துறை முகம்: வளமான எதிர்காலத்துக்கு உயிரித் தகவலியல்

துறை முகம்: வளமான எதிர்காலத்துக்கு உயிரித் தகவலியல்
Updated on
2 min read

இந்த ஆண்டின் பிளஸ் 2 தேர்வுகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் எந்தக் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மாணவர்களும் பெற்றோர்களும் அல்லாடத் தொடங்குவர். இன்றைய தேதியில் படிப்பதைவிட, எதைப் படிப்பது என்பதைத் தேர்ந்தெடுப்பதே மாணவர்களுக்கு கடினமான செயலாக இருக்கிறது. காரணம், நித்தமும் மாறிவரும் இன்றைய நவீன வாழ்க்கை முறையின் தேவையை ஈடுகட்டும் விதமாகப் புதுபுது படிப்புகள் ஆண்டுதோறும் உருவாகின்றன. அவற்றைவிட முக்கியமாக, சிறந்த படிப்பு எது என்பதும் ஆண்டுதோறும் மாறுகிறது.

கரோனாவுக்குப் பின்னான இன்றைய காலகட்டத்தில், உயிரியல் சம்பந்தப்பட்ட படிப்புகளின் தேவை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, உயிரித் தகவலியல் (Bioinformatics) படிப்பு. இந்தச் சூழலில், பிளஸ் 2வுக்குப் பிறகு உயிரித் தகவலியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது மாணவர்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும்.

உயிரித் தகவலியல் என்றால் என்ன?

உயிரியல் துறை இன்று, ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அலசி ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தரவுகளைச் சேகரிப்பதற்கும், அவற்றை ஆராய்வதற்கும் தகவல் தொழில்நுட்பத் திறன் அவசியம்.இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து, உயிரியலையும் தகவல் தொழில்நுட்பத் திறனையும் இணைக்கும் புள்ளியாக உயிரித் தகவலியல் (Bioinformatics) துறை இருக்கிறது. சர்வதேச அளவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் துறை அது.

என்ன இருக்கிறது?

கணினி, கணிதம், இயற்பியல், வேதியியல், மருந்தியல், மானுடவியல், உயிரியியல் ஆகியவற்றைச் சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கியதாக உயிரித் தகவலியல் துறை இருக்கிறது.

படிப்பின் பயன்

உயிரியல் ஆய்வுத் தகவல்களைப் பதிவு செய்தல், பகுப்பாய்வு செய்தல், மருந்துகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தல், புதிய மருந்துக்கான காரணிகளைக் கண்டறிதல், மருந்துகளின் பண்புகளை வகைப்படுத்துதல், நச்சுத்தன்மைகளுக்கு எதிர்வினையாற்றும் மருந்துப் பொருள்களை அடையாளம் காணுதல் எனப் பல பயன்பாடுகளை இந்தப் படிப்பு கொண்டு இருக்கிறது.

எங்கே படிக்கலாம்?

தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் என்கிற உயிரித் தகவலியல் படிப்பு இருக்கிறது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முதுநிலை பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பு உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பு உள்ளது.

இளநிலைப் படிப்புக்கான தகுதி

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்தவர்கள் மட்டுமே இளநிலை பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பில் சேர முடியும்.

முதுநிலைப் படிப்புக்கான தகுதி

முதுநிலைப் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், உயிரி தகவலியல், கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதோ ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்?

உயிரியல் துறையின் மீது ஆர்வமும், பகுப்பாய்வு செய்யும் திறனும் கொண்டவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

என்னென்ன திறன்கள் கிடைக்கும்?

புரதத்தைப் படிகமாக்கல், மூலக்கூறு வடிவமைப்பு சார்ந்த மருந்துப் பொருள்கள் கண்டுபிடிப்பு, நுண்ணுயிரிகளின் பண்புகளைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் மருந்துப் பொருளை உருவாக்குதல் எனப் பல வகைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்குத் தேவைப்படும் திறன்களை இந்தப் படிப்பு மாணவர்களுக்கு அளிக்கும். முக்கியமாக, இதைப் படிப்பது, மரபியல், மூலக்கூறு உயிரியியல் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற உதவும்.

வேலைவாய்ப்பு

பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஐ.ஐ.டி., போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தப் படிப்புக்கான தேவை அதிகம் இருப்பதால், அங்கேயும் கை நிறைய சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

வேலையில் திருப்தி

கல்விச் சூழலும் மாணவர்களின் எண்ணப் போக்கும் இன்று வெகுவாக மாறிவிட்டன. முன்பெல்லாம். பிளஸ் 2 முடித்தால், மருத்துவமோ பொறியியலோ படிக்க வேண்டும் என்பதே மாணவர்களின் முதல் விருப்பமாக இருக்கும். இன்று வேலை வாய்ப்புக்கும் திறன் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் நிறைய படிப்புகள் அவர்கள் முன்னே வரிசைகட்டி நிற்பதால், மருத்துவமும் வேண்டாம், பொறியியலும் வேண்டாம் என்று நினைக்கும் மாணவர்கள் பெருமளவில் அதிகரித்துவருகின்றனர். மாற்றத்தையும் சவாலையும் விரும்பும் அந்த மாணவர்களுக்கு உயிரித் தகவலியல் படிப்பு சிறப்பான தேர்வாக இருக்கக்கூடும். அது அவர்களுக்கு நல்ல வேலையை மட்டுமல்லாமல்; அந்த வேலையில் திருப்தியையும் பரிசளிக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in