

கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்னும் குறையாத நிலையில் இந்தக் கல்வி ஆண்டிலும் ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவது பெரும் சிக்கலாகியிருக்கிறது. பள்ளி இறுதிப் படிப்பான 12ஆம் வகுப்புக்கு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. பெருந்தொற்றின் தீவிரம் குறைந்த பிறகு 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்த விரும்புவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் பெருந்தொற்றுக் காலத்தில் தேர்வு நடத்தப்படக் கூடாது என்னும் கோரிக்கை மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் வலுத்துவருகிறது. மே மாதத் தொடக்கத்தில் நடத்தப்படவிருந்த சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வுகள் போராட்டத்துக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டன.
இறுதித் தேர்வுகளின் இன்றியமையாமை
பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் கல்வித் திறனை பரிசோதிப்பதைவிட உடல்நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதே நேரம் பள்ளி/கல்லூரிக்கான இறுதித் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை அடுத்த நிலைக்கு அனுப்புவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்னும் அச்சத்தையும் புறக்கணித்துவிட முடியாது. ஆக, தேர்வுகளை நடத்த புதிய வழிமுறைகளை யோசித்துச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தம் மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகளை இணையவழியில் நடத்துகின்றன. புத்தaகங்களைப் பார்த்து விடை எழுத அனுமதிக்கும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் கோவா ஐ.ஐ.டி. புதுமையான இணையவழித் தேர்வைத் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் இணையத்தில் வெளியாகி, பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
கேள்விகளுக்கும் மதிப்பெண்
ஐ.ஐ.டி. கோவாவின் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித் தாளில் இரண்டே கேள்விகள் மட்டுமே உள்ளன. இதில் முதல் கேள்வி, மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 30 விரிவுரைக் கையேடுகளிலிருந்து 60 மதிப்பெண்களுக்கான கேள்விகளை மாணவர்களையே தயாரிக்கச் சொல்கிறது. இதன்மூலம் மாணவர்கள் அந்த ஆண்டு பாடங்களை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது பரிசோதிக்கப் படுகிறது.
சக மாணவர்களுடன் விவாதித்துக் கேள்விகளைத் தயாரிக்கக் கூடாது. இரண்டு மாணவர்கள் ஒரே மாதிரியான கேள்விகளைத் தயாரித்திருந்தால் இருவருக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த முதல் கேள்விக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்கள் தாமே தயாரித்த கேள்விகளுக்குப் பதில்களை எழுத வேண்டும் என்பதே இரண்டாவது கேள்வி. இதற்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு நேரம் மூன்று மணி நேரம்.
உண்மையில் தேர்வாளர் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பதைவிடத் தாமே கேள்விகளை உருவாக்கி பதில்களையும் கொடுப்பது கடினமானது. பாடங்களை மிக ஆழமாகப் புரிந்துகொண்டிருந்தால் மட்டுமே கேள்விகளை உருவாக்கி, சரியான பதில்களையும் எழுத முடியும். பதில்களுக்கு மட்டுமல்லாமல் கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுக்கும் புதுமையான அம்சமும் ஐ.ஐ.டி. கோவாவின் இந்த யோசனையை மேலும் ஈர்ப்புக்குரியதாகவும் மற்றவர்கள் பின்பற்றத்தக்கதாகும் ஆக்குகிறது.
மாற்றுத் தேர்வு முறைகளின் தேவை
மாணவர்களை ஒரே இடத்துக்கு வரச்செய்து கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் மிக்கச் சூழலில் தேர்வு எழுத வைப்பதைவிட ஐ.ஐ.டி. கோவாவில் நடத்தப்பட்டதைப் போன்ற புதுமையான தேர்வு முறைகள் அதிக பயனளிக்கக்கூடும். இந்த முறையைப் பின்பற்றுவது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் பரிசீலிக்கலாம். அல்லது இது போன்று புதிதாக எதையேனும் யோசித்து நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு நேரக்கூடிய உடல்நல ஆபத்தைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் மாணவர்களின் கல்வித் திறனை இன்னும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் பரிசோதிப்பதற்கான மாற்றுத் தேர்வு முறைகளும் கிடைக்கும். இது மாணவர்களின் தேர்வு பயத்தைக் குறைப்பதோடு, தேசத்தின் ஒட்டுமொத்த கல்விச் சூழலுக்கும் நலன் பயக்கும்.