

யார்?: ஆர்வமூட்டும் 50 விடைகளுக்கான வினாக்கள்
l பால் பொண்ட்கே, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் தொடர்புக்கு: 044-28252663
மேகங்களுக்குப் பெயர் வைத்தவர் யார், டைபாய்டு மேரி எனப்பட்டவர் யார், பூஜ்யத்தைத் தோற்றுவித்தவர் யார் - இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு அன்றாடம் தோன்றும். மனிதர்களின் இந்த அறிவுத் தேடலுக்கு அறிவியல் விடையளிக்கிறது. இப்படிப்பட்ட சுவாரசியமான 50 கேள்விகளுக்கான விடைகளைத் தருகிறது இந்த நூல். அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள இந்த விடைகள் நமது அறிவை விரிவுசெய்யக்கூடியவை.
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
l வே. மீனாட்சிசுந்தரம், சிந்தன் புக்ஸ், தொடர்புக்கு: 94451 23164
மின்னியலின் தந்தையாகக் கருதப்படும் மைக்கேல் ஃபரடேயின் மற்றொரு முகத்தைப் படம்பிடித்துக்காட்டியுள்ளார் ஆசிரியர். மானுடத்தைப் பேணவே அறிவியல் பயன்பட வேண்டும், அழிவிற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காகப் போராடியவர் மைக்கேல் ஃபரடே. மூடநம்பிக்கைகளை விரட்ட பரிசோதனைகளை நிகழ்த்திக் காட்டி பாமரர்களுக்கும் அறிவியலைப் புரியவைத்தவர். கல்வி முறையில் மாற்றம் இல்லையென்றால் பகுத்தறிவற்ற-மானுட உணர்வற்ற படிப்பாளிகள் பெருகவே செய்வார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார்.
விண்வெளி மனிதர்கள்
l பெ. சசிக்குமார்-பா. அரவிந்த், பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 24332924
இஸ்ரோ மூலம் விண்வெளி அறிவியலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இந்தப் பின்னணியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே எல்லோருக்கும் அதிகமாக இருக்கிறது. விண்வெளிப் பயணங்கள், விண்வெளி அறிவியல், வெற்றி-தோல்விகள், படிப்பினைகள் குறித்து முழுமையான ஓர் அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல். இஸ்ரோவின் இரண்டு அறிவியலாளர்கள் தமிழில் நேரடியாக இதை எழுதியுள்ளது சிறப்பு.
ஸ்டீபன் ஹாகிங்
l கமலாலயன், மங்கை பதிப்பகம், தொடர்புக்கு: 94448 65204
ஒவ்வொரு நூற்றாண்டின் அடையாளமாகவும் தலைசிறந்த அறிஞர்கள் எனச் சிலர் இருப்பார்கள். அப்படி நாம் வாழ்ந்த காலத்தில் தோன்றிய மேதை ஸ்டீபன் ஹாகிங். பிரபஞ்சப் புதிர்களை அவிழ்ப்பதற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வெளிச்சம் பாய்ச்சியவர் ஹாகிங். 40 ஆண்டுகள் சக்கர நாற்காலியிலேயே வாழ நேர்ந்தாலும் அறிவியலுக்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. அதன் பின்னணியில் அவருடைய துணைவி ஜேனுக்கு இருந்த பங்கையும் இந்த நூல் விவரிக்கிறது.
நிலநடுக்கம் பற்றி நாம் அறிந்துகொண்டது எப்படி?; டைனோசர்களைப் பற்றி நாம் எவ்வாறு அறிந்தோம்?
l ஐசக் அசிமோவ், தமிழில்: கே.வி. பாலசுப்பிரமணியன், சந்தியா கணேசன், தூறல் புக்ஸ், தொடர்புக்கு: 98406 72018
ஐசக் அசிமோவ் சிறந்த அறிவியல் எழுத்தாளர். ஒருபுறம் அறிவியல் புனைகதையாளராக இருந்தாலும், பல்வேறு அறிவியல் கோட்பாடுகளை எளிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் எண்ணற்ற சிறு நூல்களை அவர் எழுதியுள்ளார். அந்த நூல்கள் ‘வியத்தகு அறிவியல்’ என்கிற வரிசையின்கீழ் ‘புராஜெக்ட் கலைடாஸ்கோப்’ மூலம் தமிழில் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன.