

பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனம் (Defence Research & Development Organisation - டி.ஆர்.டி.ஓ) என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஏவுகணைகளும் போர் தளவாடக் கருவிகளும்தான். நமக்குத் தெரியாத டி.ஆர்.டி.ஓவின் மற்றொரு முகத்தை ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு 'போர்முனை முதல் தெருமுனை வரை' எனும் நூலில் அறிமுகம் செய்திருக்கிறார்.
“சார், ஏவுகணை, போர் விமானமெல்லாம் உருவாக்குகிறீர்களே, கொசுக்கடிக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கக் கூடாதா?'என்று ஒரு உதவித் தலைமையாசிரியர் கேட்ட கேள்விதான் இந்த கட்டுரைகளை எழுத எனக்கு தூண்டுதலாக இருந்தது. எனது நிறுவனத்தின் மக்கள் பயன் சார்ந்த ஆய்வுகளை அனைவருக்கும் புரியும்படி விளக்குவது மிக முக்கியம் என உணர்ந்தேன்" என்கிறார் வி.டில்லிபாபு. இந்து தமிழ் திசையின் காமதேனு வார இதழில் இந்த கட்டுரைகள் தொடராக வெளியாகின. இந்த கட்டுரைகளைத் தொகுத்து ‘போர்முனை முதல் தெருமுனைவரை' என்கிற பெயரில் ‘இந்து தமிழ் திசை' நிறுவனம் நூலாக வெளியிட்டுள்ளது.
போர்முனைக்குப் பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்திய ராணுவத்துக்கு மூளையாகச் செயல்படும் டி.ஆர்.டி.ஓவின் பணிகள் எப்படித் தெருமுனைவரை பயன் தருகிறது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் இந்த நூல் விளக்குகிறது. இலகு நடை கருவி (Light weight caliper), இதய வலைக் குழாய் (Coronary stent), சஞ்சீவினி என்கிற ஒலியியல் கண்டறியும் கருவி (Acaustic detector), உயிரி வேதி கதிரியக்க சுவாசக் கவசங்கள், டெங்கு நோய் சோதனை கருவி, குடிநீர் வடிகட்டி போன்ற ராணுவ ஆராய்ச்சியின் துணைப் பலன்கள் பல நம்மை வந்து அடைந்துள்ளன.
சியாச்சின் போன்ற பனிமலைகளில் பணிபுரியும் போர் வீரர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று பாதுகாப்பான கழிப்பிடம். அதற்கான தீர்வாக உருவானதுதான் உயிரிக் கழிப்பறை. உயிரி செரிமானத் (Bio Digester) தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த உயிரிக் கழிப்பறையை தயாரித்தோம். இதன்மூலம் பாதுகாப்பாக மனித கழிவை அகற்றுவதுடன், மீத்தேன் தயாரித்து எரிபொருள் உற்பத்தி செய்யவும் இவை உதவுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் ரயில் கழிப்பறைகளிலும் பயன்படுகிறது.
‘விஞ்ஞான சமையல் சாதம்’, ‘லேசர் அலைபாயுதே கண்ணா', 'வான் குடை போற்றுதும்...வான் குடை போற்றுதும்', ‘தண்ணீர்த் தொழில்நுட்பங்கள்', ‘காதுக்கு கார்போஜன்' சில கட்டுரைகளின் தலைப்புகள் ஈர்க்கின்றன. கட்டுரையும் கருத்துக்கும் வாசிப்புக்கும் இனிமையாக இருக்கிறது. தமிழில் மக்களுக்குப் புரியும்படியாக நவீன அறிவியல் ஆய்வுகளை விளக்கும்போதுதான் இளம் மாணவ மாணவியரை அறிவியல் ஆராய்ச்சியின்பால் கவர முடியும் என்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர்களுக்கும் இளம் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் ஆளுமைகளுக்கும் இந்த நூல் ஒரு கையேடு. இந்த கட்டுரைகளை வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் வாசித்து விவாதிப்பது, தமிழகத்தில் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவும். போர்முனை முதல் தெருமுனை வரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு,
இந்து தமிழ் திசை வெளியீடு, ₹180 சென்னைப் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண்கள் 246, 247 இல் இந்த நூல் கிடைக்கும். தொடர்புக்கு: +917401296562