ஆண்டு மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த நாள் தேசியத் தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கண்டுபிடிப்பாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்களின் பங்களிப்புக்காக விருதுகளும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. இந்த நாளில் இந்தியாவின் சில தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூர்வோம்.
இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் முன்னோடி (1954): இந்திய ஆராய்ச்சி மையம் 1954-ம் ஆண்டில் டிராம்பே அணு சக்தி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. ஹோமி ஜஹாங்கீர் பாபா இதன் தலைவராகச் செயல்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, 1966-ம் ஆண்டு முதல் ‘பாபா அணு ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்திய அணுசக்தி ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் இந்த மையம், அணுசக்தி சக்தி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி (1958)
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில் 1958-ம் ஆண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கப்பட்டது. வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல், கணினியியல், மனிதவள மேம்பாடு போன்ற பல பாதுகாப்பு சார்ந்த துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இது இயங்குகிறது.
வந்தது தொலைக்காட்சி (1959)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய வீடுகளுக்கு வந்தன. 1959-ம் ஆண்டு பரிசோதனை ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக, 1965-ம் ஆண்டு முதல் தினசரி ஒளிபரப்பு ஆரம்பித்தது. 1975-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மூலம் செயற்கைக்கோள் ஒளிபரப்புக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக இந்தியக் கிராமங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தன.
முதல் டிஜிட்டல் கம்ப்யூட்டர் (1959)
இந்தியா முதல் டிஜிட்டல் கம்ப்யூட்டரை உருவாக்கியது. 1955-ம் ஆண்டு கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் டிஜிட்டல் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. ஆனால், இதை வடிவமைத்தவர்கள் இங்கிலாந்து விஞ்ஞானிகள். 1957-ம் ஆண்டு TataInstitute of Fundamental Research (TIFR) மும்பையில் டிஜிட்டல் கம்ப்யூட்டரை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியது. 1959-ம் ஆண்டு முழுமையடைந்தது. 1960-ம் ஆண்டு டிஜிட்டல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்தது. 1962-ம் ஆண்டு TIFRAC (TIFR Automatic Calculator) என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூலம் பெயர் மாற்றப்பட்டது.
விண்வெளித் துறையில் காலடி (1962)
இந்தியா விண்வெளித் துறையில் காலடி எடுத்து வைத்தது. விண்வெளித் துறையில் டாக்டர் விக்ரம் சாராபாயின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் Indian National Committee for Space Research (INCOSPAR) உருவாக்கப்பட்டது. இது விண்வெளி அறிவியல் மற்றும் அணு சக்தி துறைகளின் பொறுப்பை எடுத்துக்கொண்டது. இதே ஆண்டு தும்பா ஏவுகணை தளத்துக்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1968-ம் ஆண்டுINCOSPAR, ISRO ஆக மாற்றமடைந்தது.
முதல் அணுகுண்டு சோதனை (1974)
1974 மே 18 அன்று இந்தியா முதன் முதலாகப் ‘புன்னகைக்கும் புத்தர்’ என்ற பெயரில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது அணுகுண்டு சோதனை ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில், இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் 5 நாடுகளே இது போன்ற அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். நிரந்தர உறுப்பினராக இல்லாத இந்தியா இந்தப் பரிசோதனைகளை நிகழ்த்திக் காட்டியது.
முதல் செயற்கைக்கோள் (1975)
இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆர்யபட்டா. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று கப்புஸீன் யார் என்ற ரஷ்ய விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியிருந்தது.
அதிகத் திறன்கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் (1991)
இந்தியாவின் அதிகத் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் PARAM 8000, சிடாக் (the Centre for Development of Advanced Computing) மூலம் உருவாக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிடாக், மூன்றே ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த உயர்திறன் மிக்க கணினிகளை உருவாக்கிவிட்டது.
முதல் மொபைல் போன் உரையாடல் (1995)
இந்தியாவில் ‘மொபைல்’ போன்களின் சகாப்தம் ஆரம்பித்தது. 1995-ம் ஆண்டு அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, தொலைத் தொடர்பு அமைச்சர் சுக்ராமிடம் மொபைல் போனில் பேசினார்.
நிலவுக்கும் விண்கலம் (2008)
2008-ம் ஆண்டு இந்தியா நிலாவுக்கு ஆளில்லாத சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது. அது நிலாவின் சுற்றுப்பாதையை வலம் வந்தது.
செவ்வாய்க்கு விண்கலம் (2013)
2013-ம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட ஆளில்லாத விண்கலம் மங்கள்யான். பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாதம் சுற்றிய பிறகு, செவ்வாய் நோக்கிப் பயணித்து, ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.