Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

பள்ளிகள் திறப்பு: தேவை மனநிலை அட்டவணை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கப்படாததால் குழந்தைகளின் கற்றலில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்வதற்குப் பள்ளிகளை விரைந்து திறப்பது அவசியமாகிறது என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். குழந்தைகளின் கற்றலில் கவனம் செலுத்த வேண்டிய அதே சமயத்தில், மயிலிறகாகவே இருந்தாலும் அதையும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் அபாயம் இருப்பதையும் நாம் மறக்கக் கூடாது.

மெய்நிகர் கலந்தாய்வின் மூலம் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் களுக்குக் குழந்தைகளின் மனநலத்தைப் பேணுவது தொடர்பான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வது, கொங்குநாடு ஆசிரியர் பயற்சிக் கல்வி மையத்தில் பயிலும் வருங்கால ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் உளவியல் குறித்த வகுப்புகளை எடுப்பது எனத் தன்னார்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர் மனநல ஆலோசகர் நளினி. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் நேய பள்ளிக் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கிலும் குழந்தைகளின் உளவியல் குறித்துப் பேசியிருக்கும் நளினி, பள்ளிகளில் குழந்தைகளை அணுகுவதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து

1. குழந்தைகளின் பேச்சுக்குச் செவி கொடுங்கள்.

எல்லாக் குழந்தைகளின் சூழலும் ஒன்றுபோல் இருக்காது. தினமுமே ‘மூட் சார்ட்’ (மனநிலை அட்டவணை) உதாரணமாக, கோபம், சோகம், பதற்றம் என மனநிலைக்கு ஒரு பெயர் கொடுத்து, ஒரு நிமிடம் கவனிக்கவைத்து, அதைப் பற்றி பேசவோ, எழுதவோ, வரையவோ செய்து, மூச்சுப் பயிற்சி செய்து, இப்போது வகுப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வோம் என்று நடைமுறைப்படுத்தலாம். இப்படிச் செய்யும்போது குழந்தைகள் வகுப்பில் கவனம் செலுத்துவது எளிதாக இருக்கும். தேவைப்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு வசதி பள்ளியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

2. உங்கள் வகுப்புக்கு/பள்ளிக்கு ஏற்ற பாதுகாப்பு விதிகள்: மாணவர்களைக் கொண்டு ஆசிரியராகிய உங்களின் வழிநடத்தலோடு வகுப்புக்குள்ளும், பள்ளி வளாகத்துக்குள்ளும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் அட்டவணையைத் தயாரிக்கலாம். உதாரணமாக, கை கழுவும் நேரம், நண்பர்கள் எப்படி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளலாம், தும்மல் வந்தால் என்ன செய்ய வேண்டும், மாஸ்க்கை எப்படிச் சரியாக அணிய வேண்டும், எப்படி விளையாட வேண்டும், யாருக்கேனும் காய்ச்சல் வந்தால், உடல் நலம் குன்றியிருந்தால் என்னென்ன விதிமுறைகள், (அதற்கென உள்ள அறையில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல்) என T chart அட்டவணையைத் தங்கள் படைப்புத் திறனைப் பயன்படுத்தி புதுமையாகச் செய்யலாம். மாணவர்களே செய்யும்போது அதைப் பின்பற்றுவதும் எளிதாகும். மாணவர்களுக்கு அன்றாட வாழ்க்கை குறித்த அட்டவணையையும் தயாரிக்கச் சொல்லலாம். எழுவது, தன் சுத்தம், படிப்பது, விளையாடுவது, உணவுக்கான வேளை என ஒரு தினசரி அட்டவணையைப் பின்பற்ற வாழ்க்கை எளிதாகும்.

3. முன் மாதிரியாக இருங்கள்

ஆசிரியர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும்போது, மாணவர்களும் எளிதில் பின்பற்றி விடுவார்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் முன் மாதிரியாக இருங்கள். கோவிட் குறித்த உங்கள் சந்தேகங்களை, பயங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

4. கற்றுக்கொள்ளுங்கள்

கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது. இப்பொழுது ஆன்லைன் வகுப்புகள், சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படிக் கற்றுக் கொண்டோமோ அப்படியே கற்றலைத் தொடர்ந்த பயிற்சி ஆக்குங்கள்; வகுப்புகளை எளிமையாக்கி, புதிய முயற்சிகளைக் கைகொள்ளுங்கள்.

5. தன்னலம் பராமரியுங்கள்

எளிய மூச்சுப் பயிற்சிகள், உடற் பயிற்சிகள், சீரான உணவு, முன்னேற வைக்கும் வகுப்புகள், சக ஆசிரியர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், வேலை நேரம், தனிப்பட்ட நேரம் எனப் பிரித்து சமன் செய்து கொள்ளுதல், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுதல், பாடல், ஆடல், வரைதல் என மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மனநல ஆலோசகர் நளினி.

செய்யக் கூடாத ஐந்து:

1. முன்கூட்டியே அனுமானிக்காதீர்கள்

தற்போதைய கோவிட் சூழலில் சில மாண வர்கள் சொந்தங்களை இழந்திருக்கலாம், பொருளாதாரச் சூழல் மாறியிருக்கலாம், ஆன்லைன் வசதி குறைந்திருக்கலாம். எனவே, அவர்கள் வீட்டுப்பாடம், அசைன்மெண்ட் செய்யவில்லை என்றால் சோம்பல் என்றோ, திமிர் என்றோ அனுமானம் செய்துகொள்ள வேண்டாம். கேளுங்கள். தேவைப்படின் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

2. பாதுகாப்பில் அசட்டை வேண்டாம்

நாம் சில பேர்தான் இருக்கிறோம், பாது காப்பாக இருக்கிறோம், மாஸ்க் வேண்டாம், கை கழுவ வேண்டாம், சிறிய காய்ச்சல்தான் என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம். சொந்தக் கருத்துகளை பரப்ப வேண்டாம். தடுப்பூசி குறித்தோ, COVID குறித்தோ அறிவியல்பூர்வமற்ற சொந்தக் கருத்தையோ, வதந்திகளையோ பேச வேண்டாம். அரசாங்க அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

3. கடினமான ஆன்லைன் வீட்டுப்பாடம் வேண்டாமே!.

வீட்டுப்பாடம் ஆன்லைனில் மட்டும் செய்வது போலல்லாமல், வரைவது, எழுதுவது போன்றோ படைப்புத் திறன், கற்றல் இவற்றை ஊக்குவிப்பதுபோலவோ இருப்பது நல்லது. எப்பொழுதும் எளிமையே சிறந்தது.

4. ஒப்பீடு வேண்டாமே!

அந்த ஆசிரியர் அப்படியெல்லாம் செய்கிறார். நாம் இப்படிச் செய்கிறோம் என்று உங்களை யாரோடும் ஒப்பிட்டுகொள்ள வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த உபகரணங்களைப் பயன்படுத்தி, நீங்கள் சொல்லிக் கொடுப்பது சிறந்தது. நீங்கள் சிறந்த ஆசிரியர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம் . கற்றலைத் தூண்டும்விதமாக மாணவர்களுக்குக் கற்பித்தால் போதுமானது.

5. போதுமென்ற மனம்!

பள்ளி செல்வதை, பிரச்சினைகளைத் தவிர்க்கச் சொல்ல வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும் என்று பொதுவாக ஆலோசனை சொல்ல வேண்டாம். நம்பிக்கை கொடுத்தல் என்பது வேறு, உண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்தல் என்பது வேறு. மாணவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்த்தல், உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுதல், கோவிட் சூழலில் உள்ள நிச்சயமற்ற தன்மையிலும் நம்பிக்கையோடு இருத்தல், இல்லாததை நினைத்து கவலைப்படுவதைத் தவிர்த்து, இருப்பதை நன்றியோடு நினைத்துக் கொள்ளுதல் போன்ற திறன்களை கற்பிக்கலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x