

பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) படிக்க வேண்டும் என்பது. ஆனால், அதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் அனைவராலும் வெற்றிபெற முடிவதில்லை. அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் ஜே.இ.இ. எழுதாமலேயே ஐ.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது இந்தியத் தொழில்நுட்பக் கழகம்.
பொறியியல் மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமான இளங்கலை அறிவியல், டிப்ளமோ பாடப் பிரிவுகளை சென்னை ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் படிப்பில் சேரலாம் என்பது பலரது ஐ.ஐ.டி. கனவை நனவாக்க உதவும். வயது தடையல்ல என்பது மற்றுமொரு நற்செய்தி. பாடங்கள் இணையவழியில் எடுக்கப்படும் என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் தொடங்கி இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்வோர், மூத்த குடிமக்கள் என அனைவரும் படிப்பதற்கான வாய்ப்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வழங்கியுள்ளது.
கல்வித் தகுதி
டிப்ளமோ - இளங்கலை அறிவியல் (டேட்டா சயின்ஸ், புரோகிராமிங்) படிப்பில் சேர பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டம், மத்தியப் பாடத்திட்டம் உள்ளிட்ட எந்த பாடத்திட்டத்திலும் படித்திருக்கலாம். பத்தாம் வகுப்பில் கணிதமும், ஆங்கிலமும் படித்திருக்க வேண்டும். தற்போது பதினோராம், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் பி.எஸ்சி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடித்த பிறகு படிப்பில் சேரலாம்.
சேர்க்கை முறை
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நான்கு வார பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், கணக்கீட்டுத் திறன் போன்றவை கற்றுத்தரப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் அசைன்மெண்ட் உண்டு. நான்கு வாரப் படிப்பு முடித்ததும் தகுதித் தேர்வு வைக்கப்படும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடிப்படைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தேர்வில் தேர்ச்சிபெற பொதுப்பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 35, 30 சதவீத மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களும் தேர்வை எழுதாதவர்களும் மறு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவர்கள் மீண்டும் அடிப்படைப் பாடத்துக்கான அசைன்மெண்ட் முடிக்கத் தேவையில்லை.
தேர்ச்சி பெற்றதுமே படிப்பில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறவர்களுக்கு ஒரு வருடம் வரைக்கும் தேர்ச்சி மதிப்பெண் செல்லுபடியாகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சேரலாம். அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் உண்டு. 2021ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. தேர்வுக்குத் தகுதிபெற்றவர்கள் இந்தத் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை.
பாடப் பிரிவுகள்
மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு பருவத்துக்கு (ஓராண்டு) அதிகபட்சம் நான்கு பாடங்கள். 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கிறவர்கள் நான்கு பாடங்களையும் தேர்ந்தெடுக்கலாம். அடிப்படைப் படிப்பில் எட்டுப் பாடங்கள் உண்டு. டிப்ளமோவில் டேட்டா சயின்ஸ் ஆறு பாடங்களும், ஆறு புரோகிராமிங் பாடங்களும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்சி. மாணவர்களுக்கு 11 பாடங்கள். படிப்பின் எந்த நிலையில் இருந்தும் விலகிக்கொள்ளலாம். அடிப்படைப் படிப்பை முடித்த பிறகு சான்றிதழ் படிப்புடன் விலகிக்கொள்ளலாம் அல்லது டிப்ளமோ, இளங்கலை என்று தொடர்ந்து படிக்கலாம். சென்னை ஐ.ஐ.டி. வழங்கும் படிப்பு இது என்பதால் இளங்கலை படிப்பை நிறைவுசெய்யும் மாணவர்கள் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்களாகவே கருதப்படுவர்.
கட்டணச் சலுகை
பொதுப் பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து கட்டணச் சலுகை உண்டு. அதிகபட்சம் 75 சதவீதம் வரை கட்டணத் தள்ளுபடி பெறலாம். இந்தக் கட்டணத் தள்ளுபடிதான் தனக்கு உதவியது என்று சொல்கிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவண பிரியா. சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தாவரவியல் படித்துவரும் இவர், சென்னை ஐ.ஐ.டி.யின் இளங்கலை வகுப்பில் சேர்ந்துள்ளார். “கல்லூரியில் எனக்கு பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பும் உண்டு. புரோகிராமிங்க், டேட்டா சயின்ஸ் குறித்துப் படித்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன்.
அதனால், அது தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபோதுதான் சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் வகுப்புப் பற்றித் தெரிந்தது. அதன் இணையதளத்துக்குச் சென்று பார்த்தபோது கல்விக் கட்டணம் செலுத்த முடியாது என்று விட்டுவிட்டேன். பிறகுதான் கட்டணத் தள்ளுபடி பற்றித் தெரிந்துகொண்டு விண்ணப்பித்தேன். நான் இப்போது 75 சதவீதக் கட்டணத் தள்ளுபடியில் பயின்றுவருகிறேன்” என்று சொல்லும் சரவண பிரியா ஐ.ஐ.டி. சார்பாக NTPEL தளத்தில் பதிவேற்றப்படும் பாடங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது என்கிறார்.
“வார இறுதியில் கலந்துரையாடல் வகுப்புகள் உண்டு. நம் சந்தேகங்களை அப்போது கேட்கலாம். இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் இந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்களைத் தனித் தனி குழுவாகப் பிரித்திருக்கிறார்கள். அந்தக் குழுவிலும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்” என்று சொல்கிறார் சரவண பிரியா.
இல்லத்தரசிகளும் படிக்கலாம்
வயது தடையில்லை என்பதால் 20 ஆண்டுகள் கழித்துத் தன் கல்விப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி உமா. “நான் பொறியியல் படித்திருக்கிறேன். இப்போது வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து அதற்காக என்னைத் தகுதிபடுத்திக்கொள்ள இந்தப் படிப்பில் சேர்ந்திருக்கிறேன். இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு இப்போது படிக்கத் தொடங்கியிருப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால், எல்லாப் பாடங்களும் கடினமாக இல்லை. டேட்டா சயின்ஸ் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இருப்பதால் அதைப் படிப்பதற்காக ஐ.ஐ.டி.யில் சேர்ந்தேன்” என்று சொல்லும் உமா, பட்டம் பெற்றதும் பணியில் சேரும் திட்டத்தில் இருக்கிறார்.
பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பை முடிக்கிறவர்களுக்கு வேலை வாய்ப்பில் உதவுவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை இந்தத் திட்டத்தில் இணைப்பதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி.. சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் இந்தப் பயிற்சியைத் தொடங்கவுள்ளது.
மே 2022 பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்குக் கடைசி நாள் ஏப்ரல் 25. விண்ணப்பிக்க: https://bit.ly/3KRzkwG