

கரோனா பேரிடர் பெருந்தொற்றால் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையில் இப்போதுதான் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாகக் கல்வி கற்பதற்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பள்ளிகள் திறக்கும் அதே நேரத்தில் மாணவர் களின் மீது அதிகமான பாடச் சுமை ஏற்றாமல் அவர்களைத் திறம்பட கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம், குறித்த காலத்துக்குள் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தியாக வேண்டிய கட்டாயம், இன்னொரு பக்கம், குழந்தைகளுக்குப் பாடச் சுமையை ஏற்றாமல் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம். இப்படி ஆசிரியர்களுக்கு முன் உள்ள சவாலை அவர்கள் எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்ற கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் அடையாளம் காண வேண்டும் என்கின்றனர் ஆசிரியப் பணியில் நீண்ட அனுபவம் உள்ள ஆசிரியர்கள்.
விளையாடும்போது மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் நீண்ட நேரம் சோர்வடையாமல் விளையாடும் மாணவர்கள், படிக்க உட்கார்ந்தால் மட்டும் களைப்பு, பதற்றத்துடன் வெகு விரைவிலேயே சோர்வடைந்து பாடத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது எதனால் என்கிற கேள்விக்கான பதிலை அளிப்பது அறிதல்சார் விஞ்ஞானம் (Cognitive Science).
மூளைத்திறன் சார்ந்த அறிவியல்
ஒரு தகவலைப் படித்தவுடன் அதை நினைவில் பதியவைத்துப் பின் தேவைப்படும் நேரத்தில் அந்தத் தகவலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் மூளைத்திறன் சார்ந்த அறிவியல்தான் அறிதல்சார் விஞ்ஞானம். இது தத்துவம், உளவியல், நரம்பியல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இதன் மூலம் ஒருவர் எவ்வளவு துல்லியமாக முடிவெடுக்கிறார் என்பதை அறிந்திடமுடியும்.
ஒரு மாணவர் எவ்வளவு விரைவாகப் பாடத்தைப் புரிந்துகொள்கிறார், எவ்வளவு நேரம் கவனம் சிதறாமல் கற்றலில் ஈடுபடுகிறார், படிப்பிலிருந்து கவனத்தை சிதறச் செய்வது எது, கவனச் சிதறலில் இருந்து மாணவரைக் கற்றலில் எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பதற்கான பதில்களுக்கு அறிதல்சார் விஞ்ஞானம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பெரிதும் உதவுகிறது.
மூன்று புலன்கள்
தகவல் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு பார்த்தல், கேட்டல் என்பதோடு இல்லாமல் மாணவர்கள் கருவிகளின் துணைகொண்டு தொடுதல் உணர்வின்வழி வரைதல், கணித சூத்திரங்களை எழுதுதல் ஆகியவற்றின் மூலமாகக் கடினமான பாடத்தையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். கணினி பாகங்களைப் பொருத்துவதில் தொடங்கி, தவளையின் செரிமான உறுப்புகளைத் தெரிந்துகொள்வது வரை மெய்நிகர் ஆய்வகம் மூலம் மாணவர்கள் கற்றல் அனுபவத்தை ஈடுபாட்டுடன் பெறுகிறார்கள்.
வேறுபடும் கற்றல் திறன்
கற்றல் திறன் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு மாணவனின் கற்றல் திறனைப் போல் இன்னொரு மாணவனின் கற்றல் திறன் இருக்காது. சில மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும்போதே புரிந்துகொள்வார்கள். ஒருசில மாணவர்கள் பாடத்தில் இடம்பெற்றிருக்கும் கடினமான பகுதிகளைப் படக் காட்சிகள் மூலம் விளக்கினால் எளிதில் புரிந்துகொள்வார்கள். வேறு சிலர், அவர்களே எந்தவொரு விஷயத்தையும் செயல்முறை மூலம் செய்து பார்த்தே கற்றுக்கொள்வார்கள். ஒரு சில மாணவர்களுக்கு அவர்களின் கவனத்தைக் கற்றலில் குவிப்பதற்கே சிரமம் இருக்கும். ஒரு வகுப்பறையில் இப்படி பலதரப்பட்ட மாணவர் களுக்கும் ஏற்ற முறையில் அறிதல்சார் விஞ்ஞானத்தின் துணைகொண்டு ஆசிரியர்கள் பாடத்திட்டத்தையும் பயிற்றுவிக்கும் முறை யையும் வடிவமைத்தல் அவசியம் என்கிறார்கள் கற்பித்தல் பணியில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் கல்வியாளர்கள்.
தேவை கற்பவர்களுக்கேற்ற வகுப்பறை
கல்வியில் அறிதல்சார் விஞ்ஞானம் என்பது கற்பவர்களை மையமாகக் கொண்ட வகுப் பறையை வடிவமைப்பதில் உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்ற தனிப்பட்ட கற்றல் முறையை வகுப்பதற்கு அறிதல்சார் உளவியல், அறிதல்சார் தொழில்நுட்பத்தின் கலவை தேவைப்படுகிறது. செயல்திறன் சார்ந்த கற்றல் திட்டங்களை வகுப்பதில் இது ஆசிரியருக்கு வழிகாட்டும். பாடத்தை கண்டு, கேட்டு, உணர்ந்து படிக்கும்போது மாணவர்களின் பிஞ்சு மனத்தில் பசுமரத்தாணியாய் பதியும்.