

மிக அழகான, சுத்தமான ஒரு பல்பொருள் அங்காடி. கேட்கிற பொருள் எல்லாம் அங்கே கிடைக்கும். ஆனால், வாங்கும் பொருள், தேவையான பணம், மீதி சில்லறை தவிர்த்த வேறெந்த பேச்சுக்கும் அங்கு இடம் இல்லை. எல்லாம் கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது.
அதே தெருவில் இன்னொரு கடை. பராமரிப்பு கொஞ்சம் குறைவு. எல்லாப் பொருளும் கிடைத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், கடைக்காரர் பேச்சு இருக்கிறதே.. அது வேறெங்கும் இல்லாத சரக்கு! “வா மகளே.. என்ன வேணும்.. மருமகன் வேலைக்குப் போயிட்டாரா? பேத்திக்கு என்ன வேணும்?”என்று அவர் கேட்பதிலேயே மனம் மயங்கி விடுகிறது. கிளம்பும்போது “சரிங்கப்பா, போய்ட்டு வர்றேன்” என்று சொல்லிச் செல்கிற, வியாபாரம் தாண்டிய, விற்பவர் -வாங்குபவர் என்கிற நிலையைத் தாண்டிய ஒரு உறவு உண்டாகிறது. அந்த உறவு இரு தரப்புக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
எங்கள் ஊர்ப்பக்கம், ஒரு குறிப்பிட்ட நேரம் வருகிற பேருந்தில் மட்டும் எப்போதும் ஒரு கலகலப்பு இருக்கும். காரணம், கணேசன் என்கிற நடத்துநர். பயணச் சீட்டு கொடுப்பதோடு அவர் தன் பணியை முடித்துக் கொள்வதில்லை. அதைத் தாண்டிய ஓர் உறவு, கொஞ்சம் அன்பு, கொஞ்சம் விசாரிப்பு போன்றவைதான் கலகலப்புக்குக் காரணம்.
உறவு முறை சொற்கள்
இப்போது சில பள்ளிக்கூடங்களில் நடக்கிற சம்பவங்கள், மாணவர்கள் பற்றிய விவாதங்கள் நடக்கிறபோது மேற்சொன்ன இந்தச் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
திருவண்ணாமலை மகாலட்சுமி, காஞ்சிபுரம் உதயலட்சுமி, கடலூர் சசிகலா, விருதுநகர் முத்து மாரி, கரூர் தனபால், கன்னியாகுமரி டோம்னிக் ராஜ், அரியலூர் செங்குட்டுவன் போன்றவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாகத் தங்கள் ஆசிரியர் பணியை அமைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். இவர்களைத் தவிர இன்னும் நிறைய நண்பர்கள் மாவட்டந்தோறும் இருக்கிறார்கள். இவர்களும் மேலே சொன்ன கடைக்காரர், நடத்துநர் போன்றவர்கள்தாம். வகுப்பறை, கற்றல், கற்பித்தல், தேர்வு, மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கடந்து ஓர் உறவை, அன்பை, நட்பை உருவாக்கிக்கொண்டவர்கள். எனவே, ‘சார், மிஸ்’ என்பதைக் கடந்து விளிக்கும் சொற்கள் அங்கே புழங்குகின்றன. அம்மா, அக்கா, அண்ணன், மகா, உதயா, அத்தை என இன்னும் பல சொற்கள்!
பெரும்பாலான பள்ளிகளில் என்ன நடக்கிறது? புத்தகங்களில் இரண்டு பக்கங்களை வாசித்து விட்டு, பின்பக்கம் உள்ள கேள்விகளுக்குப் பதில்களைக் குறித்து விட்டு “எழுதுங்க.. படிங்க..”என்பதோடு முடிந்துபோகிறதே.. அதைத் தாண்டிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார்களே. பிறகு இணைப்பும் பிணைப்பும் எப்படி உருவாகும்? பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற ஆசிரியர் பகவான் என்பவரை சுற்றிச் நின்று அழுதவர்களும் பள்ளி மாணவர்கள் தானே?
விலகி நிற்கும் ஆசிரியர்கள்
முகத்துக்கு முகம் பார்த்துப் பேசுவது இன்று குறைந்துவிட்டது. கொஞ்சம் இறங்கிப் பேசினால் மாணவர்கள் ரொம்ப பேச ஆரம்பித்து விடுவார்கள். அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியார்கள் தங்களுக்குள் ஒரு கட்டம் கட்டிக் கொள்கின்றனர். இன்றைய ஆசிரியர்கள் பலரும் வகுப்பறைக்கு உள்ளிருந்தும்கூட மாணவர்களிடம் விலகியே நிற்கிறார்கள். இந்த விலகல் பல இடங்களில் மோதலாகிறது.
முன்மாதிரி ஆசிரியர்கள்-மாணவர்கள், மோசமான ஆசிரியர்கள் -மாணவர்கள் என நாம் பேசும் எதுவும் எல்லா இடங்களிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கின்றன. எதைப் பெரிதுபடுத்த வேண்டுமோ அதைப் பெரிதுபடுத்தி, மற்றவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அதையே அடையாளமாக மாற்ற முனைவது தவறு.
அதேபோல, எந்தக் கள நிலவரமும் தெரியாமல் உணர்ச்சியற்ற இயந்திரங்களைப் போல ஆசிரியர்களை, பள்ளிகளை நடத்துகிற அதிகாரிகளும் இதற்குக் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். வாட்ஸ் அப் தகவல்கள், மின்னஞ்சல்கள், அதிகாரிகளின் ஆணைகள் மட்டுமே ஒரு துறையை நடத்திவிட முடியாது. குறிப்பாகப் பள்ளிக் கல்வித் துறையில் இவற்றைத் தாண்டிய ஒரு தன்மை தேவை.
கடுமையாக்கப்பட வேண்டுமா தண்டனை?
ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வேலை செய்யும் எனக்கு வழக்கமாக வருவது போல யோக என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருந்தார். தாமதமாக வந்ததற்கு ‘ரெண்டு திட்டு திட்டிவிட்டு’அடுத்தடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி யோகயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. காரணம் அந்த விலகல், இடைவெளி!
பெரிய பள்ளிகளில் வருகிற பிரச்சினைகள் வேறு தன்மையில் இருக்கும். ஆனால், அவையும்கூடச் சரி செய்யவே முடியாத அளவுக்கு போகக்கூடியவை அல்ல. பல்லாயிரக் கணக்கில் பள்ளிகள் இருக்கின்றன. பல லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். எங்கோ ஒரு மூலையில் சில சங்கடங்கள் நடக்கின்றன. தவறு செய்பவர்களை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் பெரிய வெள்ளைச் சட்டை, வேட்டியில் எங்கோ இருக்கும் சின்ன கரும்புள்ளி. அதைக் கண்ணாடி வைத்துப் பாார்த்தால்?
அடித்தால் திருந்திவிடுவார்கள், பெயில் ஆக்கினால் படித்துவிடுவார்கள்...இதெல்லாம் இன்னும் மாறாத மனநிலையாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேற்சொன்ன கருத்துகளுக்கு எல்லாம் என்ன ஆய்வு இருக்கிறது? அடிக்குப் பயந்து ஓடியவர்கள் எந்தக் கணக்கு? தேர்வில் தோல்வி காரணமாகப் பள்ளியை விட்டு நின்றவர்கள் எந்தக் கணக்கில் வருவார்கள்?
அதற்காக, அடிக்க அனுமதி கொடுங்கள்; கட்டிப் போட்டிருக்கும் எங்கள் கைகளை அவிழ்த்து விடுங்கள் என்பவை என்ன மாதிரியான கோரிக்கைகள் என்று தெரியவில்லை. அடித்தும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது? தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். எனவே, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கலாமா?
வகுப்பறை போர்க்களம் அல்ல
ஆசிரியர்களும் மாணவர்களும் எதிரெதிரே நிற்க வேண்டியவர்கள் அல்ல. கலந்து நிற்க வேண்டும். சொல்பவரும் கேட்பவருமாக இருக்க நினைப்பதும்கூட முக்கியமான பிரச்சினைதான். கலந்துரையாடும் இடமாக வகுப்பறைகள் மாற வேண்டும். யாரும் யாரையும் வெல்வதற்கு அது போர்க்களம் அல்ல, வகுப்பறை. வென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அன்பால் வெல்வோம். அதற்கு நாம் கொஞ்சம் தோற்கவும் வேண்டும். எனவே, நாம் தோற்கப் பழக வேண்டும்..
பள்ளியும் கல்வித் துறையும் ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் ஜன்னலைத் தாண்டியும் பள்ளிகள் சுற்றுச்சுவரைத் தாண்டியும் எட்டிப் பார்க்க வேண்டும். என்ன மாதிரியான சமூகம் ஊருக்குள் இருக்கிறதோ அது உருவாக்குகிற குட்டி சமூகம்தான் பள்ளிக்குள் இருக்கும். உள்ளே சரிசெய்ய வேண்டிய பணிகள் இருந்தால், அந்தப் பணியை பள்ளிக்கு வெளியில் இருந்து தொடங்கியாக வேண்டும். அந்தத் திசையிலும் கொஞ்சம் யோசிப்போம்!
கட்டுரையாளர்,ஆசிரியர் - எழுத்தாளர்.
தொடர்புக்கு: sundar.tnsf@gmail.com