தமிழ் வழியில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசான்

நலங்கிள்ளி
நலங்கிள்ளி
Updated on
2 min read

தமிழ் வழியாக ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஒரு யூடியூப் அலைவரிசையை தொடங்கியிருக்கிறார் எழுத்தாளர் நலங்கிள்ளி. சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘ஆங்கில ஆசான்’ என்னும் நூலின் தலைப்பையே இந்த யூட்யூப் அலைவரிசைக்கும் பெயராக வைத்திருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றப்படும் காணொலியில் நலங்கிள்ளி தமிழ் வழியாக ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார்.

தமிழ் வழியில் கல்வி கற்று மதுரை செல்லூர் நெசவுத் தொழிலாளர் களுக்கு 15 ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்ததன் வழியாக ஆங்கில ஆசிரியரானவர் நலங்கிள்ளி. தாய்மொழி அறிவின் மூலமாகவே எந்தவொரு அயல்மொழியையும் கற்க முடியும் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம். இந்தச் சிந்தனையின் அடிப்படையிலேயே தன்னுடைய ‘ஆங்கில ஆசான்’ நூலில் ஆங்கில இலக்கண விதிகளை எளிய எடுத்துக்காட்டுகளுடன் தமிழில் கற்பித்திருப்பார். 764 பக்கங்களைக் கொண்ட அந்த நூல், பத்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

அதில் ஒன்பது அதிகாரங்கள் காலத்துக்கும் (tense) அதன் பல்வேறு வகைகளுக்கும் ஒதுக்கப் பட்டிருக்கும். ஆங்கில இலக்கண விதிகள் அனைத்தையும் அவற்றின் பயன்பாடுகளையும் எளிய உதாரணங்களுடன் அந்நூலில் விளக்கியிருப்பார். தற்போது அவை அனைத்தும் இந்த யூடியூப் அலைவரிசை வழியாகக் காணொலியிலும் கிடைக்கப் போகின்றன. இருந்தாலும் காணொலி வழியில் கற்பிக்கப்படுவதை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் விரிவான வாசிப்புக்கும் ‘ஆங்கில ஆசான்’ நூலையும் வாங்குவது நல்லது.

காணொலிகளில் நலங்கிள்ளியே தோன்றிப் பலகையில் எழுதிக் காட்டி கற்பிப்பது, கற்றலை இன்னும் எளிதாகவும் நெருக்கமானதாகவும் ஆக்குகிறது. முதல் வகுப்பில் சிம்பிள் பிரசன்ட் டென்ஸ் (Simple Present Tense) என்றால் என்ன, அதன் பயன்பாடுகள் என்ன என்பதை 12 நிமிடக் காணொலியில் எளிதாக, சிறுவர்களுக்கு புரியும் வகையில் விளக்கியுள்ளார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் பலருக்குக்கூடப் பல வாக்கியங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் 'is' என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன என்பது தெரியாது. இந்தக் காணொலியைப் பார்த்தால் அனைவரும் அதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டுவிடலாம்.

முதல் காணொலி வகுப்புக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிமுகக் காணொலியில் நலங்கிள்ளி பேசிய பின்வரும் வாசகங்கள் முக்கியமானவை. இந்த அலைவரிசை மூலம் ஆங்கிலம் கற்க விரும்புவோர் மனத்தில் ஆழமாகப் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டியவை: “எந்த ஒரு அயல்மொழியைக் கற்பதும் கடினம்தான். ஒரு ஆங்கிலக்காரருக்கு தமிழ் கற்பது கடினம்தான். ஆங்கிலத்துக்குத் தனித்த கடினம் என்ற ஒன்றில்லை. அறிவைப் பெறுவதற்குக் கடுமையான உழைப்பே அவசியம். கடின உழைப்பு இருந்தால் ஆங்கில அறிவையும் பெறலாம். ஒவ்வொரு வகுப்பையும் நன்கு பயின்று, தேர்ச்சி பெற்ற பிறகே அடுத்த வகுப்புக்குச் செல்லுங்கள். அவசரப்பட வேண்டாம். பொறுமையாகக் கற்கலாம்”.

30 நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேசலாம் என்றெல்லாம் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், ஒரு அயல்மொழியைக் கற்பதன் சவால்களை விளக்கி, அவற்றை எதிர்கொண்டு வெல்வதற்கான பயிற்சியையும் அளிக்கிறது இந்த யூடியூப் அலைவரிசை. மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் காணொலிகள் அனைத்தையும் முழுமையாகப் பார்த்து உள்வாங்குவதும் உரிய பயிற்சிகளை மேற்கொள்வதும்தான். ஆங்கிலம் கற்பது சவாலானதுதான்; ஆனால், சாத்தியமில்லாதது அல்ல!

ஆங்கில ஆசான் யூடியூப் அலைவரிசைக்கான இணைப்பு: https://www.youtube.com/user/enalankilli

ஆங்கில ஆசான், நலங்கிள்ளி, கிழக்குப் பதிப்பகம், தொடர்புக்கு: 044 – 42009603

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in