தேசத் தந்தை காந்தியடிகளால் தன்னுடைய ‘அரசியல் குரு’ என்று வர்ணிக்கப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே பிறந்த நாள் இன்று (மே 9).
அவரைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-
இன்றைய மகாராஷ்டிரத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் 1866 மே 9 அன்று கோபாலகிருஷ்ண கோகலே பிறந்தார்.
18 வயதில் பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பட்டம்பெற்றார். பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற முதல் தலைமுறையைச் சேர்ந்தவரான இவர் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். கல்லூரி நாட்களில் ஜனநாயகம், நாடாளுமன்ற ஆட்சி முறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார்.
1889இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாலகங்காதர திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
தேச விடுதலைக்கான போராட்டத்தில் வன்முறையை முற்றிலும் தவிர்க்கும் மிதவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். பிரிட்டிஷ் அரசுடனான உரையாடல், ஒத்துழைப்பு மூலமாகவே இந்தியாவுக்கான சுயாட்சி உரிமையைப் பெற முடியும் என்று நம்பினார். அந்த வகையில் அரசமைப்பு சீர்திருத்தங்களுக்காக தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து பணியாற்றினார்.
அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணம் சர்வசாதாரணமாக இருந்தது. திருமணத்துக்கு சம்மதம் அளிப்பதற்கான வயதை 10இலிருந்து 12ஆக உயர்த்தும் பிரிட்டிஷ் அரசின் சட்டத்துக்கு சமூக சீர்திருத்தவாதியான கோகலே ஆதரவு தெரிவித்தார். அந்த சட்டம் பம்பாய் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.
1905இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அதே ஆண்டில் ’இந்தியாவின் சேவகர்கள் குழு’ (Servants of India Society) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு நாட்டுக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தது.
தாராளவாத அணுகுமுறைகொண்ட பொருளியலாளராகத் திகழ்ந்தார்.பட்ஜெட் தொடர்பான விவாதங்களில் பங்கேற்று இவர் ஆற்றிய உரைகள் இவருக்கு பெரும்புகழ் பெற்றுத்தந்தன. தன்னுடைய அசான்களில் ஒருவரான மகாதேவ் கோவிந்த் ரானடேவின் பெயரில் பொருளாதாரக் கல்விக்கான மையத்தைத் தொடங்கினார் (Ranade Institute of Economics).
தீண்டாமை, சாதி அமைப்புக்கு எதிராக செயல்பட்டார். பெண்களின் விடுதலையை நாடியதோடு பெண்கல்விக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயலப்ட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் சட்டமன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட மிண்ட்டோ-மார்லி சீர்திருத்தங்களுக்கு கோகலே முக்கியப் பங்காற்றினார்.
வழக்கறிஞர் பணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு சென்று அங்கு மக்கள் தலைவராக உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் கோகலே காந்தியின் அறிவுரையாளராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். காந்தியின் அழைப்பின் பேரில் 1912இல் தென் ஆப்ரிக்காவுக்கு சென்று அவரைச் சந்தித்து உரையாடினார். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதில் கோகலேவின் பங்கு முக்கியமானது. காந்தி, தன்னுடைய சுயசரிதையில் ‘கோகலே என் அரசியல் குரு” என்று குறிப்பிட்டுள்ளார்.
1915 பிப்ரவரி 19 அன்று கோபாலகிருஷ்ண கோகலே மறைந்தார்.