

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக தேர்வுகளும், தேர்ச்சி முறைகளும் மாறியிருந்தன. இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு என்பது திருவிழா போன்றது. திருவிழாவுக்குச் சென்றாலும் கூட்டம் அதிகமாக இருக்குமோ, தொலைந்துவிடுவோமா என யாரும் அச்சத்துடன் செல்வதில்லை. அதுபோன்ற அணுகுமுறைதான் தேர்வுக்கும் தேவை. அவ்வாறு அணுகும்போதுதான் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தேர்வறைக்குச் செல்ல முடியும்.
தேர்வில் வினாக்கள் கடினமாக இருக்குமோ, தோல்வியடைந்துவிடுவோமோ என்கிற பயம் வந்துவிட்டால், நம் மனதில் இருக்கும் விடைகளும் அச்சத்தில் மறந்துவிடும். எனவே, தேர்வு நமக்கானது என்கிற உற்சாகம் நிரம்பியிருக்கும் எண்ணம்தான் தன்னம்பிக்கையோடு தேர்வை அணுகக் கைகொடுக்கும்.
தேர்வை எப்படி எதிர்கொள்வது?
நான்கு நிலைகளில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தயாராகுதல் என்பது மாணவர்கள் தங்களது மனநிலையைத் தயார்படுத்துதல். இத்தனை நாட்கள் படித்த படிப்புக்கான பலனை அறுவடை செய்யப்போகும் நாளே தேர்வு நாள் என்கிற மனநிலையோடு தயாராக வேண்டும். திட்டமிட்டுப் படிப்பதே வெற்றியைத் தரும். திட்டமிட்டுப் படிப்பதை வழக்கமாக்க வேண்டும். தேர்வு காலம் முடியும் வரை அளவான உணவும், போதுமான உறக்கமும் அவசியம். இல்லையெனில் தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். பழக்கமில்லாத புதிய உணவு வகைகளைத் தவிர்ப்பதும், புதிதான ஒரு சூழல் கொண்ட வெளியூருக்குப் பயணம் செய்வதையும் அறவே தவிர்க்க வேண்டும்.
அடுத்து மிக முக்கியமானது, தேர்வை எதிர்கொள்ளல். தேர்வுக்காக நல்ல முறையில் தயாராகி இருக்கிறேன், தேர்வு நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்னும் மனநிலை இருக்க வேண்டும். அது தேர்வு எழுதும் அறையில் மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
எப்படிப் படிப்பது?
அடிக்கடி படித்துப் பார்ப்பதைவிட, படித்ததை எழுதிப் பார்ப்பது மிகுந்த நன்மை அளிக்கும். வாசித்தலில் தடுமாற்றம் ஏற்படும் பகுதிகளில் வாய்விட்டுப் படித்தால் மிகவும் நல்லது. படிப்பதற்குத் தனி அறைதான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது எல்லோருக்கும் கிடைத்து விடாது. எனவே, கிடைக்கிற அமைதியான இடங்களில் அமர்ந்து படிக்கலாம். தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இடைவெளிவிட்டுப் படிப்பதே மிகுந்த புத்துணர்வு தரும். தொடர்ந்து ஒரே பாடங்களைப் படிக்காமல், பாடங்களை மாற்றிமாற்றிப் படிப்பதும் சோர்வடையாமல் படிக்க உதவும்.
எப்படி எழுத வேண்டும்?
தேர்வு எழுதும்போது கையெழுத்து அழகாக இருக்க வேண்டும். எழுத்து சற்று சுமாராக இருந்தாலும், எழுத்துக்கள் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் தெளிவாக இருப்பது அவசியம். விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இல்லாமல் தகுந்த இடைவெளி விட்டு எழுத வேண்டும். விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதுவதில் தொடங்கி, உரிய குறிப்புகளைத் தவறின்றித் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் பக்கங்களின் எண்ணைச் சரியாக இட வேண்டும். விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களையும் நிரப்ப வேண்டும். காலியாக எந்தப் பகுதியேனும் இருந்தால், அவற்றை குறுக்குக் கோடிட்டு அடித்துவிட வேண்டும். எழுதி முடித்தவுடன், வினா எண்களையும் எழுதி இருக்கும் விடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
தேர்வு அறையில் பின்பற்ற வேண்டியவை
தேர்வு அறையில் முதலில் அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும். வினாத்தாள் எளிதாக இருக்குமோ இல்லை கடினமாக இருக்குமோ என்கிற பதற்றம் கூடாது. எப்படியாயினும் தேர்வை எழுதத்தான் போகிறோம். எனவே, பதற்றத்தோடு தேர்வைத் தொடங்கக் கூடாது. தேர்வு அறையில் விளக்கம் ஏதேனும் தேவை என்றால், நீங்கள் அறை கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். தேர்வுக்கு இரண்டு பேனாக்களுடன் செல்வது சிறந்தது. அது நன்கு எழுதிப் பழக்கப்பட்ட பேனாக்களாக இருக்க வேண்டும். புதுப்பேனாக்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டாம். அமர்ந்துள்ள இருக்கை, மேசை சரியாக உள்ளதா,அவற்றில் ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா எனப் பார்த்து, ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால், அறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்துவிடுவது சிறந்தது.
தேர்வு காலங்களில் என்ன உணவு தேவை?
தேர்வு காலத்தில் உண்ண வேண்டிய உணவு குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மருத்துவர் கோ.ஆனந்தி கூறுகையில், “தேர்வுக் காலத்தில் எளிதில் செரிமானம் ஆகும் உணவை உட்கொள்ள வேண்டும். கடையில் கிடைக்கும் எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்லது. பிரியாணி, துரித உணவு வகைகளைத் தேர்வுகள் முடியும் வரை தவிர்த்துவிட வேண்டும். பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை முடிகிற அளவுக்கு உட்கொள்ளலாம். தினந்தோறும் 500 மி.லி. அளவுக்குக் குறையாமல் பழச்சாறு அருந்திவருவது, மிகுந்த உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும். அசைவ உணவு வகைகளை குறைவான அளவில் வேண்டுமானால் உட்கொள்ளலாம். அதிக அளவில் குடிநீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். கொதிக்க வைத்த நீரை வடிகட்டியும் பயன்படுத்தலாம்.
தேர்வுக் காலத்தில் படிப்பதற்காக உறக்கத்தைக் கெடுத்துக்கொள்ள கூடாது. உடலுக்கும் உள்ளத்துக்கும் போதுமான ஓய்வு தேவை. அது உறக்கத்தின் மூலமே கிடைக்கும். தேர்வு நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து மணிநேர உறக்கம் அவசியம்” என்கிறார்.
தேர்வறையில் கவனம்
தேர்வை எதிர்கொள்வது குறித்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி என்ன சொல்கிறார்? “தேர்வுக் காலத்தில் மாணவர்களின் உடல்நலனும் மனநலமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் உறுதுணையும் அவசியம். படித்தவற்றை மனப்பாடம் செய்வதோடு நிறுத்திவிடாமல், அடிக்கடி நினைவுபடுத்திப் பார்த்தலும், மீள்பார்வை செய்தலும் முக்கியம். வினாத்தாளை வாங்கியவுடன் தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்துவிட்டு, பின்பு அடுத்த வினாக்களுக்குச் செல்ல வேண்டும்.
தேர்வு அறையில் பிறருடைய மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல், தங்கள் மனநிலையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு அறையில் அடுத்தவர் செயல்பாடுகளை கவனிக்காமல் தேர்வின் மீது மட்டுமே கவனத்தைக் குவிக்க வேண்டும்” என்கிறார்.
‘நம்மால் முடியும்’ என்னும் நம்பிக்கையோடு எழுதப்படும் எந்தவொரு தேர்வும் வெற்றியையே கொடுக்கும். இலக்கு இல்லாத பயணம் என்றைக்கும் கரை சேராது. மாணவர்களுடைய இலக்கைத் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது தேர்வே!
கட்டுரையாளர்: எழுத்தாளர்- ஆசிரியர்