

சமீபத்தில் வெளியான கல்வி, அறிவியல் துறை தொடர்பான நூல்களில் சில:
கல்வி அபத்தங்கள்
மு.சிவகுருநாதன்
தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் கழகத்தால் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டுள்ளதுடன் அந்தப் பிழைகளுக்கான திருத்தங்களையும் பரிந்துரைக்கிறது இந்நூல். குறைகளை மட்டும் சொல்லாமல், முந்தைய பாடநூல் வடிவமைப்புக் குழுக்களுடன் ஒப்பிட்டால் புதிய குழு செயல்படுத்தியிருக்கும் வரவேற்புக்குரிய மாற்றங்களையும் பாடநூல்களில் பாராட்டுக்குரிய அம்சங்களையும் இந்த நூல் அடையாளம் காட்டியுள்ளது.
தொடர்புக்கு பன்மை – 9842402010
மனதில் நிற்கும் மாணவர்கள்
பெருமாள்முருகன்
தமிழ்ப் பேராசிரியராக நெடிய அனுபவம் கொண்டவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். தன் பணிவாழ்வில் எதிர்கொண்ட மாணவர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இந்து தமிழ் ‘வெற்றிக்கொடி’இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளும் இத்தொகுப்பில் அடங்கும். நெடுங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்கள், அவர்களிடமிருந்த கல்வி, கலைத் திறன்கள், குடும்பச் சூழல், சமூக நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட தடைகள் போன்றவற்றை தனித்துவமான மொழிநடையில் நுட்பமான அவதானிப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்புக்கு காலச்சுவடு - 96777 78863
மார்க்ஸ் எங்கெல்ஸ் அறிவியல்
ஜெ.டி.பெர்னல்; தமிழில் - சாமி
அயர்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளரும் கம்யூனிச செயற்பாட்டாளருமான ஜான் டெஸ்மாண்ட் பெர்னல் கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் அறிவியல் பங்களிப்பு குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மனிதர்களின் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறினால்தான் அரசியல், அறிவியல், மதம், கலை முதலான மற்ற விஷயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவிய இந்த இருவருடைய சிந்தனைகளால் அறிவியல் உலகில் நிகழ்ந்த மாற்றங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு - சிந்தன் புக்ஸ் 94451 23164
தொகுப்பு : கோபால்
இஸ்ரோவின் கதை
ஹரிஹரசுதன் தங்கவேலு
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பல பாய்ச்சல்களை நிகழ்த்தி இன்று விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளுடன் போட்டியிடும் வல்லமைமிக்க நிறுவனமாக வளர்ந்து வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. உழைப்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம், துரோகம். சூழ்ச்சி, அழுகை ஆகியவற்றையும் அவற்றில் பின்னால் உள்ள அரசியல் காரணிகளுக்கும் இந்நூலில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு – கிழக்கு 044-42009603
கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி
சு. உமாமகேசுவரி
அரசுப் பள்ளி ஆசிரியரும் கல்வித் துறைச் செயற்பாட்டாளருமான சு.உமா மகேஸ்வரி பள்ளிக் கல்விச் சூழல் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்து தமிழ்த் திசையின் ‘காமதேனு’ வார இதழிலும் வேறு சில இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “கல்வி மீது ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இயங்கும் பலர் அரசையும் அரசின் கல்விக் கொள்கைகளையும் மட்டுமே குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கல்விக்கூடங்களில் நிலவும் கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் தீர்வை நோக்கி நகர முடியும்” என்கிறார் நூலாசிரியர்.
தொடர்புக்கு - பன்மைவெளி வெளியீட்டகம் 98408 48594