கல்வி நிறுவனத் தரவரிசையில் தமிழக நிறுவனங்கள்

கல்வி நிறுவனத் தரவரிசையில் தமிழக நிறுவனங்கள்
Updated on
1 min read

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி சென்னை). பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி), ஐஐடி மும்பை ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.

தேசிய கல்வி நிறுவன தரவரிசைப்படுத்தல் கட்டமைப்பு (National Institutionalist Ranking Framework) என்னும் அமைப்பின்கீழ் 2015-லிருந்து ஆண்டுதோறும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவருகிறது. கற்பித்தல் (Learning), ஆராய்ச்சி (Research), பட்டப்படிப்பின் விளைவுகள் (Graduation Outcomes), அனைவருக்கும் சென்றுசேரும் தன்மை (Outreach), கல்வி குறித்த பார்வை (Perception) ஆகிய ஐந்து அளவுகோல்களின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான தரவிசைப் பட்டியலில் மத்திய அரசின் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடிக்கள் முதல் பத்து இடங்களில் ஏழு இடங்களைப் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த பட்டியலில் மட்டுமல்லாமல் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலிலும் ஐஐடி சென்னை முதலிடம் பெற்றுள்ளது. சிறந்த கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி மூன்றாம் இடத்தையும் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி ஆறாம் இடத்தையும் சென்னை மாநிலக் கல்லூரி ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கோயம்புத்தூரில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி) ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மூன்றாம் இடத்தையும் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜவாஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி - ஆராய்ச்சி (ஜிப்மர்) எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை சவிதா மருத்துவத் தொழில்நுட்ப அறிவியல் கல்வி மையம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

அனைத்து பிரிவுகளுக்குமான முதல் பத்து இடங்களின் பட்டியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த பத்து கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர தமிழகத்தைச் சேர்ந்த 44 தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை முதல் பத்துக்கு பிந்தைய இடங்களைப் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in