

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் முக்கியமான நிர்வாக மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையின் புதிய ஆணையராக கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வி ஆணையரே இயக்குநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பெறுவதோடு அவருடைய பணிகளையும் நிறைவேற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவருகிறது. 2019-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஆணையராக நியமிக்கப்படும் நடைமுறை தொடங்கப்பட்டது. மாறாக, பள்ளிக் கல்வித் துறையில் நெடிய பணி அனுபவம் பெற்றவர்களே இயக்குநர்களாக நியமிக்கப் பட்டு வந்தார்கள். இதுவரை இயக்குநருக்கே தலைமைப் பொறுப்பும் இருந்துவந்தது.
எதிர்ப்பு, ஆதரவு என இரண்டையும் பெற்றிருக்கும் இந்த நடவடிக்கை குறித்து நெடிய அனுபவம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்:
“கல்வித் துறை அனுபவம் பெற்ற இயக்குநர்தான் தலைமை வகிக்க வேண்டும்”
– பி.பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
பள்ளிக் கல்வித் துறையில் சில சீர்த்திருத்தங்கள் தேவைப்படுவதாக உணரப் படுகிறது. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தால் நிர்வாகரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பள்ளிக் கல்வி இயக்குநர் என்பது நிர்வாகப் பதவி மட்டுமல்ல. துறைக்குள் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் அவர்தான் தலைவரைப் போன்றவர். பாடத்திட்டம், பாடநூல்கள், மாணவர் சேர்க்கைக் கொள்கை, பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்படத் துறையில் நடக்கும் ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கும் அவரே பொறுப்பு. ஆசிரியராகப் பணியைத் தொடங்குபவர்கூட குரூப்-1 தேர்வு எழுதி படிப்படியாக முன்னேறி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் நிலைக்கு வருவதற்குள் குறைந்தபட்சம் 15-20 ஆண்டுகள் அவர் பள்ளிக் கல்வித் துறையில் அனுபவம் பெற்றிருப்பார்.
அடிப்படையில் ஆசிரியர் பட்டம் (பி.எட்)பெற்றிருப்பதால் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகள், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, அங்கு கற்கும் மாணவர்களின் நிலை உள்ளிட்ட அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆணையராக நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒரு சில ஆண்டுகள்தான் பதவியில் இருப்பார்கள். துறையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குள் வேறு துறைகளுக்கு அவர்கள் மாற்றப்படலாம். பொதுப் பணித் துறை, பொது சுகாதாரம் என முக்கியமான அரசுத் துறைகளுக்கு, அந்தந்த துறைகளில் அனுபவம் மிக்கவர்கள்தாம் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். பள்ளிக் கல்விக்கும் அப்படி இருப்பதே பொருத்தமாக இருக்கும்.
ஆணையரின் தலைமை தற்காலிகமானது என்றால் வரவேற்கலாம்”
சு.உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி ஆசிரியர், ‘நமது கல்விச் சிக்கல்கள்’ நூலின் ஆசிரியர்.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பல மோசமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்கள், நிதிகள் பலவும் பள்ளிகளை முழுமையாகச் சென்றடைவதில்லை. துறைக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இயக்குநர்கள்தாம் இத்தனை ஆண்டுகளாகத் தலைமை வகிக்கிறார்கள். ஆனால், முறைகேடுகள் அதிகரித்துக்கொண்டுதான் போகின்றன. ஓரளவுக்கு மேல் அவர்களால் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடிய வில்லை.
அவர்களுக்குப் பல்வேறு சங்கங்களின் அழுத்தங்கள், அரசியல்ரீதியான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. வெளியி லிருந்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இவற்றை மாற்றக்கூடும் என்கிற வகையில் தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கலாம். இப்போது ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., டெட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு உள்படப் பல முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தவர். அரசுப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் நன்மைகளைச் செய்துள்ளவர்.
ஆனால், நீண்டகால நோக்கில் கல்வித் துறை பிரச்சினைகள் விரைவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் துறைரீதியான அனுபவம் பெற்ற இயக்குநருக்கே தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கும் வழக்கம் தொடர்ந்தால், நம் கல்விக் கட்டமைப்பைப் பற்றித் தெரியாத வெளிமாநிலத்தவர் தலைமைப் பதவிக்கு வந்துவிடக்கூடும். எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.