

பள்ளியில் படிக்கும் மாணவன், மாணவிக்கு ரூபாய் 75 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த / நிரந்தரமாக முடக்க பாதிப்புக்கு உள்ளாகிய பெற்றோரைக் கொண்ட மாணவ, மாணவிகள் இந்த நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம். முன்னதாக இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவரின் பெயர், சேர்க்கை எண், நிதியுதவி கோரி விண்ணப் பிக்கும்போது பயின்ற வகுப்பு, மாணவரின் பிறந்த தேதி, தற்போது பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர், விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை பெயர், பெற்றோரில் தற்போது உயிரோடு இருப்பவரின் பெயர் மற்றும் முழு முகவரி, இத்திட்டம் சார்பாக வங்கியில் மாணவர் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் கணக்கு எண் ஆகியவை குறித்த விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி மூலமாகவோ, பள்ளித் தலைமையாசிரியர் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயனடையும் மாணவன், மாணவி தற்போது வேறு பள்ளியில் கல்வி கற்பவராக இருந்தால், மேற்கண்ட விவரங்களை தற்போது பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகப் பெற்று அளிக்கப்பட வேண்டும்.