மனிதர்களை நேசித்த சார்லி சாப்ளினின் இறவாப் பேச்சு!

மனிதர்களை நேசித்த சார்லி சாப்ளினின் இறவாப் பேச்சு!
Updated on
3 min read

சார்லி சாப்ளின் இயக்கத்தில் ஹிட்லரைப் பகடி செய்து எடுக்கப்பட்ட ‘தி கிரேட் டிக்டேட்டர்‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் சர்வாதிகாரி ஹைன்கெல் (ஹிட்லர்). ஆஸ்டர்லீஷ் (ஆஸ்திரியா) நாட்டைக் கைப்பற்றிவிட்ட பிறகு, சர்வாதிகாரி உரையாற்றுவது போன்ற காட்சி. ஆனால், சர்வாதிகாரியின் உருவ ஒற்றுமை கொண்ட யூத முடிதிருத்துநரே அந்த மேடைக்கு வந்திருப்பார். அவரே அங்கு உரையாற்றுவார்.

திரைப்படத்துக்கான இந்த இறுதி உரையை எழுதுவதற்காக சார்லி சாப்ளின் பல மாதங்களைச் செலவிட்டார். இந்த உரை பல விமர்சனங்களை எதிர்கொண்டது. இருந்தாலும், எண்பதாண்டுக் கால வரலாற்றில், இந்தப் பேச்சின் முக்கியத்துவம் சற்றும் குறையவில்லை. மாறாக, அதிகரித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது. கெடுவாய்ப்பாக, இந்த இறுதி உரை இன்றைய சூழலுக்கும்கூட சாலப்பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது, நம் காலத்தின் – மனிதக் குலத்தின் பெரும் துரதிர்ஷ்டங்களுள் ஒன்று.

அந்த உரையின் எழுத்து வடிவம்

“எல்லாரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் பேரரசனாக விரும்பவில்லை. நான் யாரையும் ஆட்சிபுரியவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. யூதர்கள், மதிப்பிற்குரியவர்கள், கறுப்பினத்தவர், வெள்ளையர்கள் –என யாராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் உதவத்தான் நான் விரும்புகிறேன். நாம் அனைவருமே ஒருவர் மற்றொருவருக்கு உதவத்தான் விரும்புகிறோம். மனிதர்கள் அப்படித்தானே இருக்க முடியும்?

இந்தப் புவி வளங்கள் செழித்துக் கிடக்கிறது. அவற்றின் மூலம் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்...

வேகமாக முன்னேறுவது எப்படி என்று கண்டறிந்தோம். அதேநேரம், நம்மை நாமே மூடிக்கொண்டுவிட்டோம். அளவுக்கு மீறிய உற்பத்தியை இயந்திரங்கள் நமக்குத் தந்தன. ஆனால், அவை நமது தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை... நமது புத்திசாலித்தனம், அன்பற்றதாகிவிட்டது; பகைமை உணர்வை அதிகரிப்பதாக ஆகிவிட்டது...

நாம் அதிகம் சிந்திக்கிறோம், ஆனால், மிகக் குறைவாகவே உணர்கிறோம். இயந்திரங்களைவிட, அன்புடைமையே நமக்கு அதிகம் தேவை. புத்திசாலித்தனத்தைவிட, அன்பும் இரக்கமும்தான் அவசியம். இந்த குணங்கள் இல்லாமல் போனால், வாழ்க்கை வன்முறையாகிவிடும், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்...

ஓர் அமைப்பின் பலிகடாக்களாகிப் போன மக்கள்...சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள்... கொடும் சிறைகளில் தள்ளப்பட்டவர்கள்... நம்பிக்கை இழந்தவர்கள் –இப்படியான அப்பாவி ஆண்களும் பெண்களும் சிறு குழந்தைகளும் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்...

இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே... உங்களிடம் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன். நம்பிக்கை இழக்காதீர்கள். நம் மீது கவிந்துள்ள இந்தக் கொடுந்துயரம், சில மனிதர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மனிதக்குல முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சக்கூடியவர்கள். பேராசையும் வெறுப்பும் நிறைந்தவர்கள்... அவர்கள் மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக்கொண்டார்கள். அது மறுபடியும் மக்களின் கைகளுக்கே போய்ச் சேரும்! மனிதர்கள் மரிக்கலாம். சுதந்திர உணர்வு ஒருபோதும் மரிப்பதில்லை...

போர் வீரர்களே! மனிதத்தன்மை அற்றவர்கள், உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தியிருந்தார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து வந்தார்கள். நீங்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்பதையும் அவர்களே முடிவுசெய்து வந்தார்கள். ...உங்களுக்கு அவர்கள் ஆயுதப்பயிற்சி அளிப்பார்கள் ... அவர்கள் இயந்திரங்களாகிவிட்ட மனிதர்கள். இயந்திர மூளைகளையும் இயந்திர இதயங்களையும் கொண்டவர்கள்

நீங்கள் இயந்திரங்கள் அல்லர்! கால்நடைகளும் அல்லர்!......

நீங்கள் மனிதர்கள்! உங்கள் இதயத்தில் மனிதக்குலத்தின் மீதான அன்பு பொதிந்திருக்கிறது! நீங்கள் யாரையும் வெறுக்காதீர்கள்! நேசிக்கப்படாதவர்கள் மட்டுமே வெறுப்பார்கள் - அவர்கள் அன்பற்றவர்கள், செயற்கையானவர்கள். போர் வீரர்களே! அடிமைத்தனத்துடன் போர் புரியாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போர் புரியுங்கள்!

'கடவுளின் பேரரசு, மனிதனுக்குள் உறைந்துள்ளது'– என்று ஒரு வசனம் உள்ளது. புனித லூக்காவின் சுவிசேஷசத்தின் பதினேழாவது அத்தியாயத்தில் அது கூறப்பட்டுள்ளது. அது ஒரு மனிதனுக்குள் மட்டுமல்ல; அல்லது ஒரே ஒரு மனிதக்கூட்டத்தினுள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் அது உறைந்துள்ளது. அது உங்களிடமும் உறைந்துள்ளது. உங்களிடம் என்றால், யாரிடம்? ஆற்றல் கொண்டவர்களிடம்! புதிய கருவிகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்களிடம்! மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்களிடம்! வாழ்க்கையைச் சுதந்திரமானதாக, அழகு நிறைந்ததாக, அற்புத சாகசமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களிடம்! இந்த எல்லா ஆற்றல்களையும் கொண்ட உங்களைப் போன்ற ஒவ்வொருவருக்குள்ளும் அது உறைந்துள்ளது.

நாம் இந்த ஆற்றல்களை ஜனாயக வழிமுறைகளில் பயன்படுத்துவோம். அனைவரையும் ஒன்றிணைத்து, புதியதோர் உலகத்துக்காகப் போராடுவோம். அந்த உலகம், நாகரிகமானதாயிருக்கும்! அனைத்து மனிதர்களுக்கும் அது வேலைகளைத் தரும்! இளையோருக்கு எதிர்காலத்தைத் தரும்! முதியவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும்! இவற்றை எல்லாம் தருவோம் என்றுதான் அவர்களும் வாக்குறுதி அளித்தார்கள், அதிகாரத்தையும் பிடித்துக்கொண்டார்கள். மனிதத்தன்மை அற்றவர்கள் அவர்கள். பொய்யர்கள். தங்கள் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. எக்காலத்திலும் நிறைவேற்றப்போவதுமில்லை!

சர்வாதிகாரிகள், தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள், மக்களை அடிமைப்படுத்தி விடுகிறார்கள். இப்போது, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நாம் போராடுவோம்! வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஓர் உலகை, குறுகிய தேச எல்லைகளைக் கடந்த ஓர் உலகை உருவாக்கப் போராடுவோம்! அர்த்தம் நிறைந்த ஓர் உலகுக்காகப் போராடுவோம். அறிவியலும் முன்னேற்றமும் அனைத்து மனிதர்களையும் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லட்டும்; அத்தகைய ஓர் உலகுக்காக நாம் போராடுவோம்! ஜனநாயகத்தின் பேரால் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in