Last Updated : 19 Oct, 2021 03:00 AM

 

Published : 19 Oct 2021 03:00 AM
Last Updated : 19 Oct 2021 03:00 AM

நிராகரிப்பைக் கடந்து வென்றவர்!

பெற்றோர் தர்மலிங்கம், அமிர்தவள்ளியுடன் ரஞ்சித்.படம்: ஜெ.மனோகரன்.

இந்தியக் குடிமைப்பணி தேர்வில் தமிழில் தேர்வெழுதி அகில இந்திய அளவில் 750-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரஞ்சித். காது கேளாத மாற்றுத் திறனாளியான ரஞ்சித்தைச் சாதனையாளராக ஆக்கிய பெருமைக்கு உரியவர் அவருடைய தாய் அமிர்தவள்ளி. என்னதான் பணத்தைச் செலவழித்துப் படிக்கவைத்தாலும் பொழுது போக்குகளில் தங்களின் இளமையையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் இளைஞர்களுக்கு மத்தியில் தன்னுடைய தளராத முயற்சியாலும் பயிற்சிகளாலும் குடிமைப்பணி தேர்வில் வெற்றியை ருசித்திருக்கிறார் ரஞ்சித். படிப்படியாக அவர் முன்னேறிய தருணங்கள், மாணவர்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆவின் நிறுவன அதிகாரி தர்மலிங்கம், அமிர்தவள்ளி இணையரின் இரண்டாம் மகன் ரஞ்சித். ரஞ்சித்துக்கு இரண்டு வயது நெருங்கியபோதே கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரத்தில் உள்ள காது கேளாதோருக்கான கஸ்தூர்பா காந்தி வாய்மொழிப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துள்ளனர். ரஞ்சித்துக்காகவே அவருடைய தாய் அமிர்தவள்ளி சிறப்புப் படிப்பை அதே பள்ளியில் படித்து ஆசிரியராகி, மகனை ஆளாக்கியதோடு, தற்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்தியக் குடிமைப்பணி தேர்வைத் தமிழில் எழுதி இரண்டாவது முயற்சியிலேயே சாதித்த ரஞ்சித்திடம் பேசினோம்.

"காது கேட்காது என்பதால் மற்றவர்கள் வேகமாகப் பேசினால் உதட்டு அசைவுகளை வைத்துப் புரிந்துகொள்வது கடினம். கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும்போது, ஆசிரியர்கள் கூறும் பல வார்த்தைகள் எனக்குப் புரியாது என்பதை உணர்ந்த என் நண்பர்கள் பாடக்குறிப்புகளை எனக்கு அளித்து உதவினர். கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றேன். தொடக்கத்தில், பல தனியார் நிறுவனங்கள் காது கேளாத குறைபாட்டைக் காரணம் காட்டிப் பணி வழங்கவில்லை. இதுவே, அரசுப் பணியில் சேர வேண்டும் என்னும் என் எண்ணத்துக்குக் கூடுதல் வலிமை சேர்த்தது. முதலில் டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் படிக்கத் தொடங்கினேன். யுபிஎஸ்சி தேர்வில் காதுகேளாதோருக்கு வாய்ப்பு இருக்காது என நினைத்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர்தான், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து 2019 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரானேன்.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவனாக நான் இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்தக் கனவை நனவாக்க யுபிஎஸ்சி தேர்வு எழுதுவது என்று முடிவெடுத்தேன். சென்னையில் தங்கி, சங்கர் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்டவற்றில் பயிற்சிபெற்றேன். தமிழ்வழியில் கல்வி கற்றதால், தேர்வு எழுதும்போது எளிமையாக இருக்கும் என்பதால் தமிழைத் தேர்வு செய்தேன்.

முதலில் தமிழில் பயிற்சி பெற போதிய மெட்டீரியல்கள் கிடைக்கவில்லை. பின்னர், நண்பர்கள் மூலம் அடிப்படை மெட்டீரியல்கள் கிடைத்தன. தமிழ்வழியில் தேர்வு எழுதினாலும், அட்வான்ஸ்டு மெட்ரீயல்களைப் படிக்க ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். முழு அர்ப்பணிப்பு, தொடர் முயற்சி ஆகியவை இருந்தால் மொழி ஒரு தடை கிடையாது. தேர்வுக்குத் தயாராக தினமும் 12 மணிநேரம் வரை செலவிட்டேன்.

முடங்கிக்கிடக்க தேவையில்லை!

மாற்றுத்திறனாளிகள் பலர் படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு நிறைய அரசு வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென 4 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது. எனவே, அரசுத் தேர்வுகளுக்கு நேரம் ஒதுக்கித் தயாரானால் நிச்சயம் அவர்களால் தேர்ச்சிபெற முடியும். மாற்றுத் திறனாளிகள் பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதனால், அவர்களின் வாழ்க்கைக்குப் பொருள் இல்லாமல் உள்ளது. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால், சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு அவர்களால் நிச்சயம் உயர முடியும்” என்கிறார் ரஞ்சித்.

பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருள்!

“சங்கர் நினைவு அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதியான 25 மாற்றுத் திறனாளி மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறோம். அதில், பயிற்சிபெற்று வெற்றி பெற்றவர்களில் ரஞ்சித்தும் ஒருவர். விரைவாகப் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பேசுவதை எழுத்து வடிவில் மாற்றும் மென்பொருள் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகள் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் அகாடமியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் 100 சதவீத பார்வையற்ற, பூரணசுந்தரி எனும் மாற்றுத் திறனாளி மாணவி எங்களிடம் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்றார். அவருக்குத் தேவையான உதவிகள் அகாடமி மூலம் செய்து தரப்பட்டன. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களைப்போல வகுப்புகள் நடைபெறும். அதுதவிர, கூடுதலாகச் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முதன்மைப் பயிற்றுநர் சந்திரசேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x