

தனி மரம் தோப்பாகாது. ஆனால், ஒரு வளமான மரம் நல்லதொரு தோப்பை மட்டுமல்ல, காட்டையே உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் புதுவைப் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் எஸ்.வி.எம். சத்யநாராயணா.
சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியை இவர் சாதித்திருக்கிறார். மிகக்கடினம் என்று கருதப்படுகிற முதுகலை இயற்பியல் சார்ந்த பாடங்களை ஏழை மாணவர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் 25 ஆண்டுகளாக கட்டணமின்றிப் பயிற்றுவித்துவருகிறார். இந்த வகுப்பு சண்டே கிளாஸ் (Sunday class) என்று அழைக்கப்படுகிறது. 1996ஆம் ஆண்டு சத்யநாராயணா முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது சென்னைப் பல்கலைக்கழக அணுக்கரு இயற்பியல் துறையில் இவ்வகுப்பை ஆரம்பித்தார்.
சமூகத் தேவை
சத்யநாராயணாவுக்கு ஏன் இப்படியொரு வகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது? இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் பாடங்களைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் 27-க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. நாடு முழுக்க இருக்கும் ஐ.ஐ.டிக்கள், சென்னை தரமணியில் உள்ள இந்தியக் கணித அறிவியல் நிறுவனம் (IMSc), பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (IISc), மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) போன்றவை அவற்றில் சில. இங்கே உதவித்தொகையோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென்றால் முதுகலை இயற்பியல் முடித்த பிறகு நெட் (NET), கேட் (GATE), ஜெஸ்ட் (JEST) என ஏதாவது ஒரு தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண்டும். இம் மாதிரியான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சிபெறுவது மிகக் குறைவாகவே இருந்துவந்தது, இன்றைக்கும் இருக்கிறது.
இந்தச் சூழலில்தான் 1996ஆம் வருடம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கோடைகால இயற்பியல் பயிற்சி முகாமுக்கு வந்த மாணவர்கள் அங்கே முனைவர் பட்ட மாணவராக இருந்த சத்யநாராயணாவின் பாடம் நடத்தும் திறன், கணக்குகளைத் தீர்க்கும் திறன் கண்டு, சென்னையில் வாரயிறுதி நாட்களில் இது போல பயிற்சி வகுப்புகளை நடத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இப்படித்தான் ‘சண்டே கிளாஸ்’ ஆரம்பித்தது. ஒவ்வொரு ஞாயிறும் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த வகுப்பு நடைபெறும்.
சாதித்த சமூக நீதி
1996 முதல் இன்று வரை எண்ணற்ற மாணவர்கள் இந்த வகுப்பில் இயற்பியல் கற்று நெட், கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் முனைவர் பட்டம் முடித்து ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சண்டே கிளாஸில் படித்த 122 முன்னாள் மாணவர்களிடம் அண்மையில் தகவல் திரட்டப்பட்டது. அவர்களில் 61 சதவீதத்தினர் முதல் தலைமுறை பட்டதாரிகள், 47.5 சதவீதத்தினர் கிராமப் பின்னணி உடையவர்கள், 21.3 சதவீதத்தினர் புறநகர் பகுதியையும், 31.1 சதவீதத்தினர் நகர்ப் பகுதியையும் சேர்ந்தவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட ஒரு இயற்பியல் வகுப்பினால் இந்தச் சமூக மாற்றம் சாத்தியமாகியுள்ளது. இதைவிடச் சமூகநீதி செயல்பாடு வேறென்ன இருக்க முடியும்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 11 மற்றும் 12 வகுப்புகளுக்குக் கொண்டுவந்த புதிய இயற்பியல் பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தில் சண்டே கிளாஸின் மாணவர்களாக இருந்து, தற்போது இயற்பியல் பேராசிரியர்களாக இருக்கும் நெய்னா முகமதுவும் நானும் பங்காற்றினோம்.
தனித்தன்மை
இந்த வகுப்பில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும், தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை.இயற்பியல் கோட்பாடு, நடைமுறையில் அதைப் பயன்படுத்தும் வழிகள், இயற்பியல் கணக்குகளைத் தீர்க்கும் நுணுக்கங்கள் என அனைத்தையும் விரிவாகவும் பொறுமையாகவும் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு இது. இவ்வகுப்பில் பங்கேற்கத் தகுதி, திறமை போன்றவை தேவை இல்லை. இயற்பியல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும்.
2008ஆம் ஆண்டுவாக்கில் ‘சண்டே கிளாஸ்’ பற்றிக் கேள்விப்பட்ட இந்தியக் கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பேராசிரியர் ஜி.ராஜசேகரன், ஐ.ஐ.டி. கான்பூரில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் எச்.எஸ்.மணி இருவரும் சண்டே கிளாஸில் பாடம் நடத்த ஆரம்பித்தார்கள். இருவருமே 80 வயதைத் தாண்டியவர்கள், புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர்கள். நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன், சந்திரசேகரிடம் கல்வி கற்றவர் ராஜசேகரன். நோபல் பரிசு பெற்ற அப்துஸ் சலாமிடம் கல்வி கற்றவர் எச்.எஸ்.மணி.
2021 டிசம்பர் 12 அன்று சண்டே கிளாஸின் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி சண்டே கிளாஸ் வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள். “ஒரு ஆசிரியரின் மிக முக்கியமான நோக்கம் ஒரு மாணவனின் மனத்தில் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனநிலையை உருவாக்குவதுதான். ஒரு ஆசிரியரால் மாணவனுக்குத் தேவையான அனைத்தையும் நடத்திவிட முடியாது. அதற்குக் காலவரம்பு காரணமாக இருக்கலாம். மாணவனுக்குத் தேவையான அனைத்துப் பாடங்களும் ஆசிரியருக்குத் தெரியாமலும் இருக்கலாம். ஆனால், மாணவனின் மனத்தில் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனநிலையை ஆசிரியர் உருவாக்கிவிட்டால், அவனுக்குத் தேவையானதை அவனே தேடிக் கற்றுக்கொள்வான்” என்று பேராசிரியர் சத்யநாராயணா கூறிய கருத்து, அனைத்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
சண்டே கிளாஸின் சாதனையை வெறும் தனிமனிதர்களின் முன்னேற்றக் கதையாக மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியாது. காலம்காலமாகக் கல்வியில் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை இந்தியாவின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் உட்காரவைத்த சமூக நீதி செயல்பாடாகவே கருத வேண்டும்.
கட்டுரையாளர், இயற்பியல் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: josephprabagar@gmail.com