

ஏப்ரல் 21: தேசிய குடிமைப் பணிகள் நாள் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதியை தேசிய குடிமைப் பணிகள் நாளாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது. நாட்டின் பொது நிர்வாகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் (நிர்வாகம்), ஐ.பி.எஸ்.(காவல்துறை) மற்றும் ஐ.எஃப்.எஸ் (வனத்துறை) ஆகிய குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பை கெளரவிப்பதற்கான நாள் இது.
ஏன் ஏப்ரல் 21?
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் நிர்வாகத்துக்காக நிர்வாகப் பணிகள் அதிகாரிகள் (Administrative Service Officers) நியமிக்கப்பட்டனர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த அதிகாரிகளிடையே 1947 ஏப்ரல் 21 அன்று புது டெல்லியில் உள்ள மெட்காஃப் ஹவுஸில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அந்த அதிகாரிகளை “இந்தியாவின் எஃகு சட்டகம்” என்று வர்ணித்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை நினைவுகூரும் விதமாக ஏப்ரல் 21 இந்திய குடிமைப் பணிகள் நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
எப்போதிலிருந்து? எப்படி?
ஏப்ரல் 21ஐ தேசிய குடிமைப் பணிகள் நாளாகக் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்த பிறகு, 2006 ஏப்ரல் 21 அன்று புது டெல்லியில் விஞ்ஞான் பவனில் முதல் முறையாக தேசியக் குடிமைப் பணிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசியக் குடிமைப் பணிகள் நாள் விழாவில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான பிரதமரின் விருது குடிமைப் பணி அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் மாவட்ட அளவிலான அமைப்புகளில் அசாதாரண, புதுமையான பணிகளை மேற்கொண்டவர்கள் இந்த விருதைப் பெறுவார்கள்.
முக்கியத்துவம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் குடிமைப் பணி அதிகாரிகள் பிற பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட சிறந்த பணிகளை அறிந்துகொண்டு அவற்றைத் தமது களங்களில் செயல்படுத்தி ஊக்குவிப்பதாக இந்த விழா அமைந்துள்ளது.
தேசியக் குடிமைப் பணிகள் விழாவின்போது மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளின் பணிகளைக் குறித்து விவாதித்து மதிப்பீடு செய்கிறது. இந்த நாளில் வழங்கப்படும் விருதுகள் நாட்டின் விடுதலைக்குப் பிறகு அதன் வளர்ச்சியில் குடிமைப் பணிகளின் பங்களிப்பை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளன.