10, +2 பொதுத் தேர்வுகள்: அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?

10, +2 பொதுத் தேர்வுகள்: அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?
Updated on
2 min read

ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது எளிதானதே. இருப்பினும், தேர்வு என்பது இன்றும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. தேர்வு அறையில் நிலவும் அமைதி, கண்காணிப்பாளரின் கண்டிப்பான பார்வை, காகிதங்களைப் புரட்டும் ஓசை போன்றவை அவர்களுக்கு உள்ளூர நடுக்கத்தை அளிக்கும், தன்னிலையை இழக்கச் செய்யும். எழுதப் போகும் தேர்வின் முடிவைக் குறித்த கவலையே இந்த அச்சத்துக்கான முக்கிய காரணம். பதற்றமடையாமல் அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்வதற்கு கீழே உள்ள எளிய பயிற்சிகள் உதவும்.

முதலில் மூச்சுப் பயிற்சி

ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்தும். இது பதற்றத்தையும் பயத்தையும் குறைக்கும். தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் வாங்கியவுடன் அதைப் பார்ப்பதற்கு முன் மூச்சை ஐந்து முதல் பத்து முறைவரை ஆழமாக இழுத்துவிடுவதன் மூலம் பயத்தையும் பதற்றத்தையும் வென்று தெளிவான மனநிலையில் தேர்வை எதிர்கொள்ளலாம்.

வினாக்களை நன்கு படியுங்கள்

ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்ட உடனே கையில் பேனாவை எடுக்காமல் வினாத்தாளை மட்டும் எடுங்கள். கேள்விகளை ஒன்றுக்கு இரண்டுமுறை படியுங்கள். இது கேள்வியைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுவதுடன், உடனே விடை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தடுக்கும். வினாக்களைத் தவறாகப் புரிந்துகொள்வது என்பது மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று.

பதில்களைச் சொல்லிப் பாருங்கள்

விடையை எழுதுவதற்கு முன் அதை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். இது உங்களுக்கு என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்பதைப் பற்றிய சரியான புரிதலை அளிக்கும். அந்தப் புரிதலின் துணையுடன் நீங்கள் எழுதும் விடை தெளிவாக இருப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.

மற்றவரின் மதிப்பீட்டைப் புறந்தள்ளுங்கள்

எப்போதும் மற்றவர்களின் விருப்பத்தையும் ஆசையையும் உங்களின் மேல் சுமையாக ஏற்றிக்கொள்ளாதீர்கள். உங்களுடைய திறன் உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களால் முடிந்தவரைப் படியுங்கள். ஆனால், அதை உண்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் படியுங்கள். அவ்வாறு படித்தபின் நீங்கள் பெறும் மதிப்பெண் எதுவாக இருந்தாலும் அதை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆசிரியர், பெற்றோரின் எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி முன் சென்று அடுத்த தேர்வுக்குத் தயாராகுங்கள்.

தெரியாத கேள்விக்கும் விடை எழுதுங்கள்

எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். விடை தெரியாத கேள்வி என்றாலும் விடையை ஊகித்து எழுதுங்கள். எழுதாமல் வெறுமையாக விடுவதைவிட ஊகித்தாவது எழுதுவதுமேல் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள்

தேர்வு எழுதும்போது தெரியாத வினாக்கள் வந்தால் அது உங்களுக்குத் தேவையற்ற அழுத்தத்தையும் பதற்றத்தையும் அளிக்கக்கூடும். எனவே, திட்டமிடப்பட்ட வரிசையில் எழுதுவதற்குப் பதிலாக நன்கு தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுதுங்கள். அது உங்களுக்கு அளிக்கும் உத்வேகத்தின் துணைகொண்டு விடை தெரியாத கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் விடையளிக்க முயலலாம்.

இடையில் ஓய்வெடுங்கள்

ஒவ்வொரு கேள்விக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். ஜன்னலோரம் அமர்ந்திருந்தால் சில நொடிகள் வானத்தையோ மரங்களையோ வேடிக்கை பாருங்கள். ஜன்னலோரம் கிடைக்கவில்லை என்றால் சுழலும் மின்விசிறியைப் பாருங்கள். இது தவிரத் தாகமில்லை என்றாலும் முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது தண்ணீர் குடித்துவிட்டுத் தேர்வைத் தொடருங்கள். இவ்வாறு செய்வது சலிப்பையும் களைப்பையும் அகற்றும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in