ஜலியான்வாலா பாக்: விடுதலைக்கு உயிர் தந்த போராட்டம்

ஜலியான்வாலா பாக் நினைவிடம்
ஜலியான்வாலா பாக் நினைவிடம்
Updated on
4 min read

ஜலியான்வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்தது. பஞ்சாபில் இந்தப் படுகொலை நடைபெற்ற இடத்தின் பெயர் ஜாலியன்வாலா பாக் என்று தவறாக உச்சரிக்கப்பட்டுவருகிறது. அதன் சரியான பஞ்சாபி மொழி உச்சரிப்பு ஜலியான்வாலா பாக்.

1914 முதல் 1918ஆம் ஆண்டுவரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது. போர் முடிந்தவுடன் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவுக்கான அமைச்சராக விளங்கிய மாண்டேகுவும் வைஸ்ராய் செம்ஸ்போர்டும் இணைந்து ஒரு விரிவான அறிக்கையை தயாரித்தனர். அவ்வறிக்கை 1918ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை முழுக்க முழுக்க இந்திய விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து அடக்குமுறை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாலர்கள் இந்தியாவில் உள்ள அரசு எதிர்ப்பு சக்திகளைப் பற்றி ஆராய்வதற்காக ஆங்கிலேய நீதிபதியான ரெளலட் தலைமையில் ஒரு குழுவை நியமித்தனர். இந்தியாவெங்கும் அரசுக்கு எதிரான புரட்சிக்குழுக்கள் ஏராளமாகச் செயல்பட்டு வருவதாகவும், அவை வன்முறை மூலம் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அக்குழுக்களையும் அவற்றின் செயல்திட்டங்களையும் முற்றாக முறியடிக்கும் விதத்தில் சில சிறப்புச் சட்டங்களை உடனடியாக இயற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ரௌலட் சட்டம்

இதன் அடிப்படையில் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கான புதுச் சட்டங்கள் மத்திய சட்டமன்றத்தில் இயற்றப்பட்டன. இச்சட்டம் ரௌலட் சட்டம் என்றே அழைக்கப்பட்டது. விசாரணையின்றி எவரையும் கைது செய்யவும், விசாரிக்கப்படாமலேயே ஒருவரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையிலடைக்கவும், எவரிடமும் காப்புத்தொகை கோரவும், தங்குமிடங்கள் குறித்து கட்டுப்பாடுகளை விதிக்கவும், செயல்படும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும், யாரையும் அனுமதியின்றி வீடுகளுக்குள் புகுந்து தேடவும் ரௌலட் சட்டம் வழிவகை செய்தது.

கடும் எதிர்ப்பு

இந்திய மக்கள் மத்தியில் இச்சட்டத்துக்குக் கொந்தளிப்புடன் கூடிய கடும் எதிர்ப்பு உருவானது. மத்திய சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற இந்திய உறுப்பினர்கள் இந்த அடக்குமுறைச் சட்டத்தை ஒரு மனதாக எதிர்த்தனர். இச்சட்டத்துக்குத் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நான்கு இந்திய உறுப்பினர்கள் தங்களது பதவியைத் துறந்தனர். எஞ்சியிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் இச்சட்டம் 1919 மார்ச் 18ஆம் தேதி டெல்லி மத்திய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

காந்தியின் போராட்டம்

அப்போது காந்தியடிகள் சென்னையில் இருந்தார். சென்னைக் கடற்கரையில் காந்தியடிகள் பங்கேற்ற ரௌலட் சட்ட எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 15,000 பேருக்குமேல் பங்கேற்ற அந்த உணர்ச்சிமிக்கக் கூட்டத்தில் ரௌலட் சட்டத்தைக் கண்டித்தும், சத்தியாகிரகப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் போராட்ட வழிமுறைகள் குறித்தும் காந்தியடிகள் பேசினார்.

1919 ஏப்ரல் 6ஆம் தேதியை தேசிய அவமான நாளாகவும் பிரார்த்தனை நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டுமென்று காந்திடியடிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டார். போராட்டத்தில் இறங்கக்கூடியவர்கள் முதல்நாள் இரவு உணவு உட்கொண்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்துக்கு ஏதும் உண்ணக் கூடாது. பொதுமக்களுக்கு இன்றியமையாதவை என்று கருதப்படுபவை தவிர, மற்ற அலுவலகங்களில் எல்லாம் அன்று தங்களது வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளும் மூடியிருக்க வேண்டும், அரசாங்க ஊழியர்களும் தங்களது வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும், அன்று நாடு முழுவதும் ரௌலட் எதிர்ப்புப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தனது போராட்டத் திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு 1919, மார்ச் 23ஆம் தேதி காந்தியடிகள் வெளியிட்டார்.

பெருகிய கொதிப்பு

தொடக்கத்தில் மார்ச் 30ஆம் தேதியே போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தி நாடு முழுவதும் சென்றுசேர்வதற்கு அவகாசம் வேண்டுமென்று கருதி பின்னர் ஏப்ரல் 6ஆம் தேதிக்குத் தள்ளிப் போடப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட செய்தி சென்று சேர்வதற்குள் மார்ச் 30ஆம் தேதியன்றே பல இடங்களில் போராட்டம் நடைபெற்றிருந்தது. டெல்லியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடைபெற்று போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காக டெல்லி விரைந்த காந்தியடிகளை டெல்லி நகரம், பஞ்சாப் மாகாணங்களுக்குள் நுழையக் கூடாது என்று அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.

டெல்லி துப்பாக்கிச் சூடு, நாடெங்கும் ஏவப்பட்ட அடக்குமுறை, காந்தியடிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகிய செய்திகள் காட்டுத்தீபோல் பரவி நாடே கொதித்துக் கிடந்தது.

அடங்காத போராட்டங்கள்

ரௌலட் எதிர்ப்புச் சத்தியாகிரகம் பஞ்சாபில் வலுவாக மையம் கொண்டிருந்தது. பஞ்சாபின் கவர்னர் மைக்கேல் ஓ டையர் கண்மண் தெரியாத அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். பாரிஸ்டராக விளங்கிய புகழ்பெற்ற சுதேசித் தலைவர் சைபுதீன் கிச்சிலு, டாக்டர் சத்யபால் ஆகிய இருவரும் பஞ்சாப் தேசபக்தர்களையும் மக்களையும் திறமையுடனும் எழுச்சியுடனும் வழிநடத்தினார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜலியான்வாலா பாக் மைதானத்தில் மார்ச் 30ஆம் தேதியே 30,000 பேர் பங்கேற்ற எழுச்சிமிக்க ரௌலட் சட்ட எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 6ஆம் தேதி இரண்டாம் முறையாக பஞ்சாபில் ‘ஹர்தால்’ முழுவீச்சில் நடைபெற்றது.
ஏப்ரல் 9ஆம் தேதி இந்துக்களின் பண்டிகையான ‘ராமநவமி’ அமிர்தசரஸில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்துக்களுடன் இஸ்லாமியர்களும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வுகள் அனைத்துக்கும் சைபுதீன் கிச்சிலு, டாக்டர் சத்யபால் ஆகிய இருவரும் தலைமையேற்று வழிநடத்தினார்கள்.

தலைவர்கள் கைது

அமிர்தசரஸ் நகரில் ரௌலட் எதிர்ப்பு சத்தியாகிரகமும் ஹர்தாலும் முழு வெற்றிபெற்றன. ஏப்ரல் 11ஆம் தேதி சைபுதீன் கிச்சிலு, சத்யபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு தர்மசாலா என்ற இடத்துக்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு தலைமறைவாக வைக்கப்பட்டனர்.
கைதான தலைவர்களின் நிலை என்னவென்றே தெரியாத மக்கள் ஆத்திரத்துடன் தெருக்களில் திரண்டனர்.


தலைவர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கையுடன் துணை ஆணையர் பங்களாவுக்கு மக்கள் திரள் புறப்பட்டது. காட்டாற்று வெள்ளம்போல் புறப்பட்ட மக்கள் கூட்டத்தின்மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் நால்வர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இந்தப் போராட்டமும் கலவரமும் அமிர்தசரசோடு நிற்கவில்லை, பஞ்சாப் மாநிலமெங்கும் பரவியது. போராட்டக்காரர்களும் பொதுமக்களும் கிடைக்கிற கற்களையெடுத்து அரசு அலுவலகத்தின் மீதும் அரசு வாகனங்கள் மீதும் வீசினார்கள். ஆத்திரத்தில் இவ்வாறு பல்வேறு எதிர் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டனர்.

திணறிய ஆட்சியாளர்கள்

வெடித்துக் கிளம்பிய போராட்டத்தைக் காவல்துறை மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத கவர்னர் டையர், ராணுவத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் டயரிடம் அமிர்தசரஸ் நகரை ஒப்படைத்தார். மக்களை அடக்க வேண்டுமெனில் அவர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்க வேண்டுமென்று கருதி தன்னுடைய நேரடிக் கட்டுப்பட்டிலிருந்த 475 பிரிட்டிஷ் வீரர்களும் 710 இந்திய சிப்பாய்களும் ஒன்றிணைந்த ஒரு ராணுவ அணிவகுப்பை அமிர்தசரஸ் நகரில் டையர் நடத்தினார்.

ஏப்ரல் 13ஆம் தேதியன்று சீக்கியர்களின் ‘வைசாகி’ பண்டிகை. அப்பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரிலுள்ள பொற்கோயிலில் புனித நீராடுவது வழக்கம். அதையும் பொருட்படுத்தாத டயர் ஏப்ரல் 13ஆம் தேதி காலையும் அமிர்தசரஸ் நகரில் ராணுவ அணிவகுப்பை நடத்தினார். அணிவகுப்பு 3 மணி நேரம் நகரை வலம்வந்தது. அணிவகுப்பின்போதே நகரின் முக்கிய இடங்களில் ‘தண்டோரா’ அடிக்கப்பட்டு அரசு அறிக்கையை உருது மொழியில் ஒருவர் படிக்க, இன்னொருவர் அதை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்துக் கூறினார்.

அச்சம் தவிர்த்த எதிர்ப்பு

டயரின் இத்தகைய அடக்குமுறை அறிவிப்புகளும் கெடுபிடி அணிவகுப்புகளும் மக்களிடத்தில் ஏற்கெனவே இருந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான உணர்வை உச்சத்துக்குக் கொண்டு சென்றனவே தவிர, டயர் எதிர்பார்த்ததுபோல் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. ஏப்ரல் 13இல் ஜலியான்வாலா பாக் மைதானத்தில் போராட்டக்காரர்களும் பொதுமக்களும் மாலை 4.00 மணிக்குக் கூடினார்கள். கூடியவர்கள் 6,000 பேர் என ராணுவம் அறிவித்திருந்தாலும் சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்ததாக மற்றவர்கள் மதிப்பிட்டுள்ளனர். 20,000 பேர்கூட இருந்திருக்கலாம் என்று இன்னும் சிலர் மதிப்பிடுகிற அளவுக்கு மிகப்பெரும் கூட்டமாக இருந்துள்ளது.

திடீர் துப்பாக்கிச் சூடு

இக்கூட்டம் நடைபெறாமலிருக்க எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் டயர் இறங்கவில்லை. கலைந்து செல்லுமாறு எச்சரிக்கவும் இல்லை. இக்கூட்டம் தொடர்பான டயரின் நடவடிக்கைகளை ஆய்வுசெய்தால், இக்கூட்டம் நடக்க வேண்டுமென்றும் இக்கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்க வேண்டுமென்றும், அந்நிகழ்வைப் பழிவாங்குவதற்கும் அடக்கி ஒடுக்குவதற்கும் பயன்படுத்த வேண்டுமென்றும் டயர் திட்டமிட்டிருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.

சைபுதீன் கிச்சிலு, டாக்டர் சத்யபால் போன்ற முக்கியத் தலைவர்கள் முன்கூட்டியே கைதாகியிருந்த சூழலில் அடுத்தடுத்த நிலையிலிருந்தவர்கள் அக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

ஜலியான்வாலா பாக்கில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் அவ்விடத்துக்கு சற்றும் எதிர்பாராத விதத்தில் டயர் தனது பட்டாளத்தோடு வந்து எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் மீது சரமாரியாகச் சுடுமாறு சிப்பாய்களுக்குக் கட்டளையிட்டார்.

தப்பிக்க வழியில்லாத தாக்குதல்

ஜலியான்வாலா பாக் மைதானத்துக்குள் செல்வதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் ஒரே ஒரு குறுகலான வழி மட்டுமே உள்ளது. ஆயிரக்கணக்கானோர் அக்குறுகிய பாதையில் ஒன்றாக வெளியேறுவது இயலாத செயல். எங்கிருந்து குண்டுமழை பொழிகிறது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்கும் மக்கள் சிதறி ஓடினார்கள். மைதானத்தின் நடுவில் இருந்த பாழுங்கிணறொன்றில் தங்களுக்கே தெரியாமல் கூட்டம் கூட்டமாக அப்படியே விழுந்து அக்கிணறே மனிதர்களால் நிரம்பியது.

தப்பிக்கும் ஆவேசத்தில் நேர் எதிரில் உள்ள சுவரைப் பிடித்துத் தொங்கியவர்களை முதுகில் குறிபார்த்து சுட்டதில் அப்படியே சுருண்டு விழுந்து பலர் மடிந்தனர். பலர் எந்த வகையில் முயன்றாலும் மைதானத்தைவிட்டு வெளியே போக முடியாத நிலையில் சரமாரியான குண்டுகள் துளைத்து செத்து மடிந்தனர்.

கூடியிருந்த கூட்டத்துக்கும் துப்பாக்கி ஏந்திச் சுட்டவர்கள் நின்ற இடத்துக்கும் இடையில் 40, 50 கெஜ தூர இடைவெளியே இருந்தது. 1,650 குண்டுகள் சில நிமிடங்களில் சுட்டுத் தீர்க்கப்பட்டன.

சுமார் 500 பேருக்கும் மேல் மைதானத்திலேயே செத்து மடிந்தனர். சுமார் 2,000 பேருக்கும் மேல் பலத்த குண்டுக் காயங்களோடு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

சடலங்களை எடுப்பதற்கோ அடிபட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கோ உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரத்த வாடையால் தெருநாய்கள், கழுகுகள் நள்ளிரவுக்குப் பிறகும் விடியற்காலையும் மைதானத்துக்குள் சுற்றித் திரிந்தன.

முதல் போராட்டம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ரௌலட் சட்ட எதிர்ப்பு சத்தியாகிரகம்தான் முதல் அகில இந்தியப் போராட்டமாக விளங்குகிறது. இப்போராட்டத்தின் மூலம்தான் அகில இந்திய அளவில் மக்களின் தலைவராக காந்தியடிகள் அறியப்பட்டார். அத்துடன், ஜலியான்வாலா பாக் மக்கள் எழுச்சியும் ஆங்கிலேயக் காட்டாட்சியும்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான இளம் தலைவர்கள் களம் இறங்குவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கிறது.


- கட்டுரையாளர்: எழுத்தாளர், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்.
(2019 இந்து தமிழ் திசை இயrபுக்கில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in