

தென் ஆப்பிரிக்கா வரலாற்றில் முதன் முறையாகக் கறுப்பினத்தைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா அதிபராகப் பொறுப்பேற்றார். மண்டேலா அதிபராகப் பொறுப்பேற்றபோது75 வயது. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிக வயதில் அதிபர் பொறுப்புக்கு வந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார் அவர். நெல்சன் மண்டேலா தன்னுடைய செயல்பாட்டுக்காகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவர். தென் ஆப்பிரிக்காவில் இனவாதம், நிறவெறி நிலவிய காலத்தில், அதை அஹிம்சை வழியில் எதிர்த்துக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 1962ஆம் ஆண்டில் கைதானார் மண்டேலா.
தொடர்ந்து 27ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார் மண்டேலா. உலகிலேயே மண்டேலா செய்த தியாகம் போல பிற தலைவர்கள் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதுவும் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துத் தென் ஆப்பிரிக்கா அரசு கொடுமைப்படுத்தியது. 1988ஆம் ஆண்டில் தீவிரமான காசநோயால் பாதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்புக்கே சென்ற பிறகுதான் அவரை வீட்டுச் சிறைக்கு மாற்றினார்கள். நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று தென் ஆப்பிரிக்க அரசு மண்டேலாவை விடுதலை செய்தது.
நிற வெறி ஆட்சி அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அயராது பாடுபட்ட மண்டேலாவுக்கு 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டில் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. இதைத் தவிர 250-க்கும் மேற்பட்ட விருதுகளையும் மண்டேலா பெற்றவர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபரானார். அவர் அதிபராக 1994, மே 10 அன்று பதவியேற்றார். 6 ஆண்டுகள் அந்தப் பதவியில் அவர் இருந்தார்.