தாய்மொழியில் படித்தோருக்குப் புதிய வாய்ப்புகள்

தாய்மொழியில் படித்தோருக்குப் புதிய வாய்ப்புகள்
Updated on
2 min read

தாய்மொழி படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்குத் திண்டாடத்தான் வேண்டும் என்று எண்ணிய காலகட்டம் உண்டு. ஆனால், இன்றைக்கு அந்தக் கூற்று மலை ஏறிப் போய்விட்டது. திறந்தவெளிப் பொருளாதாரத்துக்குப் பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வர்த்தக நிமித்தம் வரத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக இன்று மொழியியல் துறை வாய்ப்புகள் உலகம் முழுக்க வளரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்துகொண்டு ஒரு நிறுவனம் தெற்காசியாவின் மூலையில் உள்ள தமிழ்நாட்டில் தங்கள் பொருட்களை விற்க இங்குள்ள மொழியின் துணை தேவை. அப்படித்தான் தாய்மொழி படித்தோருக்கான வாய்ப்புகள் இங்கே பெருகத் தொடங்கின.

உதாரணமாக, கூகுள், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வளர்க்க அந்தந்த பிராந்திய மொழி தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அது மட்டுமல்ல, இங்குள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தைப் பற்றி, தயாரிப்புகளைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க ஆங்கிலம் மட்டும் போதாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கின்றன. அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மாநில மொழிகளின் உதவியையும் நாடுகின்றன.

மொழியியல் துறையில் இரண்டுவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. உள்ளடக்க எழுத்து (Content writing), உள்ளூர்மயமாக்கல் (Localisation) ஆகிய இரண்டு வகைகளில் இந்த வேலைவாய்ப்புகள் விரிகின்றன. உதாரணமாக, கூகுள் நிறுவனம், மேப், கூகுள் அஸிஸ்டண்ட் போன்ற சேவைகளை பிராந்திய மொழியில் தர, ஏற்கெனவே ஆங்கிலத்திலத்திலிருந்து இங்குள்ள உள்ளூர் மொழியில் மாற்ற மொழியியலாளர்ளின் உதவியை நாடுகின்றன. அவர்கள் அதைப் பழக்கத்தில் உள்ள தமிழில் மாற்றி உதவுகிறார்கள். உள்ளூர்மயமாக்கல் துறையில் கூகுள் அல்லது வி லோக்கலைஸ், லைன் ப்ரிட்ஜ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மறைமுகமாக கூகுளுக்காகப் பணியாற்றுகின்றன. அமேசான் போன்ற இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் இந்த உள்ளூர்மயமாக்கலுக்கு அறிஞர்களின் உதவியை நாடுகின்றன.

உள்ளடக்க எழுத்து என்பது சேவை நிறுவனம் அல்லது நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் எழுதுவது. உதாரணமாக புதிய வகை சமையல் பொருள் ஒன்றை ஒரு நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளைச் சந்தைப்படுத்த விளம்பரம் மட்டும் போதாது. அந்தப் பொருள் குறித்த சாதகமான அம்சங்களை எழுத்து வடிவில் மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதைப் பயன்படுத்தினால் வரக்கூடிய நன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை என்பது போன்ற அம்சங்களைச் சேர்த்து எழுதுவது உள்ளடக்க எழுத்து. மருத்துவம், கல்வி போன்ற சேவை நிறுவனங்களுக்கும் இப்போது இந்த உள்ளடக்க எழுத்தாளர்களின் தேவை இருக்கிறது.

உள்ளூர்மயமாக்கல், உள்ளடக்க எழுத்து ஆகிய இரண்டு துறைகளுக்கும் கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் முழுநேர ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. இது அல்லாது இந்த நிறுவனங்கள் தங்களது இந்தப் பணிகளுக்கான வீ லோக்கலைஸ், லைன் ப்ரிட்ஜ் போன்ற உள்ளூர்மயமாக்கல் நிறுவனங்களை நாடுகின்றன. இவர்களும் தங்கள் பணிகளுக்கான முழுநேர ஊழியர்களை அமர்த்துகின்றன. இது தவிர, சுயாதீன எழுத்துப் பணி (Freelancing) வாய்ப்புகளையும் இந்த நிறுவனங்கள் உருவாக்குகின்றன. தோராயமாக ஒரு சொல்லுக்கு ரூ.1 என்கிற விதத்தில் உள்ளூர்மயமாக்கல் நிபுணர்களுக்குச் சம்பளம் கிடைக்கிறது. இதை வீட்டிலிருந்தே செய்ய முடியும்.

உள்ளூர்மயமாக்கல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற முதலில் நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்வது அவசியம். மொழியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், அல்லாதவர்களும்கூட இதில் வாய்ப்புகளைப் பெற முடியும். அடிப்படையில் தமிழ் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதோடு, மக்கள் புழங்கு மொழியை அறிந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் பல பதங்களுக்கு இன்று ஆங்கில மொழியைத்தான் பயன்படுத்துகிறோம். உதாரணமாக எஸ்கலேட்டர் (Escalator) என்றால் நகரும் படிக்கட்டுகள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சொல் பெரும்பாலான மக்களின் புழங்குமொழியில் இல்லை. அதனால், அதை எஸ்கலேட்டர் என்றே தமிழில் பயன்படுத்தும் மரபு உள்ளூர்மயமாக்கல் துறையில் இருக்கிறது. இது நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். அதுபோல் உள்ளடக்க எழுத்துத் துறையில் தங்கள் நிறுவனத் தயாரிப்பு பற்றி மக்களுக்குப் புரிய வேண்டும். அது மட்டும்தான் இலக்கு. அதனால், அதிலும் மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் விரும்புவது இல்லை. இதனால், ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் தன்மையோடு தமிழின் பெருவழக்கைப் புரிந்துகொள்வதும் இந்தத் துறையில் வெற்றி பெறுவதற்கான பெரிய தகுதி. இந்த உள்ளூர்மயமாக்கலுக்காக ‘கேட்’ போன்ற தனி மென்பொருள்கள் இருக்கின்றன. அந்தப் பயிற்சிகளைப் பெறுவதும் இந்தத் துறையில் வெற்றிபெறத் துணை செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in