

மாணவர்கள் வகுப்பறையில் கல்வியை மட்டும் பெறவில்லை. சமூகத்தின் இணைந்து இயங்குவதற்குத் தேவைப்படும் சமூக அறிவையும் வகுப்பறையில் தான் அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இந்த சூழலில், வகுப்பறை கற்றலுக்கு இணையவழி கற்றல் மாற்றாக முடியுமா?
அதன் போதாமைகளால் மாணவர்களின் கல்வி அறிவும் சமூக அறிவும் பாதிக்கப்படாதா என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு விடை காணும் முயற்சியாக, வகுப்பறை கற்றலுடன் ஒப்பிடுகையில், இந்த பெருந்தொற்று காலத்தில் இணையவழி கற்றல் மாணவர்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை மதிப்பிடும் நோக்கில் சமீபத்தில் ஒரு ஆய்வை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன் முடிவுகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கின்றன.
ஆய்வின் வழிமுறை
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய அம்சங்களை எல்லோரும் ஒரே மாதிரியான அளவில் ஏற்றுக்கொள்வது இல்லை. பொதுவாகவே, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கம் பலருக்கு இருக்கும். அந்த தயக்கத்தினால் ஏற்படும் மனத்தடையின் அளவைப் பொறுத்தே அந்த தொழில்நுட்பத்தை ஏற்கும் தன்மை அமையும். இந்த கரோனா காலத்தில், இன்றைய மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் இணையவழி கல்விக்கும் இது பொருந்தும்.
இணையவழி கற்றல் என்பது மாணவர்களின் விருப்பத்தை மட்டும் சார்ந்தது அல்ல. நம்முடைய சமூகத்தின் பல கூறுகளைச் சார்ந்தது. மாணவர்களின் இணையவழி கற்றலை ஏற்கும் திறன் பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. பாலினம், வசிக்கும் இடம், பொருளாதார பின்னணி, மதம், பயன்படுத்தும் மின்னணு சாதனம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை, வயது, கல்வி நிறுவனம் ஆகிய எட்டு காரணிகள் அவற்றில் முக்கியமானவை. இந்த எட்டு காரணிகளால் இணையவழி கற்றலில் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம். இந்தக் காரணிகள் ஏற்படுத்தும் தாக்கங்களும் இணையவழி கற்றலுக்கான தடைகளும் இந்த ஆய்வில் அலசி ஆராயப்பட்டு இருக்கின்றன.
ஆய்வின் முடிவுகள்
கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புற மாணவர்களிடையே இணையவழி கற்றலுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. 57.5 சதவீத நகர்ப்புற மாணவர்களும், 49.7 சதவீத கிராமப்புற மாணவர்களும் இணையவழி கற்றல், வகுப்பறை கற்றலைப் போன்று சிறப்பாக உள்ளது என்று தெரிவித்திருக்கின்றனர்.
நன்மைகளும் தீமைகளும்
இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில், 81 சதவீதம் பேர் கால அட்டவணையின் நெகிழ்வுத்தன்மையையும், 75.3 சதவீதம் பேர் வீட்டிலிருந்து படிக்கும் வசதியையும், 74.3 சதவீதம் பேர் உணர்வு சமநிலையையும் 67.8 சதவீதம் பேர் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தையும் இணையவழி கற்றலின் நன்மைகள் எனத் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்களில், 66.8 சதவீதம் பேர் கவனச்சிதறலையும், 54.5 சதவீதம் பேர் ஒத்திபோடும் இயல்பையும் இணையவழி கற்றலின் குறைபாடுகள் எனத் தெரிவித்து இருக்கின்றனர்.
கற்றலுக்கு முளைத்த சிறகுகள்
கற்றல் என்பது பள்ளி-ஆசிரியர்-மாணவர் என்கிற முக்கோணத்திற்குள் அடைப்பட்ட ஒன்றாகவே காலங்காலமாக இருந்துவருகிறது. இன்றைய நவீன தொழில்நுட்பமும் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கமும், இந்த முக்கோணத்தில் அடைபட்டு இருந்த கற்றலை விடுவித்துள்ளன. கற்றலுக்கு அவை அளித்துள்ள சிறகுகள், புது திசையைக் காட்டியுள்ளன. இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தால் இந்த கல்வி அமைப்பில் பல புதிய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த மாற்றுகளில், இணையவழி கற்றல் முக்கியமானது என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.